ஜூன் 2ம் திகதி இலங்கையில் ஆரம்பமாக உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவினை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழ் உணர்வாளர்களால் சத்தமாக ஒலிக்கப்படுகின்றது.
அதற்கு கூறப்படும் காரணம் – தமிழர்களினை கொன்ற இலங்கையில் நடக்கின்ற நிகழ்வு , அதனை புறக்கணிக்க வேண்டும். சரி, இதை புறக்கணிப்பதால் எமக்கு என்ன நன்மை? சில மீடியாக்களுக்கு மெல்ல அவல் கிடைத்தது , இன்னும் சில தமிழர்களுக்கு உயிர்கொடுக்கும் அரசியல் வாதிகளுக்கு ஒரு சில நன்மைகளும் இருக்கலாம். அதை விடுத்து வேறொன்றும் ஆவப் போவதில்லை.
இப்புறக்கணிப்பானது, சர்வதேச கவனத்தினை இலங்கை பக்கம் திருப்பும் என ஒரு கருத்துக்கூறப்படுகின்றது. இப்போது இலங்கை மீது உலக நாடுகளின் கவனம் திரும்பி உள்ளது போன்று முன்பு ஒரு போதும் இருந்ததில்லை. சர்வதேச சமூகம் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நடவடிக்கைகள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் என்பனவற்றில் ஓரளவு அக்கறாஇ செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. இது சர்வதேசத்தின் பிராந்திய நலன் சார் அரசியலின் வெளிப்பாடு என்றாலும், இலங்கைக்கு இதனால் கொஞ்சம் நடுக்கம் ஏற்பட்டிருப்பதை அதன் நடவடிக்கைக்களிலிருந்து உணர முடிகின்றது, எனவே இவ்விழாப் புறக்கணிப்பு மூலம் ஏற்படுவதாக காட்டப்படும் எந்த ஒரு கவன ஈர்ப்பும் பெரிதாக ஒன்றினையும் பெரிதாக சாதிக்கப்போவதில்லை.
இதை விடுத்து தற்போது நடிகர்கள் மற்றும் திரை உலகம் சம்பந்தப்பட்ட அனைவராலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ( அறிக்கைகள் , புறக்கணிப்புக்கள் இன்ன பிற.. ) அனைத்தும் இதய சுத்தியுடன் தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடைபெறுகின்றதா என்ற வினா எல்லோர் முன்னாலும் எழாமல் இல்லை.
தென்னகத்தின் திரைப்பட ஊழியர் சங்கம் , இவ்விழாவுக்கு செல்லும் நடிகர்களின் திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்கப்போவதில்லை என்ற பெரிய குண்டு ஒன்று. இப்போது அனைத்து நடிகர்களுக்கும் கலக்கத்தினை உண்டு பண்ணியே இருக்கும். ஆகவே பெரும்பான்மையானோரின் புறக்கணிப்பு முடிவு தென்னிந்திய ரசிகர் சந்தையினை இழக்கக்கூடாது என்ற அக்கறையில் எடுக்கப்பட்டிருக்கும்.
தமிழர் பற்றி உரக்க வாய் கிழிய கத்தும் அனைவருக்கும் தெரியும். தமது கத்தலால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை என்பது. ஆனாலும் அவர்கள் அதனை விடமுடியாது – அவர்களின் வாழ்வாதாரம் அதில்தான் தங்கியுள்ளது. இலகுவாக உணர்ச்சி வசப்படும் தமிழனை உசுப்பேற்றி தமது இருப்பினை பலப்படுத்துவதில் மிக்க கவனத்துடன் இவர்கள் இருப்பர். இதற்கு நேரடியாக வாழும் உதாரணங்களாக பல தமிழக அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களினை தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை.
இப்புறக்கணிப்பு கோசமும் அது போல ஒன்றுதான்.
யுத்தம் மிகக் கொடூரமாக நடந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களுக்காக தமிழ்த்திரையுலகம் உண்ணாவிரதம் இருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அதனால் கிடைத்தது ஒன்றுமில்லை. அதில் வீராவேசமாக பேசிய நடிகர்கள் இன்று அவரவர் பணிகளில் மும்மூரமாகிவிட்டனர். இப்போது நடப்பதும் அப்படித்தான். ( சினிமா மொழியில் சொல்வதானால்- சேம் சீன் But லொகேசன் சேஞ்ச்).
இதற்குள் இன்னொரு நியாயமான கேள்வியும் எனக்குள் எழுகின்றது. தமிழர்களினை கொன்றது சிங்களம். சரி.. அது கொண்டாடும் விழாவினை நாம் புறக்கணிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவ் இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற செம்மொழி மாநாட்டினை புறக்கணிக்க இப்போது கோசம் போடும் தமிழ் உணர்வாளர்களுக்கு தில் இருக்கின்றதா? சகோதரன் அகதியாகி, அவலத்துடன் மர நிழலிலும் கூடாரங்களிலும் மந்தைகள் போல கெட்டழிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் தமிழுக்கு விழா??? கேட்கும் போது உள்ளிருந்து ஒரு கொதிப்பு வரவில்லை???
ஆகவே அனைத்தும் பட்டவர்த்தனமான அரசியல் கோமாளிக்கூத்துக்கள். இவர்கள் இங்கு விழாப்புறக்கணிப்பு புறக்கணிப்பு என கத்திக்கொண்டிருக்க இலங்கையில் விழாவுக்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று விழா நடைபெற உள்ள சுகததாச அரங்கின் தொழில்நுட்ப வடிவமைப்பினை மேற்கொள்ள 50 தொழில்நுட்பவியலாளர்கள் விசேட விமானம் மூலம் இந்தியாவிலிருந்து சென்றுள்ளனர். இதைவிட வேறு என்ன சொல்லலாம்.
இது ஒன்றும் வேண்டியதில்லை, இப்போது இலங்கைத்தமிழர்களின் முக்கிய தேவை வாழ்வாதாரம் அதற்கு இத்திரையுலகம் ஏதாவது செய்யுமா? யாராவது முனைவார்களா? தமிழர்களுக்காக விழாப்புறக்கணிப்புக்கு பக்கம் பக்கமாக அறிக்கை விடும் முக்கியஸ்தர்கள். இதற்காக ஏதாவது செய்வார்களா? நிச்சயமாக செய்யமாட்டார்கள்.
ஆனால், இலங்கைத்தமிழர்களின் அவல நிலைக்கு மௌன சாட்சியமாகிப்போன முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த திரையுலகம் திரளும். அதை காசு கொடுத்துப்பார்த்துக்கொண்டோ அல்லது TV முன் உட்கார்ந்து கொண்டோ தமிழ் ரசிகன் ரசித்தவாறு விசிலடித்துக் கொண்டிருப்பான்.
நமக்குத்தான் ஞாபக மறதி தேசிய வியாதியாச்சே….
No comments:
Post a Comment