Thursday, November 03, 2011

இனித்த பெருநாட்கள்


இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.


புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்


கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு, 
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!!

Wednesday, November 02, 2011

எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது.


நூலகங்கள் உலகினை திறந்துவிடும் சாளரங்கள்.

இப்போ அடிக்கடி நூலகம் பற்றி கதைக்கப்படுவதாலோ என்னவோ, எனக்கு எனது பழைய கால நினைவுகள் வந்துவிட்டன.

எங்களூர் நூலகம்,

கல்கியில் இருந்து சாண்டில்யன் வரை தெனாலி தொடங்கி அப்புசாமி கிழவர் வரை எனக்கு அறிமுகம் செய்தது. எங்களூர் நூலகம்தான். தந்தையின் கை பிடித்து நூலகம் சென்ற போது 10 வயதுதான். அன்றிலிருந்து இன்று வரை எங்களூர் நூலகத்தின் மீது ஒரு தீராக்காதல். 

இப்போதும் விடுமுறைக்கு ஊர் செல்லுகின்ற ஒவ்வொரு தடவையும் அங்கு சென்றுதான் வருவேன்.

அன்று மூன்று அறைகளை கொண்ட ஒரு வீட்டில்தான் எங்களூர் நூலகம் இருந்தது. முன் மண்டபம் பத்திரிகைகள். ஒரு அறை இரவல் புத்தக அறை. மற்றையது உசாத்துணைப் பகுதி. எப்போதும் நிறைந்து வழியும் பத்திரிகைப்பகுதியினைத் தாண்டித்தான், மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். 

அப்போதிருந்த நூலகர் ஒரு புத்தக பிரியர். நினைவு தெரிந்த நாட்களில் எப்போதும் அவரது கையில், கல்கியின் பொன்னியின் செல்வனோ, வியாச பாரதமோ இருக்கும். அவரது சிறிய கண்ணாடி அறைக்குள் எப்போதும் அதனோடே இருப்பது போல எனக்கு ஒரு பிரமை,

ஒவ்வொரு கால கட்டத்திலும் எங்களூர் நூலகம் எனக்கு வெவ்வேறு வர்சன்களாக பயன்பட்டன. ஆரம்பத்தில் சிறுவர் நூற்கள், வாண்டுமாமா நூற்களில் தொடங்கி ராணி காமிக்ஸ் வரை கிடையாய் கிடப்பேன். வருட இறுதிகளில் பழைய இதழ்களை விற்பனைக்கு வைப்பார்கள், கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கோகுலம், அம்புலிமாமா என வாங்கிவிடுவேன். அந்த உலகின் ரம்யங்கள் ரொம்ப அழகானவை.

அதைத்தாண்டி வந்த போது, பட்டப்படிப்பு பாடசாலைத் தேவைகள் அந்தந்த நூலகங்களில் நிறைவேறினாலும், மாலை நேரப் பொழுதை இனிமையாக்க எங்களூர் நூலகம்தான் எனக்கு துணை. குளம் சார்ந்த ஒரு பகுதியில் அமைவிடம் என்பதால் எப்போதும் ஒரு வித அமைதி சூழ்ந்திருக்கும். பழகிய முகங்கள். தொடர்ந்து வரும் நண்பர்கள் என வாசிகசாலையுடன் தொடர்புடையதாகவே சில நட்புக்களும் அமைந்துவிடும். 

தினசரி பத்திரிகைகளுக்கான கைப்பற்றல்களுக்கு நிறைய போட்டி நடக்கும். அன்றைய பத்திரிகை வந்தவுடன் முதன்முதலாக பிரிப்பதில் உள்ள ஒரு மகிழ்ச்சி… அது அனுபவித்தால்த்தான் தெரியும்.!

நூலகங்களின் நடைமுறைகள் அப்போதெல்லாம் மிக இறுக்கமாக எங்களூர் வாசிகசாலையில் பின்பற்றப்பட்டன. அமைதி!! என்பது எப்போதும் குடி கொண்ட ஒன்றாக இருக்கும். கதிரைகளைக் கூட இழுக்கத் தயங்கும் நண்பர்கள் கூட இருந்தனர். அதோடு , படித்த நூலகர், ஊழியர்கள் புத்தகங்களின் அருமை பற்றி அறிந்திருந்தனர்.

ஆனால், சென்ற முறை ஊரிற்கு சென்ற போது தவறாமல் செல்லும் எங்களூர் வாசிகசாலைக்கு சென்றேன். இப்போது இடம்மாறி மாநகராட்சி கட்டடத்தின் ஒரு மூலையில் தற்காலிகமாக இயங்கிக்கொண்டிருந்தது. மிக மெலிந்து போய்விட்டது. பழைய பார்த்து பழகிய முகங்கள் ஒன்றுமில்லை. ஒரு மீன் சந்தை போல எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்தனர். நூலகனும் ( ர் போட மனதில்லை..) யாரோ ஒருவருடன் கதையளந்து கொண்டிருந்தான். 

புதிய ஊழியர்கள். எங்களூர் அரசியல் வாதியின் சிபாரிசில் நியமனம் பெற்றவர்களாம். அனைவரும் அவருக்காக அடிதடி அரசியல் செய்ததற்கு அவர் கொடுத்த பரிசு – நூலக உத்தியோகத்தர் பதவி! எவ்வளவு பாரிய முரண். நிச்சயமாக அனைவருக்கும், நூலகமும் நூற்களும் இங்குதான் அவர்களுக்கு அறிமுகமாயிருக்கும் என்பது எனக்கு உறுதி.

நிறைய நேரம் நிற்க முடியவில்லை. திரும்பிவிட்டேன்.

எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது...



Tuesday, November 01, 2011

ஒரு பிரம்மச்சாரியின் விபரீத ஆசை...




 திடீரென அன்று ஒரு விபரீத ஆசை ஒன்று தோன்றியது

தோசை!!!!!! 

ஆமாம் தோசை சப்பிட வேண்டும், அதுவும் நானே சுட்டு சாப்பிட வேண்டும்

இதில் என்ன விபரீதம் என நீங்கள் யோசிக்கலாம். அபுதாபியில் பிரம்மச்சரியாக கண்டதையும் தின்று, ருசி மறந்து, பசிக்காக மட்டும் உண்டு வாழும் ஒரு ஆத்மாவுக்கு இது விபரீத ஆசை இல்லாமல் வேறென்ன??

ஆனா, நாமெல்லாம் ஓடுற ரயில ஒத்தக்கையால அதுவும் இடக்கையால நிறுத்தின ஆட்கள் அல்லாவா? விடுவமா!!!!! 

ஒரு சுப யோக சுப தினமான வியாழன் இரவு, “ ஆபரேசன் ஒப் தோசை ஆரம்பமானது

என்னவென்றாலும் நான் மட்டும்தானே. அதான் கோதாவில் குதித்தாயிற்று. தோசை சுட அடுப்பு சட்டி முக்கியமாக நெருப்பு என்பன தேவை என்ற அடிப்படை அறிவு ( ??? ) இருந்ததாலும், அவை கிடைக்கக்கூடியதாக இருப்பதால், தோசைக்கு வேறு என்ன தேவை என மூளையினை கசக்கியதில், தோசை மாவு என்று அசரீரி ஒலித்தது.

தோசை மாவு வாங்க, சுப்பர் மார்க்கட்டிற்குள் நுழைந்தால், இன்னும் குழப்பம். வகை வகையா, மாவுகள் எது தோசைக்கு என்பதை யாரிடம் கேட்பது?? தலையினை பிய்க்க தொடங்கும் போது, மார்க்கட் ஊழியர் வந்துவிட்டார். அவரிடம் இப்போ எந்த பாசையில கேட்பது என்ற பிரச்சினை. அனேகமாக அந்த மனிதர் இந்திக்காரராக இருக்க வேண்டும். எனது தோசை ஆசையில் ஹிந்தி ஒரு வில்லனா? என எண்ணிக்கொண்டே, எனது ஹிந்தி அறிவினை சபித்துக்கொண்டேன்.

கியா சாப்? “ என்றவரிடம்எனக்கு சொல்ல பதில் இல்லை.

பின்ன தோசை மாவு வேண்டும் என்பதை ஹிந்தியில் சொல்ல தெரிய வேண்டுமே. ஒரு வழியாக கையால் காலால் நடனமாடி புரியவைத்தபோது, அவன் சிம்பிளா,   “ஹா! தோசாஎன்றான்

அடப்பாவி, இதச்சொல்லவா இவ்வளவு ரிஸ்க் எடுத்தாய் என்ற அவன் கேவலப்பார்வைக்கு பதில் தராமல், தோசை மாவுடன் நடையினை கட்டினேன்.

தோச மாவு ரெடி, தோசக்கல், அடுப்பு எல்லாம் ரெடி, இனி ஆட்டம் ஆரம்பம். அபுதாபியே உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை 10 மணிக்கு ( இங்க வெள்ளி என்றால் இப்பிடித்தான் ) எனது தோசை சுடும் படலம் ஆரம்பமானது.

வீட்டில் அம்மா தோசை சுடுவதை பார்த்திருக்கின்றேன் என்ற தகுதியினை விட வேறென்ன தகுதி எனக்கு வேண்டும் இந்த தோசையினை சுடுவதற்கு. என்ற வேகத்தில் சட்டியினை பற்ற வைத்தாயிற்று. மாவும் ரெடி. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான். என்ன தைரியமா தொடங்கினாலும் கை கொஞ்சம் வெட வெடப்பதை தடுக்க முடியல. ஆனாலும் விர்ரதா இல்ல.. இன்னைக்கு தோசையா நானா? எனப்பார்த்து விடுவது என்ற முடிவுடன், முதலாவது கரண்டி மாவினை எடுத்து கல்லில் விட்டேன்

ஏதோ பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் ஒரு மாணவனின் படபடப்பு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்என்ற இசையுடன் மாவு தோசக்கல்லுடன் கதை பேசியது.. “சக்ஸஸ்.” மனதுக்குள் கூவிக்கொண்டேன். நிகழப்போகும் விபரீதம் புரியாமல்..

ஊற்றிய மாவு வட்டம் போலவும் இல்லாமல் .. வேறு எந்தவொரு வடிவம் போலும் இல்லாமல் யூகிக்கவே மிக கஸ்டமான ஒரு வடிவில் இருந்தது. சரி மாவு தோசையாகிவிட்டது என்ற முடிவில் கரண்டியினை விட்டு அதை வெளியே எடுக்க முயற்சித்தேன்ரொம்ப ரொம்ப ஐக்கியம் போல.. கல்லுடன் எனது முதல் தோசை ஒட்டிக்கொண்டது.

அடடா. முதல் முயற்சி தோல்வியில் முடிவதா என்ற பதை பதைப்பு தொற்றிக்கொள்ள, தோசையினையும் கல்லினையும் பிரித்துவிடுவது என்ற முடிவில் ஒரு தமிழ் சினிமா வில்லனாகிவிட்டேன்

கரண்டியினை விட்டு ஒரு எத்து எத்தியதில் பாதி தோசை முன் சுவரில் அப்பிக்கொண்டது. ஊற்றிய மாவு அதிகம் அதுதான் பிரச்சினை என ஒரு வழியாக சமாதானப்பட்டுக்கொண்டு, மீதியினையும் கழற்றி முடித்து, ரெண்டாவது ஆட்டத்திற்கு தயாரானேன்.

மாவினை கலந்து கரண்டியில் அள்ளும் போது, அறையில் இருந்து,

மச்சான் டைம் போயிட்டு, பள்ளிக்கு போகணும், குளிக்காம அங்க என்னடா பண்றாய்?” கத்திக் கொண்டிருந்தான் நண்பன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. அதுக்குள்ள ரைம் போயிட்டா!!!!!!!

ஒன்ன கூட முழுசா தோசையா பாக்கல்லியேடா!!!!!! 
என்ன கொடுமை இது!! 
இனி என்னத்த செஞ்சி.. என்னத்த..

நெடிய பெருமூச்சோடு, மீதி மாவினை, இனி தோசை சுடுவதென்றால் ஒரு நாள் லீவெடுத்துத்தான் சுடுவது என்ற உறுதியோடு தூக்கி கடாசிவிட்டு , பள்ளிக்கு போக தயாரானேன்.

அன்றைய பகல் பொழுது வழமை போல, பக்கத்து மலையாள சேட்டன் கடை சோற்றோடு இனிதே(!@!#@#@#!#$@$#) முடிந்தது.