Monday, October 24, 2011

இப்போது , அவனது முறை…

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அழைப்புக்கு வந்தான் அவன்,

“குட் மோர்னிங்க் சேர்! ஐ அம் கோலிங்க் ப்ரம் xxxxxxx கம்பனி, இஸ் தேர் எனி செக் போர் அஸ்?”

என்ற என் பணிவான குரலுக்கு

“ நோ “ என்றவாறு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசி அறைந்து சாத்தப்பட்டது.

நான் ஒரு கணக்காளன். சில வேளைகளில் இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கும் கிட்டிவிடுகின்றன.இது ஒன்றும் புதிதில்லை தான். ஆனாலும் சில வேளைகளில் இவாறான உதாசீனங்கள் ஆயசாத்தைத்தான் தருகின்றன.
என்ன செய்வது… பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். பொங்கினால் வீட்டில் உலை பொங்காதே!

எங்களது , Receivable கணக்காளர் வராத தருணங்கள் எனக்கு சத்திய சோதனைதான். பொறுமைக்கான பரீட்சை.. நிறைய நேரங்களில் சித்தியடைந்தாலும், இன்றைய சம்பாசனை என்னை மஞ்சள் விளக்கிற்கு தள்ளிவிட்டது.

மாதம் மூன்றாகியும் இன்னும் அவர்கள் தங்களது கொடுப்பனவை முடிக்கவில்லை என்பதால், எனது மனேஜர் மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து கத்திக்கொண்டிருந்தான் (ர்).

இதே கத்தலை கஸ்டமிரிடம் கத்திப்பார் என சொல்ல தோன்றினாலும் எதிர்கால தொழில் ஸ்திரம் கருதி விட்டுவிட்டேன். அது நடக்காது என்பது தெரியும்தானே! நேரத்திற்கு கொடுப்பனவுகளை தராவிட்டாலும் ஒரு நல்ல கஸ்டமரை இழக்க இவர்கள் விரும்பமாட்டார்கள்.

இன்றைய நாள்.. ஆற்றாமையுடனே விடிந்துள்ளது.

திடீரென, எனது இன்ரகொம் அலற,
எதிர்முனையில், “ ஹலோ சர்ஹூன், மிஸ்டர் xxx , ப்ரொம் XXXXXX கொம்பனி” என்றது பிலிப்பினியின் குரல்.

தொடர்பை இணைத்தேன்.

“ஹலோ சேர் , குட் மோர்னிங்க்,  ஐ அம் கோலிங்க் ப்ரம் XXXXX கம்பனி, இஸ் தேர் எனி பேய்மன்ட் ?” என்றது எதிர்முனை.

கம்பெனி பெயரினை திரும்பவும் உறுதிப்படுத்திய பின் , கணினி மூன்று மாதத்திற்கு மேல் நிலுவை உள்ளதாக காட்டியது. 
அதோடு ஒரு மாதம் முன்பு வரைந்த கசோலை இன்னும் எனது முகாமையாளனின் அனுமதிக்காக காத்திருப்பதாக மேலதிக தகவல் சொன்னது.

எதிர்முனைக்கு என்ன பதில் சொல்வது??

“ஹலோ”

“எஸ் ஸேர்” எதிர்முனை ஆவலுடன் உயிர்ப்பானது.

“நொற் யெற் ரெடி” என்றவாறு ரிசீவரினை அறைந்து சாத்தாமல், மெதுவாய் துண்டித்தேன்… இது மாத்திரம்தான் என்னால் முடிந்தது..

இப்போது , அவனது முறை…





Sunday, October 09, 2011

முட்டாள் !


மடைமைகளில் எப்போதும் நீ ஒட்டிக்கொண்டே நிற்கின்றாய்,
மரியாதைகளை வாய்பிளந்து எதிர் நோக்கி,
முட்டாள் !!
என்றாவது உன் மடைமைகளின் போலித்தனங்கள் வெளிவரும் போது
உன் தலை என்றுமே நிமிராது.
ஆனாலும் நான் இன்னும் உறுதியுடன் சொல்லமாட்டேன்
உனக்கான அந்நாள் நிச்சயமாக வருமென்று..

Tuesday, September 13, 2011

இறுதிக்கணங்கள்


இறுதிக்கணங்கள்

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..


Sunday, September 11, 2011

ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…


ஊருக்கு போயிருந்தேன்… சென்ற முறை போன போது இருந்த டென்சன் , அவசரம், இன்ன பிற வகையறாக்கள் இந்த முறை இல்லாததால், அந்த ஒரு மாத விடுமுறையினை விட இந்த 2 வார விடுமுறை மிக திருப்தியுடனும் மகிழ்ச்சியாகவும் முடிந்தது. நிறைய பொழுதுகளை குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. உம்மாவுடன் நிறைய நேரம் கதைக்க முடிந்தது. இப்படி பல “முடிந்தது”க்கள்.
 

ஊர்க்கதைகள்தான் நிறைய சொல்ல வேண்டி இருக்கின்றது. குளத்து மீன்கள் என்றால் நிறைய ஆசை. சப்புக்கொட்டி சாப்பிடுவேன். இம்முறை ஊரில் இருந்த போது, களப்பிற்கு சென்றிருந்தேன். சந்தையில் வாங்குவதை விட அங்கு உடனே பிடித்த மீன்கள் வாங்கலாம் என்ற காரணத்தையும் தாண்டி கொஞ்சம் லாபமாக வாங்கலாம் என்பதே முன்நின்றது. பெரிய மணலை மீன் ( உங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ தெரியாது ) தொடக்கம், சிறிய சிறிய மன்னா மீன் வரை கிடைத்தது. நான் மீன் வாங்கிய மீன் பிடிகாரர், கட்டாரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கின்றாராம். உழைப்பவர்கள் ஒரு போதும் ஓய்ந்திருக்க மாட்டார்கள் இல்லையா?


ஒன்றாக படித்த நண்பர்கள் – இப்போது வெகு தூரம் போய் விட்டது போல ஒரு பிரமை இன்னும் என்னை பீடித்த படியே இருக்கின்றது. அது உண்மைதான் என மனமும் நம்பத்தொடங்கிவிட்டது போலவே உணர்கின்றேன். ஒன்றாக திரிந்த நண்பர்களிடம், ஐந்தாறு வருடங்களின் பின் நமது நண்பனை காண்கின்றோம் எங்கின்ற ஒரு மலர்ச்சி இல்லை. ஏதோ ஒப்புக்கு ஒரு முகமனுடன், வேறு ஏதோ சிந்தனை ஆட் கொண்டவாறு விலகி விடுகின்றனர். குடும்பஸ்தர்களான அவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம். நாளை நானும் இப்படி மாறிவிடுவேனோ என எணிக்கொண்டேன்.


பெருநாளைக்கு பட்டாசு வெடிப்பது ஒரு அலாதி அனுபவம். சுமார் 4 வருடங்களின் பின் இந்த முறை கிடைத்தது. தம்பிமாருடன் சேர்ந்து வெடி வெடித்தது. எத்தனை மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஜாக்கிரதை குணம் திடீரென ஒட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தேன். முன்பெல்லாம் கையில் ராக்கெட் வாணம் வைத்து அனாயசமாக விட்ட எனக்கு, இப்போது அதை செய்வதற்கான துணிவு கடைசி வரையிலும் வரவே இல்லை. குழாய் தேடி, வீட்டு மொட்டை மாடியில் நின்று வெடித்தோம். வயதானால், முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிடுவோமோ என்னவோ!!!



எங்களூரின் பெருநாள் கொண்டாட்டங்கள் முன்பிருந்ததற்கும் இப்போதுள்ளதற்கும் நிறைய வித்தியாசங்கள். தற்போது ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக் கொண்டது போல ஒரு தோற்றம்.
பெருநாள் அன்று இரவு , என் தங்கை பற்பசை ட்யூப்பை வைத்து எதுவோ செய்து கொண்டிருந்தாள்.. என்ன என்றதற்கு, மருதாணி என பதில் வந்தது. பழைய நினைவுகள் என்னுள் பரவத் தொடங்கின.
               முன்பெல்லாம் நாளை பெருநாள் என்றால், ஆளுக்கு ஒரு பொலித்தீன் பையுடன் கிளம்பிவிடுவோம், - மருதாணி மரம் தேடி. அதைப்பறித்து வந்து, அரைத்து வாழை இலையில் குண்டு குண்டாக உருட்டி அம்மாக்கள் தயாராக்கி வைக்க, இரவுச்சாப்பாடு முடித்துவிட்டு தொடங்கினால், அம்மா அழகழாக கைகளில் மருதாணி உருண்டைகளை அழுத்தி இடுவார். காலை வரை அவை உதிராமல் இருக்க, கைகளை பொலுத்தீன் பைகளால் கட்டிக்கொண்டு படுப்போம், பெருநாள் காலையில், மருதாணி உதிர்ந்து கைகள் நிறைய முழுச் செம்மஞ்சள் பொட்டுக்களை காட்டிச் சிரித்து நிற்கும். 
            இதில், யாருடைய கை அதிகம் சிவத்திருக்கின்றது என்ற சண்டைக்கும் பஞ்சம் இருக்காது.பின்னர் கை கழுவி, பெருநாள் பலகாரம் உண்ணும் போது மருதாணி மணம் + பலகார வாசனை கலந்து வரும் ஒரு சுகந்தம்!!! அப்பா!! அதுதான் பெருநாள்..


நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!

இனி என்ன அடுத்த விடுமுறைக்கு செல்லும் வரை இதையே அசை போட்டுக் கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான் ……………………




Sunday, August 14, 2011

அதென்ன டெஸ்ட் கிரிக்கட்???




நேற்று இந்தியா டெஸ்டிலும் தோற்றுவிட்டது, தனது முதலிடத்தினையும் பறி கொடுத்துவிட்டது.

இன்னிக்கு ஆபிஸ்ல நல்ல அவல்தான், 

மாட்டினீங்கடா மலையாளிகளா! இதோ வர்ரன் என கறுவிக்கொண்டே ஆபிஸ் சென்றேன். 

ஏனிந்த கொலைவெறி என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் அவனுகள்ர ஆட்டம்தான், வேல்ட்கப் பறி கொடுத்ததன் பின் இவனுகள் போடும் ஆட்டம் சகிக்க இயலவில்லை. இனி கிரிக்கட்டில் இந்தியாவை எவனாலும் வீழ்த்த முடியாது அது, இது ன்னு வெட்டி ஜம்பம் வேற..

இருங்கடா வர்ரன்,
ஆபீஸ் நுழைந்தால், அனைவரும் வேலையில் படு மும்மூரம். 

காலையிலேயே இவ்வளவு அமைதியா ஒரு நாளும் இருந்ததே இல்லை.
வணக்கம் வைத்தாலும், கொம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே பதில் வணக்கம் சொல்றானுகள்.

..ஆஹா, பசங்க முன் ஏற்பாடுகளோடதான் வந்திருக்கானுகள், எப்பிடி ஆரம்பிக்கலாம்? என யோசித்துக் கொண்டே , எப்போதும் சந்தைக் கடை போலவே இருக்கும், விற்பனை பகுதியை பார்த்தால், வெறிச்சோடி கிடந்தது. ஒரே ஒரு பிலிப்பினி மட்டும் கணினியில் லேட்டஸ்ட் கணினி விளையாட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“ஹாய்!” என்றவாறு அவனிடம், “ எங்கே மற்றவர்கள் ? “ என வினவினேன், 

அனைத்து தன்மான சிங்கங்களும் தமது வாடிக்கையாளர்களை சந்திக்க போய்விட்டதாக பதில் கிடைத்தது.

அடப்பாவிகளா! காலையில், வெட்டி அரட்டை , அது இது ன்னு பொழுத போக்காட்டி விட்டு 10 மணிக்கு பிறகே , போறதா வேண்டாமா ன்னு யோசிக்கிற பயலுக, இன்னிக்கே காலங்காத்தாலேயே கெளம்பிட்டானுகளே!

சே! சூட்டோட சூடா பசங்கள கடுப்பேத்தலாம்னு பார்த்தா ஒருத்தனும் சிக்கமாட்டான் போலருக்கே! என்ன வாழ்க்கைடா!!! என என்னை நானே நொந்து கொண்டேன்.

“” காலையில் என்ன இந்தப்பக்கம், ஏதாவது விசயம் உண்டா” என்றவாறு என் சிந்தனையினை கலைத்தான் , அங்கிருந்த பிலிப்பினி.

பரவாயில்லை வந்ததுக்கு இவனிடமாவது சொல்லி கொஞ்சம் தேத்திக்குவோம், என்று எண்ணிக்கொண்டே,

“ நேற்று நடந்த டெஸ்ட் கிரிக்கட்ல இன்கிலாந்திடம் இந்தியா தோத்திடுச்சு, உனக்கு தெரியுமா?” என்றேன்.

“ஓ! அப்படியா “ என்றான் வெகு சுவாரசியமாக,

ஆஹா பயல் ரொம்ப சுவாரசியமாகிட்டான், விசயத்த இவனுக்கிட்ட சொல்லி இன்னும் அவனுகள கடுப்பேத்தலாம் எனும் நம்பியார்த்தனத்துடன்,

“உனக்கு தெரியுமா, அவர்கள் டெஸ்ட்டில் தனது முதலிடத்தையும் இழந்து விட்டார்கள்” என்று பூரிப்புடன் மேலும் தொடர எத்தனித்த என்னை குறுக்கிட்டு,

“கொஞ்சம் பொறு, எனக்கு, கிரிக்கட் ஒரு விளையாட்டு என்று தெரியும், அது என்ன டெஸ்ட்?? “ என்றான்.

கடுப்பு இப்போது என்னை தேடி வந்து கொண்டிருந்தது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!