Posts

Showing posts from June, 2009
நான் எப்போதும் போல் வெறுமை வளர்க்கிறேன் பெண்ணே
நீ,, நான் காதல்
சந்தித்த ஓர் நேர்கோடு
இன்று புள்ளிகளாய் போனது.
எங்கெல்லாமோ வெற்றிடங்கள்.
எனக்காக பூக்கும் உன் முற்ற செவ்வரத்தை கூட இன்றில்லையே
என்ன செய்தாய்?

என் காதலை போல அதுவும் இறந்து போனதா?
மனசின் ரம்யங்கள்
இன்னும் என்னில் எங்கோ எஞ்சியுள்ளது
ஆனாலும் நீ இல்லை என்ற நிஜம்
என் கணங்களினை பொசுக்கியே போட்டுவிட்டது.

நீ பிரிந்த கணங்களின்
வெறுமை இன்னும் துரத்துகின்றது.
உனக்கான என்பாடல்களில் எதுவுமே
உன்னை சேரவில்லை
என்கின்ற போது
நான் பாடி என்ன பயன்?

இனி எதுவுமில்லை.
உன் முற்றத்தில் மீண்டும்
நட்டுக்கொள்ள எதயாவது தேர்ந்தெடு
ஆனால் அந்த செவ்வரத்தை வேண்டாம்.

என் முற்றம் பற்றி
உனக்கேது கவலை.
நான் எப்போதும் போல் வெறுமை வளர்க்கிறேன் பெண்ணே

நீ நலம் தானே அம்மா

Image
சுகமாய்தான் இருக்கிறேன் அம்மா. நீ சுகமா? என் ஒவ்வொரு காலையும் இப்போது உன் சத்தங்கள் இல்லாமல் விடிகின்றன. உன் ஏச்சுக்களை கேட்டவாறு தூங்கும் அதிகாலை சுகம் இங்கில்லை.

உன் தேனீர் மணம் இன்னும் என் நாசித்துவாரங்களில், என் நாவுகளில் ஒட்டியுள்ள அதன் இனிமையினை இன்னும் தேடிப்பார்க்கிறேன். எங்குமில்லை அம்மா.

உன் சமையலறை சத்தங்களின் லயங்கள். பாக்கிஸ்தானி சமையலாளியின் அறைகளில் நான் கேட்டதில்லை. நீ நலம் தானே அம்மா?
என் நாட்களினை எண்ணிக்கொண்டிருக்க்கின்றேன்.. நீ பிசைந்த பழஞ்சோறு ஒரு கவளம் உண்பதற்காக. அதுவரை நீ அழைக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளுக்கும் உன்னிடம் நான் பொய்யாய் சொல்லிக்க்கொண்டிருப்பேன். நான் சந்தோசமாக இருப்பதாக.
Image
நீ இல்லா உலகில் பிரவேசிக்கவென....
நீல ஆடையில் உன் வருகை எங்கும் வியாபகமாயிற்று.
நான் உருகி உன் பாதங்களின் கீழ் வடிந்தோடுகின்றேன்.
என் முத்தங்கள்,
உன் அத்வைதங்களில் மிதக்க..
நீ இன்னும் பரவுகிறாய்- என் ஆன்மாவின் இடுக்கெங்கும்..
அதிகாலை அலாரத்தில் எழுகின்றேன்.
சலனமற்றுக் கிடக்கின்றன
நீ பற்றிய என் ஞாபகங்களும் பிறவும்..
படுக்கை விரிப்பினை மடித்துவிட்டு தயாராகின்றேன்.
நீ இல்லா உலகில் பிரவேசிக்கவென.
Image
மீண்டும் ஒரு காலை,

மீண்டும் ஒரு காலை,
நீ இல்லாமல் விடிய
என் இயக்கம் தொடங்கும்,
உதட்டுச்சாயம் பூசி
பொய்யாய் சிரிக்கும்
என் மின்கம்பக் காரியதரிசியுடன்...

மதியம் மறக்க
உணவின்றி..
அந்தி சாயும்
உடை தளர்த்தி...
கதிரை கட்டிலாய் மாறும் ஒரு அலுத்த தருணத்தில்
தொலைபேசி உயிர்பெறும்..
அவ்வுயிர்ப்புடன் என் நாள் தொடங்கும்- உன்னோடு
Image
என் தனிமை பற்றிய புகார்கள்

இன்றும் தொடங்கிற்று இதயத்தின் கூக்குரல்..
என் தனிமை பற்றி புகார் செய்யவென..

யாரும் இல்லா ஒரு வெளியில்.
நான் தொடர்ந்து வசிக்க,
ஓர் இலையின் உதிர்விலும்
என்னுள் திணுக்கிடல்கள்..

கைகோர்த்துச்செல்லும் ஜோடிகளின் மீதான
என் தனிமையின் சாபங்கள்
இன்னும் என் தெருக்களில் இறைந்து கிடக்கின்றன.

தொலைதூர அழைப்புகளில் மட்டும்
ஓடி ஒளிந்து கொள்ளும் என் தனிமைகள்...
மீண்டும் பல்லிளித்தவாறு
என்னிடம் தொற்றிக்கொள்ள..
அதனை சுமந்தே திரிகின்றேன்
ஒரு பொதி ...போல
Image
என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"

வெறும் கோப்பையாக
விடிகின்றன
என் காலைகள்

ஓர்
மெல்லிய பறவையின்,
சிறகசைப்பின் சுகம் போல,
எல்லாக் காலைகளையும்
உணர்கின்றேன்.

காலைகளின் காலம்
இறந்து போக......
வெறும் கோப்பை கூட என்னவாயிற்று?
மனசு வழிய குப்பைகள்,
உணர்வுகளின் அழுக்குகள்,
ஓர் விரக்தி,
பல கவலைகள்,
இன்னும் சில ஞாபகங்கள்.
என எதுவெல்லாமோ......

இரவுகள்...
மனசின் மீது
அவஸ்தைகளை அடுக்கிப் போக...
திணறுகின்ற மனசு..
பாவம்!

ஏதும் புரிவதில்லை.
வெறுமையாகிப்போன வானமொன்றில்
ஒற்றையாய் கூவிச்செல்லும்.....
பறவை ஒன்றின் உணர்வு.
இன்னும் நெளிகின்றேன்.
எதுவென்று புரியாமல்.

ஆனாலும்
அடுத்த காலையின்
பிரசவிப்புக்காய்
என்
இரவுகள் ஒவ்வொன்றும்,
"என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"
என்ற பிரார்த்தனையுடனே
முடிகின்றது.