Sunday, May 09, 2010

என் இயலாமையின் மீது ஓர் வீடு பயணிக்கிறது


என் இயலாமையின் மீது ஓர் வீடு பயணிக்கிறது

ஓர் நீண்ட கனவின்
பாடு பொருள் என எண்ணிக்கொள்வேன்.
கனத்த துயரம் என்னை அமிழ்த்த
இயலாமை இன்னும் வீடொன்றினை சுற்றிக்கண்ணடிக்கும்.

அம்மா சொல்வாள்-
''எல்லோரும் வீடு கட்டியிருக்கிறார்கள்,எம்மை தவிர'' என,
அவள் கண்களின் வெறுமை என்னை வறட்சியாக்கும்.
ஊர் கூடிச் சிரிக்கும பிரமை
என் இயலாமையின் மீது ஓர் வீடு பயணிக்கிறது

தங்கைகளின் தூக்கப் பெருமூச்சுக்கள்
என் தளைகளை அறுக்க தவிக்கும்
ஆனாலும்
விதி நின்று சிரிக்கும்-சூழ்நிலைகளை பாடி,
என் விடுதலை நாட்கள் தூரப்போவதை சொல்லி....
கைபிசைந்து இயலாமை
விட்டம் பார்த்து வெறிக்க மட்டும் அனுமதிக்கும்.

ஒவ்வொரு பொழுதுகளும்,
வெவ்வேறு வீடுகளுடன் கனவாய் கழியும்.
என் விலங்குகள் பார்த்து சிரித்துக்கொள்வேன்.

எட்டிப்பிடிக்க எண்ணும்,
என் விடுதலை காலங்கள் தள்ளிச்செல்லும்.

வெறுமைகளின் எல்லை விசாலமாக
இன்னும் என் இயலாமை மீது ஓர் வீடு பயணிக்கிறது

வெறுமை களைந்து,
தளையறுத்து,
வீடு பெறும் லட்சியங்கள் ஓயாது.
கூரைகள் வேயப்படும் வரை.
__________________

No comments: