Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Thursday, March 01, 2012

மூங்கிலால் செய்த பரண்கள்..



எப்போதும் போல் இன்னும் நிறைகின்றது
பரணின் மீதான பாரங்கள்.
இறக்கி வைக்கும் ஒன்றினை தாண்டி,
ஏறும் எண்ணிக்கை மடங்காகி போக.
எப்போதும் அது தன்னை கிள்ளிக் கொள்ளும்
எப்போதும் அது சிரித்துக் கொள்ளும்
இன்னும் உடையாமல் இருப்பதை எண்ணி.
பாரங்கள் பற்றிய கவலைகள் ஒரு போதும் தீண்டாதிருக்க,
கனவுகளோடு பேசிக்கொள்ளும்.

கனதி தாங்கி வளையும் பரண்கள்
இன்னும் சுமப்பதையே சிந்திக்கின்றன.
உடைகின்ற வலிமை அதற்கில்லை என்ற,
பாரங்களின் நம்பிக்கை ஒரு போதும் பொய்ப்பதில்லை.
மூங்கிலாய் மாறுகின்ற பரண்களை எப்போதும்
அவன் சுமப்பவர்களுக்கே தருகின்றான்.

அனைத்துக்கும் நன்றி அவனுக்கும்,
அது சுமக்கும் சுமைகளுக்கும்.







Wednesday, July 13, 2011

கிட்டாதவை பற்றி அலையும் மனசு………..





தூரமாய் மிதந்தபடி அது செல்ல,
எதுவோ என்னை உந்தியதுபற்றிப் பிடி என,
கால்களின் வலு இறக்கும் வரை ஓடினேன்.
தூரங்கள் சமாந்தரமாக,
எனக்கு அதற்குமான பயணங்கள்
எப்போதும் அடையா இலக்காகிப் போனது.


Monday, September 27, 2010

பாழடைந்த வீடுகள்






பாழடைந்த வீடுகள் பற்றி எப்போதும் என்னுள் ஒரு திகில் உண்டு..
சிறு வயதில் கூடி விளையாடும் காலங்களில்,
சில் வண்டுகள் கத்தும் அப்பாழ்வீடுகள் பற்றி,
நிறைய கதைகள் உலவும் எம்மைச்சுற்றி..
பேய்கள் எனவும், கொள்ளிவாய்கள் எனவும்.

இப்போதெல்லாம்,
விரிசல் விட்டு வாய் பிளந்து நிற்கும் அப்பாழ்வீடுகளின்
சுவர்களினூடு ஓர் நிசப்தம் எப்போதும் கசிகின்ற உணர்வு..
திடீரென பிடரியில் அறையும் திகிலுடன் அவ்விடம் விட்டு நகர.
என்றோ
சிரிப்பொலிகளுடனும்,
வழிய வழிய கனவுகளுடனும்
வாழ்ந்தழிந்த முகமறியா மனிதர்கள் பற்றிய நினைவுகள் ஓடி மறைய,
எதுவென்று கூற முடியா உணர்வுகளோடு,நகர்ந்து செல்கின்றேன்
இன்னும் சில்வண்டுகள் என்னுள் சத்தமிட்டவாறே ..



Tuesday, June 22, 2010

சும்மா கிறுக்கியவைகள்

கனவுகளே!
தள்ளிச் செல்லுங்கள்
என் குழந்தை தூங்குகின்றது.

#################################################################################

இன்னும்
எனக்குள் பெயர்க்குழப்பங்கள்
நானொரு –
முன்னாள் காதலன்,
இந்நாள் கணவன்.

#################################################################################

என் நினைவுகள் 
ஊருகின்றன
நெடுஞ்சாலையில் 
ஓர் நத்தை போல..

#################################################################################

உன் கண்களின் மீது
சத்தியம் செய்கின்றேன்
இப்போதும்
வலியுடனே வாழ்கின்றேன்.

##################################################################################