Monday, May 31, 2010

அரசியலாகிப்போன இந்திய திரைப்பட விழா அல்லது அரசியலாக்கப்படாத செம்மொழி மாநாடு


ஜூன் 2ம் திகதி இலங்கையில் ஆரம்பமாக உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ் உணர்வாளர்களால் சத்தமாக ஒலிக்கப்படுகின்றது.

அதற்கு கூறப்படும் காரணம் தமிழர்களினை கொன்ற இலங்கையில் நடக்கின்ற நிகழ்வு , அதனை புறக்கணிக்க வேண்டும். சரி, இதை புறக்கணிப்பதால் எமக்கு என்ன நன்மை? சில மீடியாக்களுக்கு மெல்ல அவல் கிடைத்தது , இன்னும் சில தமிழர்களுக்கு உயிர்கொடுக்கும் அரசியல் வாதிகளுக்கு ஒரு சில நன்மைகளும் இருக்கலாம். அதை விடுத்து வேறொன்றும் ஆவப் போவதில்லை.

இப்புறக்கணிப்பானது, சர்வதேச கவனத்தினை இலங்கை பக்கம் திருப்பும் என ஒரு கருத்துக்கூறப்படுகின்றது. இப்போது இலங்கை மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளது போன்று முன்பு ஒரு போதும் இருந்ததில்லை. சர்வதேச சமூகம் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நடவடிக்கைகள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் என்பனவற்றில் ஓரளவு அக்கறாஇ செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. இது சர்வதேசத்தின் பிராந்திய நலன் சார் அரசியலின் வெளிப்பாடு என்றாலும், இலங்கைக்கு இதனால் கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டிருப்பதை அதன் நடவடிக்கைக்களிலிருந்து உணர முடிகின்றது, எனவே இவ்விழாப் புறக்கணிப்பு மூலம் ஏற்படுவதாக காட்டப்படும் எந்த ஒரு கவன ஈர்ப்பும் பெரிதாக ஒன்றினையும் பெரிதாக சாதிக்கப்போவதில்லை.

இதை விடுத்து தற்போது நடிகர்கள் மற்றும் திரை உலகம் சம்பந்தப்பட்ட அனைவராலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ( அறிக்கைகள் , புறக்கணிப்புக்கள் இன்ன பிற.. ) அனைத்தும் இதய சுத்தியுடன் தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடைபெறுகின்றதா என்ற வினா எல்லோர் முன்னாலும் எழாமல் இல்லை.
 
தென்னகத்தின் திரைப்பட ஊழியர் சங்கம் , இவ்விழாவுக்கு செல்லும் நடிகர்களின் திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்கப்போவதில்லை என்ற பெரிய குண்டு ஒன்று. இப்போது அனைத்து நடிகர்களுக்கும் கலக்கத்தினை உண்டு பண்ணியே இருக்கும். ஆகவே பெரும்பான்மையானோரின் புறக்கணிப்பு முடிவு தென்னிந்திய ரசிகர் சந்தையினை இழக்கக்கூடாது என்ற அக்கறையில் எடுக்கப்பட்டிருக்கும்.

தமிழர் பற்றி உரக்க வாய் கிழிய கத்தும் அனைவருக்கும் தெரியும். தமது கத்தலால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை என்பது. ஆனாலும் அவர்கள் அதனை விடமுடியாது அவர்களின் வாழ்வாதாரம் அதில்தான் தங்கியுள்ளது. இலகுவாக உணர்ச்சி வசப்படும் தமிழனை உசுப்பேற்றி தமது இருப்பினை பலப்படுத்துவதில் மிக்க கவனத்துடன் இவர்கள் இருப்பர். இதற்கு நேரடியாக வாழும் உதாரணங்களாக பல தமிழக அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களினை தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை.

இப்புறக்கணிப்பு கோசமும் அது போல ஒன்றுதான்.

யுத்தம் மிகக் கொடூரமாக நடந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களுக்காக தமிழ்த்திரையுலகம் உண்ணாவிரதம் இருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அதனால் கிடைத்தது ஒன்றுமில்லை. அதில் வீராவேசமாக பேசிய நடிகர்கள் இன்று அவரவர் பணிகளில் மும்மூரமாகிவிட்டனர். இப்போது நடப்பதும் அப்படித்தான். ( சினிமா மொழியில் சொல்வதானால்- சேம் சீன் But லொகேசன் சேஞ்ச்).
இதற்குள் இன்னொரு நியாயமான கேள்வியும் எனக்குள் எழுகின்றது. தமிழர்களினை கொன்றது சிங்களம். சரி.. அது கொண்டாடும் விழாவினை நாம் புறக்கணிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவ் இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற செம்மொழி மாநாட்டினை புறக்கணிக்க இப்போது கோசம் போடும் தமிழ் உணர்வாளர்களுக்கு தில் இருக்கின்றதா? சகோதரன் அகதியாகி, அவலத்துடன் மர நிழலிலும் கூடாரங்களிலும் மந்தைகள் போல கெட்டழிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழுக்கு விழா??? கேட்கும் போது உள்ளிருந்து ஒரு கொதிப்பு வரவில்லை???

ஆகவே அனைத்தும் பட்டவர்த்தனமான அரசியல் கோமாளிக்கூத்துக்கள். இவர்கள் இங்கு விழாப்புறக்கணிப்பு புறக்கணிப்பு என கத்திக்கொண்டிருக்க இலங்கையில் விழாவுக்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று விழா நடைபெற உள்ள சுகததாச அரங்கின் தொழில்நுட்ப வடிவமைப்பினை மேற்கொள்ள 50 தொழில்நுட்பவியலாளர்கள் விசேட விமானம் மூலம் இந்தியாவிலிருந்து சென்றுள்ளனர். இதைவிட வேறு என்ன சொல்லலாம்.

இது ஒன்றும் வேண்டியதில்லை, இப்போது இலங்கைத்தமிழர்களின் முக்கிய தேவை வாழ்வாதாரம் அதற்கு இத்திரையுலகம் ஏதாவது செய்யுமா? யாராவது முனைவார்களா? தமிழர்களுக்காக விழாப்புறக்கணிப்புக்கு பக்கம் பக்கமாக அறிக்கை விடும் முக்கியஸ்தர்கள். இதற்காக ஏதாவது செய்வார்களா? நிச்சயமாக செய்யமாட்டார்கள்.

ஆனால், இலங்கைத்தமிழர்களின் அவல நிலைக்கு மௌன சாட்சியமாகிப்போன முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த திரையுலகம் திரளும். அதை காசு கொடுத்துப்பார்த்துக்கொண்டோ அல்லது TV முன் உட்கார்ந்து கொண்டோ தமிழ் ரசிகன் ரசித்தவாறு விசிலடித்துக் கொண்டிருப்பான்.  

நமக்குத்தான் ஞாபக மறதி தேசிய வியாதியாச்சே.




புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )


 ( இன்றைய புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு இதனை பதிகின்றேன். மின்னஞ்சலில் இதனை அனுப்பிய நண்பருக்கும் , இவ்வாக்கத்தினை எழுதிய அம்முகமறியா நண்பருக்கும் என் நன்றிகள்..)

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

1.
பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

2.
நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

3.
நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.

4.
சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5.
சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

6.
சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

7.
எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

8.
சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

9.
பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

10.
சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.

11.
அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.

12.
தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

13.
இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.

14.
வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.

15.
எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.

16.
வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.

17.
புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.

18.
மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.

19.
சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

20.
வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

21.
சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.

22.
வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.

23.
மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.

24.
சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.

25.
நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை

Sunday, May 30, 2010

இந்தியா வென்று விட்டது : இனி ரெண்டு நாளைக்கு – முடியல……….


உண்மைதான். இவ்வனுபவத்தினை அனேகமான மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் பணிபுரியும் அலுவலகத்திலும் இந்திய நண்பர்கள் பலர் பணிபுரிகின்றனர். பெரும்பான்மையான நண்பர்களுக்கு – நட்பு என்பது கிரிக்கட் இல்லாத வேளைகளில் மட்டும் என்பது போல எனக்குத்தோன்றும். இந்தியா தோற்று விட்டால், ஏதோ கப்பல் கவிழ்ந்த மாதிரி மூஞ்சி விடியவே விடியாது.அதிலும் இலங்கையுடன் தோற்று விட்டதா? கிழிஞ்சது போ………… ஏதோ பரம விரோதிய பார்ப்பது போல பார்ப்பர்.

“ டேய் அவன் வெண்டா, தோற்றா நான் என்னடா செய்ற வெண்ண..” என கத்த வேண்டும் போல இருக்கும். ம்ம் .. காலக்கொடுமை.. வேற என்னத்த சொல்ற…
“ஏண்டா இப்பிடி இருக்கீங்க” என பரிதாபப்பட்டுக்கொள்வேன்.

எனது நாட்டினரின் நிலை வேறாக இருக்கும். “ இண்டைக்கு இலங்கை தோற்றுவிட்ட்து” என்றால், என்ன மாட்ச் எங்கே நடக்குது என்பர், இவ்வளதுதான் எம்மவர்களின் கிரிக்கட் பற்றிய ஆர்வம். இதையும் விட மிஞ்சி மிஞ்சிப்போனால் – யார் யார் எத்தனை ரன், விக்கட் எனபன பற்றியுடன் முடிந்து விடும்,

தற்போது நடந்து கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டியின் முதல் போட்டிக்கு அடுத்த நாள் அதாவது நேற்று, எங்கள் அலுவலகம் – ஒரு மரண வீடு போல இருந்தது. எனது இந்திய சக பாடிகள் முகம் விடியவில்லை. சிம்பாவேவுடன் இந்தியா தோற்றுவிட்ட்து. இந்திய வீர்ர்கள் அனைவருக்கும் அர்ச்சனை நடந்து கொண்டிருந்த்து. நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் ( வெளியே சிரித்தால் உரிச்சு தொங்க விட்டுடுவானுக,,,,) வலிய வந்து என்னிடம் – புது டீம், அதான் தோற்றுச்சு.. சேவாக் இல்ல , டோனி இல்ல அது இது என்று ஆயிரம் விளக்கங்கள். இதுக்கு நான் எதுவுமே கேட்க வில்லை. வேணாண்டா அழுதுடுவன் எங்கிற நிலையில் நான்..

இதோ இன்று, மாதக்கடைசி என்றால் எனது தலை உருளும். மேசையில் இருக்கும் கோப்புக்களினை பார்க்கும் போதே வயிறு கலக்கும். அதற்குள் மூழ்கிப்போயிருக்கும் போது, எனது இன்ரகொம் ஒலித்தது. திரையில் எனது இந்திய நண்பர்களில் ஒருவரின் எண் ஒளிர்ந்த்து.

“ஹலோ” இது நான்

“எப்படி இன்னை மேட்ச்?” என அவர் கேட்கும் போதே உற்சாகம் தெறித்த்து.

இலங்கை தோற்றுவிட்டது என்பது நண்பரின் உற்சாகக் கத்தலிலேயே புரிந்துவிட்டது. இந்தியா ஜெயித்தது என்பதை விட எதிரணி தோற்றுவிட்டது என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சி அதிகம் இருப்பதை கண்டு வியந்துள்ளேன்.

“வாழ்த்துக்கள்” என்றேன். நண்பர் விடுவதாக இல்லை. போட்டு அறுத்துக்கொண்டே இருந்தார். கேட்டுக்கொண்டே இருந்தேன். 

வை பிளட் … சேம் பிளட் நிலமை….
ஏண்டா இப்பிடி இருக்கீங்க … விடுங்கடா டேய்….
வேறு என்னத்த சொல்ல….

( நண்பர்கள் இதை பாக்கமாட்டாங்க எங்கிற தைரியத்தில்தால் இதை பதிவேற்றுகின்றேன்.. ஏன்னா அவங்க ஒத்தரும் தமிழர்கள் இல்லை…. ஐ ஜாலி!!!!!)

Saturday, May 29, 2010

எப்படி என்றாலும் - நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை.



நண்பர்கள் உலகம் ஒரு உணர்வுக்கலவையால் ஆனது. ஒரே குறுப்பில் பல்வேறுபட்ட நடத்தைக்கோலங்களுடனும் பண்புகளுடனும் நண்பர்கள் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது நட்பு.

எனது கல்லூரி வாழ்க்கையிலும் ஒரு நட்பு வட்டம் உருவானது. அது எங்களது ராகிங்க் காலத்தில் உண்டானது. ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்து கொண்டவர்கள். ஆனால் கல்லூரி முடியும் வரை ஒன்றாகவே இருந்தோம். அதன் பின் ஆளுக்கொரு திசையாக சிதறிப்போனது வேறு கதை. இப்போது ஒவ்வொருவரும் எங்கெங்கோ? சிலர் தொடர்பெல்லைக்கு அப்பால் கூட..

விடுமுறைக்காக ஊருக்கு செல்லும் காலங்கள் மிக மிக சுவாரசியத்தினையும் உற்சாகத்தினை ஏற்படுத்துவதாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிக சலிப்பாகவும், எப்படா இந்த விடுமுறை முடியும் மீண்டும் ஓடி விடலாம் எனத்தோன்றுகின்றது. இதற்கும் காரணம் நண்பர்களே. முன்பு, ஊருக்குப் போனால் எல்லோரும் ஊரில் இருப்பார்கள், முழ் நாளும் அவர்களுடனே பொழுது போகும், எங்களுக்கென்று ஒரு மரத்தடி , பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை, பேச பை நிறைய விசயங்கள், பழங்கதைகள் என காலம் போவதே தெரியாது. இதுவும் சலித்தால், வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினால், ஐந்தாம் கட்டை வாய்க்காலில் ஒரு குளியல். பின் திரும்பி அங்குள்ள வயல் கடையில் சுடச்சுட பிட்டு ஆஹா. அது ஒரு வசந்த காலம்.

இப்போது , விடுமுறைக்கு செல்கின்ற வேளைகளில் ஊரில் யாருமில்லை. மரத்தடி பெட்டிக்கடை, வாய்க்கால் எல்லாம் இன்னொரு குழுவால் முற்றுகை இடப்பட்டிருக்கும். முன்பு தூங்க மட்டும் பிரிந்த அதே நண்பர்கள் இப்போது , சொந்த சொந்த வேலைகள் பிரச்சினைகளுடன், எங்காவது வீதியில் கண்டால் கூட, வந்தது பற்றி, போவது பற்றியும் இன்ன பிற வழமையான வினாக்களுடன் அந்த ஐந்து நிமிட சந்திப்பு நிறைவுறும். போகும் போது நிச்சயமாக, “மச்சான் ப்றியா ஒரு நாளைக்கு கதைப்போம். கட்டாயம் வாறன்என்று சொல்லுவான். ஆனால் நிச்சயமாக நடக்காது. பிறகென்ன நாம் வீட்டில் மோட்டினை பார்த்துக்கொண்டு படுத்திருந்துவிட்டு, பெட்டியை இரண்டு நாட்கள் முன்பு கட்ட வேண்டியதுதான்.

ஆனால் உண்மையில் இது யதார்த்தம். வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் உண்டாகும் மாற்றங்கள் மனிதர்களினை வேறு திசைக்கு இழுத்துச்சென்று விடுகின்றது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது எனினும் , மாறுகின்ற வேகத்தில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். அதுதான் என்னைப்போன்ற சிலரை தொல்லைப்படுத்துகின்றது.

இப்போது எனது குழாமில் திருமணம் எனும் அபாயத்திற்குள் ( @#!!#@ ) அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே! அதனால் என்னால் முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இருக்க முடிகின்றது. பின்னிரவில் வீடு செல்ல முடிகின்றது , விரும்பியவாறு சுற்ற முடிகின்றது என எல்லாம் ..கிறது. ஆனால் நண்பர்களின் நிலை அவ்வாறில்லை, திருமணம் முடித்தவன் , 9 மணி என்பதை ஏதோ ஒரு மிரட்சியுடந்தான் நோக்குவான். பிந்திப் போனால் என்ன தண்டனை கிடைக்குமோ அவனுக்கு நான் அறியேன். ஆனால், இப்போது அவனுக்கான நிகழ்ச்சி நிரல்களில் அவனது மனைவி மற்றும் அது சார்ந்த விடயங்கள் மட்டுமே உள்ளன. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று. அவனுக்கு மனைவி என்பது போல..

எப்படி என்றாலும் - நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை.