Monday, December 20, 2010

பிள்ளையார் பிடிக்கப் போய்…..

மகனைப்பற்றிய கவலை போடியாரை அரித்துக்கொண்டே இருந்தது. “இவனை என்ன செய்வது? சுட்டுப்போட்டாலும் வருதில்லியே!!” என எண்ணிக்கொண்டே கடை வீதிப்பக்கம் வண்டியினை உருட்டிக்கொண்டிருந்தார்.

“ எத்தன பிரயத்தன்ங்கள் , முயற்சிகள் . சே! ஒன்றிலும் இவன் தேறின பாடில்லை..”

என அலுத்தவாறே தனக்குள் முணு முணுத்துக்கொண்டார்.. வண்டி, நணபர் மம்மாக்கரின் கடை முன்னே நின்றது.

“என்ன மகண்ட யோசினையோ?..” என சிரித்தவாறே போடியாரை நோக்கினார் மம்மாக்கர்.

“ஓண்டாப்பா. உனக்கு தெரியாததா! இவன் ஏ எல் எடுத்துட்டான். ஆனா இன்னும் இந்த சிங்களத்த பிடிக்கான் இல்ல பாத்தியோ” என்ற போடியாரிடம்,

“ அட விடுடாப்பா! சிங்களம் பிடிக்காட்டி என்ன விடன். பொடியன் வலு கெட்டிதானே!” இது மம்மாக்கர்.

“ கெட்டியா இருந்து என்ன செய்ற பெடியன் பாசைய பிடிக்கான் இல்லியே! நீயும் விசயம் தெரியாம கதைக்காய்.. இந்த காலத்தில சிங்களம் தெரியாம ஊர உட்டு போக ஏலுமா? இப்பவே சிங்களத்தால மட்டும்தான் பாட்டே படிக்கணும் என்கானுகள் இன்னும் கொஞ்ச நாளால தொழில் தேவ எண்டா சிங்களம் என்பானுகள்,  எதுக்கும் பாசை தெரியணுமெ! இல்லாட்டி எங்காவது ஓட வேண்டியதுதான்.” என பெருமூச்செறிந்தார் போடியார்.

போடியாரைப் பார்க்க மம்மாக்கருக்கு பாவமாக இருந்தது, மகன் பற்றிய கவலையில் இன்னும் கொஞ்சம் தலையில் வழுக்கை விழுந்தது போல தோன்றியது. கவலைகளுக்கு முடிவே இல்லை அல்லவா! ஒரு காலத்தில் பணம் பற்றிய கவலை. பிறகு குடும்பம், பிறகு.. என நீண்டு கொண்டே போகின்றது. இப்போது போடியாருக்கு மகனின் கவலை, அவன் எதிர்காலத்தினை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கல்களை தீர்ப்பது பற்றிய கவலை.

நீண்ட சிந்தனையில் மூழ்கி இருந்த மம்மாக்கரினை,“என்னடப்பா கடும் யோசினை” என்ற போடியாரின் குரலே உலகுக்கு கொண்டு வந்தது.

“ஒன்னுமில்ல போடியார் உங்கட பிரச்சனையத்தான்  யோசிச்சுக்கு இருந்தன்.”

நெடிய பெருமூச்சொன்று போடியாரிடமிருந்து பிறந்தது.

“ம்ம்ம்……… அவன சிங்கள கிளாசுக்கு அனுப்பி பார்த்தன். தனியா புத்தகம் எல்லாம் வாங்கி குடுத்தன், ம்ஹூம் ஒரு பலனையும் காணோம். ஒண்டும் ஏறுதில்ல எங்கிறான்.” என்றவாறு எங்கோ வெறித்துப்பார்த்தார்.

இதற்கு இப்படி கவலைப்படுகின்றாரே என்ற பரிதாபம் மம்மாக்கரின் கண்களில் தெரிந்தது. அதைப்புரிந்தவர் போல,

“ஒண்டுமில்லடாப்பா, நல்லா படிக்கிறவன், கெட்டிக்காறன், நாளைக்கு இந்த ஒரு குறையால தோத்துப் போயிடக்கூடாதே எங்கிற கவலதான். நாளைக்கு இத எண்ட தகப்பன் எனக்கு செய்யல்ல எண்டு சொல்லக்கூடாதில்லியா! அதான்” என்றார் போடியார்.

அதன் நியாயம் மம்மாக்கருக்கு சரி எனப்பட்டது.

“சரி போடியார், நான் ஒரு ஐடியா சொல்லட்டா”

என்ன என்பது போல மம்மாக்கரினை நோக்கினார் போடியார். கண்களில் ஆர்வம் பளிசிட்டது.

“ஒண்டும் இல்ல போடியார், நம்முட பக்கத்துவீட்டு பக்கீர் தம்பிட பையன், தொழில் செய்ய எங்கயோ சிங்கள ஊருக்கு போனவன், இப்ப வந்திருக்கான். சும்மா சிங்களம் கதைக்கான், சுப்பரா!” என்றவாறு அர்த்தத்தோடு நிமிர்ந்து போடியாரை பார்த்தார் மம்மாக்கர்.

போடியாருக்கு புரிந்துவிட்டது போல இருந்தது.

“ம்ம்ம்ம். நல்ல ஐடியாதான் ஆனா எங்க அனுப்புறது?” என்றவாறு தலையை சொறிந்து கொண்டார்..

“ ஏன் போடியார், உங்கட பக்கத்து வயல்காரன் அப்புகாமி

“ சா! சரியா சொன்ன நீ .. அவந்தான் சரியான ஆள். அவண்ட ஊரிலதான் தமிழ் வாசனையே இல்ல. எல்லாரும் சிங்களம்தான். மகன விட்டா ஒரு மூணு மாதத்தில பாசைய பிடிச்சிடுவான்” போடியாரின் குரலில் உற்சாகம் தெறித்தது.

“ரொம்ப நன்றி மம்மாக்கர்.. நான் வாறண்டாப்பா.. அப்புகாமிய சந்திச்சு மத்த ஒழுங்குகள செய்யோணும்..” என்றவாறே விரைந்தார் போடியார். மம்மாக்கருக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

****

“ என்னடாப்பா சுகமா இருக்கியா?” குரல் கேட்டு திரும்பிய போது போடியார் நின்று கொண்டிருந்தார். ஒருவாரம் கழித்து மம்மாக்கரின் கடைத்தெருவில், போடியாரின் பிரசன்னம்.

“ ஆ! போடியார் சுகமா? எங்க ஒருவாரமா காணோம்” என்றவாறு பொடியாரினை ஊடுருவினார் மம்மாக்கர்,

போடியார் இப்போது உற்சாகமாக இருப்பதாக மம்மாக்கருக்கு தோன்றியது.

“ மகன கொண்டு போய் அப்புகாமிட்ட விட்டுட்டன், பொடியன் இனி பாசைய படிச்சிடுவான்.” வார்த்தையில் பெருமிதம் தொனித்தது.

***

நாட்கள் உருண்டோடின. மாதம் நான்கினை தாண்டிவிட்டது.

போடியாருக்கு மகன் சிங்களம் பிடிச்சிருப்பான், இனி போய் கூட்டிவரலாம் என்று முடிவு செய்து புறாப்பட்டார்.

அப்பூகாமியின் கிராமம் இன்னும் பசுமை மாறாமல் அப்படியே இருந்தது.

இவருக்கு பழக்கப்பட்ட ஊர்தான். அப்புகாமியின் வீடு நோக்கி விரையலானார் போடியார். தெருவழியில் இருந்த தேனீர் கடையில் , “ காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?...” என ரேடியோ அலறிக்கொண்டிருந்தது. அட! இங்க தமிழ் பாட்டா! என்று ஆச்சரியத்துடன் அப்புகாமியின் வீட்டீனை நெருங்கும் போது, இருவர் தமிழில் பேசிக்கொண்டே போடியாரினை கடந்து சென்றனர். போடியாருக்கு இன்னும் ஆச்சரியமாகிப் போனது. ஏதோ ஒன்று புரிவது போல இருந்தது. சிந்தனையுடன் அப்புகாமியின் வீட்டிற்குள் பிரவேசிக்க எத்தனிக்கையில்,

“ ஆ ! வாங்கோ போடியார் , சுகமா இருக்கையளா? மகன் இஞ்ச நல்ல சுகமா இருக்கார். வாங்கோ வாங்கோ!..” என தமிழில் அவரை வரவேற்ற அப்புகாமிக்கு எதுவும் பதிலளிக்காமல் மூர்ச்சையானார் போடியார்..

அப்புகாமிக்கு எதுவும் புரியவில்லை உங்களுக்கு…………………………..



Wednesday, December 01, 2010

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் - உன் தயவினால்…




மெல்லத் தொடங்கும் சம்பாசனைகள் – நேரம் சுருங்க,
மீதி ஏதோ சொல்லவில்லை என்பது போல் முடியும்.
மீண்டும் தொடங்க எதுமின்றி
குரல் கேட்டு சிலிர்த்து,
மௌனங்கள் மட்டும் பேசி
காலங்கள் கரையும்..
ஏதுமில்லா இனிமைகளில் என் உலகு அமிழ
தொடர எண்ணும் வேட்கையுடன் விடைகொள்வாய்.

கண இடைவெளியில்
மீண்டும் தொடரும் – இனிமைகள்
இப்போது எழுத்தாக..
வாழ்த்தாக, காதலாக , சிரிப்பாக , உன் கனவுகளாக
நம் காதலின் ஜோதியில் எழுத்துக்கள் ஜொலிக்க,
உறங்க அனுமதிப்பாய் - ஓர் ஈர முத்தத்தோடு..

படுக்கை முழுக்க இனிமைகள், கனவுகளோடு இறைந்து கிடக்க,
காலைகள் உன் சுக விசாரிப்புகளோடு விடியும்.
இரவின் மீதி இனிமைகள் இன்றைய நாளுக்காய் கடத்தப்பட,
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன்
உன் தயவினால்…



Tuesday, November 30, 2010

வாழ்க்கையின் பயங்கள்




இருட்டோடு கலக்கின்றது என் கருமையும்
எதற்காக ஒளிய எத்தனிக்கின்றேன்?
இன்னும் புரியவில்லை.
நான் ஒரு கொலைகாரனா?
பாவியா? கோழையா?
எட்டாத தூரத்தில் எங்கோ ஒட்டி நிற்கும் வான் நோக்கும்
என் வினாக்களுக்கு அர்த்தம் இல்லை.
இன்னும் – பயங்கள் மட்டும் ஒட்டிக்கொள்ள
மீண்டும்,
ஒளிய எத்தனிக்கின்றேன்.
வாழ்க்கையின் புதிர்களுக்கு என்னிடம் விடையில்லை.
தேடும் எத்தனிப்புகள் பற்றிய கவலை இன்னும் தோன்றாமல்,


Monday, November 22, 2010

பலதும் பத்தும் - III

தமிழ்மன்றில் பாரதி என்ற புனைப்பெயரில் எழுதி வரும் முருக பூபதி அண்ணாவினை சந்தித்தேன். எவ்வளவு இனிமையன மனிதர்! எளிமையான அர்த்தமாக பேசுகின்ற விடயங்கள் இன்னும் அவரோடு பேச வேண்டும் என்று தோன்றியது. விருந்தோம்பலில் கூட மனிதர் எவ்வளவு அக்கறை. கொஞ்சம் சுகவீனத்துடன் இருந்தேன். கூடவே கூட்டிச்சென்று மருந்து வாங்கித்தந்த்திலிருந்து ( பங்கஜ கஸ்தூரி.. ) சங்கீத சைவ உணவகத்தில் பஞ்சாபி “தாலி”  சாப்பிட்டது வரை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே நாளில் முதல் அறிமுகத்தில் இவ்வளவு விருந்தோம்பலோடு கவனிக்க முடியுமா? இன்னும் நான் அவரின் கவனிப்புக்களில் இருந்து விலகவில்லை. பிரியாவிடை பெற்று அறைக்கு வந்து சேருமுன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேனா என அழைத்துக் கேட்டதில் இருந்த அக்கறை!  அண்ணா! அண்மையில் என்னை வியக்க வைத்த மனிதர்களில் நீங்கள்தான் பெஸ்ட். இப்படி ஒரு உறவினை ஏற்படுத்தித் தந்த மன்றிற்கு மீண்டும் ஒரு சல்யூட்.

nick vujicic என்ற மனிதர் பற்றிய வீடியோ ஒன்றினை காண நேர்ந்தது. கொஞ்ச நேரம் உறைந்து போய் உட்கார்ந்து விட்டேன். நாம் எந்தளவு அவநம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்பதை எண்ணும் போது வெட்கமாக இருந்தது. கைகளோ காலோ இல்லாத அந்த மனிதரின் தன்னம்பிக்கை மலைக்க வைக்கின்றது. பார்த்து முடிந்த பின் உலகில் முடியாது என்பது எதுவுமில்லை என்று எனக்கு தோன்றியது. நிச்சயமாக உங்களுக்கும் தோன்றும் இவ்வாறான மனிதர்களால்தான் கொஞ்சமாவது தன்னம்பிக்கை பிறக்கின்றது.


இலங்கையில் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் உரிமைகள், அவர்களது பிரச்சினைகளினை தீர்ப்பதற்காக ( ??? !@#@ ) ஆளுங்கட்சிக்கு தாவியுள்ளதொடு அமைச்சுப் பதவிகளினையும் பெற்றுள்ளது. இனி இலங்கை முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். போனமுறை மாறும் போதும் இதைத்தானே சொன்னார்கள் என திருப்பிக் கேட்க்ககூடாது..  அது போன மாசம்.. இது இந்த மாசம்..

புத்தகங்கள் பற்றி யாருக்கு தெரியும்/ கழுதைகள் அறியாதல்லவா? அதுதான் ஒரு முறை நடந்தது. மத்தியகிழக்கு நாடுகளின் பிரம்மச்சாரிகளின் ஒட்டுக்குடித்தன வாழ்க்கை பற்றி சொல்லத்தேவை இல்லை. அப்படி ஒரு அறையில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பெருமதி மிக்க புத்தகங்களினை, அறையில் வசிக்கும் இன்னொரு வெங்காயம் அறையினை சுத்தம் செய்கின்றேன் பேர்வழி என அள்ளி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தனக்கு சொந்தமில்லா பொருட்களை எதற்கு நாம் சீண்டுவான் என்ற பொதுப்புத்தி அற்று அனைத்து நூற்களும் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டன. எப்படி ஆத்திரம் வரும். ஆனாலும் எதுவும் செய்யமுடியாது! குப்பைத் தொட்டிக்குள்ளும் அவை இல்லை. யாரோ எடுத்துச்சென்றுவிட்டார்கள். ஒரு பகலின் அரைவாசியினை அக்குப்பைத்தொட்டி அருகே கழித்தும் அந்நூற்கள் கிடைக்கவில்லை. கழுதைகள் அறியாது நூற்களின் அருமை பற்றி..

வீதிக்கடவைகளினை கடக்க முயலும் போது, வாகன ஓட்டுனர்களின் பிரதிபலிப்புகளினை கவனிப்பது இப்போது எனக்கு ஒரு பழக்கமாக தொற்றிக்கொண்டுவிட்டது. சிரிப்பாக இருக்கின்றதா? இல்லை உண்மையாகத்தான் சொல்கின்றேன். மிக சுவாரசியமாக இருக்கும். சிலர், வாகனத்தினை மெதுவாக நிறுத்தி மிக்க பணிவாக கைகளினை உயர்த்தி காட்டுவர். அவர்களுக்கு நாமும் ஒரு புன்னகையோ , சிறு கையசைப்போ செய்துவிட்டு செல்வேன். சில நாட்களில் காலையில் இவ்வாறான நிகழ்வு நடக்கின்ற போது அன்றைய நாளே மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வேன். இன்னும் சிலர், ஏதோ மந்தைகளை நோக்குவது போல கைகளினை அசைப்பர். முகத்தில் தெரியும் அலட்சியம், அவசரம், வீதியினை கடக்கும் பாதசாரிகள் ஏதோ அற்பங்கள் என நோக்குவது போல இருக்கும். அன்றொருநாள் , ஒரு பிலிப்பினி காரின் உள்ளிருந்து எதோ ஆடு மாடுகளினை விரட்டுவது போல கையினை அசைத்துக் கொண்டிருந்தான் முகம் விகாரமாக இருந்தது. அவனைப்பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. இறங்கி வரமாட்டான் என்று உறுதி செய்து கொண்டே, பாதையினைக் கடக்கும் போது நடுவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு வந்தேன்… ஹா…..ஹா…….   



Sunday, November 21, 2010

அம்பானியின் ஆடம்பர மாளிகை

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஸ் அம்பானி. தனக்கென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 27 மாடிகளினை கொண்ட ஆடம்பர மாளிகையினை கட்டி முடித்துள்ளார். வரலாற்றில் தனிநபர் ஒருவர் கட்டிய அதிக செலவு மிக்க வாசஸ்தலம் இதுதானாம் ( ம்ம்….. ) அவரது குடும்பத்தில் உள்ள ஆறு பேர் வசிப்பதற்கான இவ்வீட்டினை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் எடுத்துள்ளன.

சாதாரண கட்டிடங்களினை பொறுத்தவரையில் 60 மாடிகளினை கட்டக்கூடிய உயரம் கொண்ட்தாக இம்மாளிகை இருந்தாலும், கூரைகளிஅனி உயர்த்தி 27 மாட்கள் கொண்டதாக இது கட்டுப்பட்டுள்ளது. மொத்த பரப்பு 37,000 சதுர மீற்றர்கள் !!!

ஒவ்வொரு அறைகளும் பிரத்தியேகமான  அலங்காரம் மற்றும் வசதிகளுடன் காணப்படுகின்றனவாம். 9 லிப்ட்கள்  மற்றும், உடற்பயிற்சிக்கூடங்கள் விருந்தினர் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளதோடு, முதல் மூன்று மாடிகளும் கார்கள் நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளதோடு, மேல்தளம் மூன்று உலங்கு வானூர்திகள் தரை இறங்குவதற்கான தளத்தினை கொண்ட்தாகவும் இருக்கின்றது.

அதோடு, அம்பானி மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகள் அதோடு அவரது தாயர் ஆகிய அறுவருக்கும் பணிக்கென இப்புதிய மாளிகையில் 600 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றன.

ம்ம்ம்…. பல்லிருக்கிறவன் பக்கோடா திங்கான்.. நமக்கென்ன????