Thursday, July 14, 2011

எனக்கும் மும்பை குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு? முஸ்லிம் என்பதா?


இன்றைய அலுவலக காலை என்னை பொறுத்தவரையில் விடியவில்லை. அலுவலகத்தினுள் வியாழன் என்ற உற்சாகத்துடன் நுழைந்தால், அனைவரும் காலை டீயும் கொறிப்பதற்கு வாயில் மும்பை குண்டு வெடிப்புச் செய்தியுமாக பேசிக்கொண்டிருந்தனர்.

எங்கள் வேலை எப்போதும் டென்சன் தவிர வேறில்லை என்பதால், நான் வேலை தொடர்பான சிந்தனைகளுடன் அனைவரையும் கடந்து எனது அறைக்குள் சென்று விட்டேன். வேலையில் மூழ்கி அரைமணி கடந்து ஏதோ ஒரு கோப்பினை எடுக்கும் நோக்கில், கோப்பு அறைக்குள் போகலாம் என வெளியில் வந்தால் அரட்டை இன்னும் முடிவதாய் இல்லை. அதே குண்டு வெடிப்பு!! சிரித்துக்கொண்டே ஐந்து நிமிடம் கூட நின்றுவிட்டு, கோப்பினை தேடிக்கொண்டிருந்த போது,

“ இங்கே நீ என்ன செய்கின்றாய்? இதற்குள் ஏதாவது குண்டு வைக்கப் போகின்றாயா?” 

என சிரித்தபடி என் முன் நின்றார் எங்கள் வியாபார முகாமையாளர். தீவிர கிறிஸ்தவர், மும்பைகாரர்.

அவர் அதை கேலி போல் என்னிடம் கேட்டாலும், அந்த வார்த்தையில் தொனித்த வெறுப்பு, கேலி, வக்கிரம் என அனைத்தையும் உணர முடிந்தது. ஏனெனில் நான் ஒரு முஸ்லிம். பலர் ஒன்றாக முன்னே நிற்க வைத்து பீரங்கியினால் சுட்டது போன்ற உண்ரவு. சிரித்துவிட்டு வந்துவிட்டேன். 

ஒரு கரி நாளின் ஆரம்பம் போலத்தான் அது இருந்தது.

ஏன் இப்படிஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகளா? நல்லவர்கள் இல்லையா? அதே போல மற்றவர்களில் தீவிர போக்குடைய மக்கள் இல்லையா? எதற்காக இப்படி ஒரு வக்கிரம். அதுவும் எங்கோ எவனோ செய்த முட்டாள்தனத்திற்கு, இன்னொருவனை, அதுவும் இந்த விடயங்களில் அக்கறையோ, அரசியல் பற்றிய புரிதலோ இல்லாமல், தான் உண்டு தன் பணி உண்டு என இருக்கும் ஒருவனிடம் காட்டுகின்ற முட்டாள்தனம்.. எப்படி முடிகின்றது இவர்களால்?

அதைச் செய்தது ஒரு முஸ்லிம் என்றால், அதற்கு நானும் பொறுப்புக்கூற வேண்டியவனா? இல்லையே! எந்த உரிமையில் இதை மற்றவர்கள் மேல் திணிக்கின்றனர். முட்டாள்தனமாக இல்லை! எனக்கும் அதைசெய்தவனுக்கும் என்ன சம்பந்தம் அவன் முஸ்லிமாகத்தான் இருப்பான் என்ற அனுமானத்தினை தவிர..அவன் செய்தது தீவிரவாதம் என்றால். மொத்த முஸ்லிம் சமூகத்தினையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முனையும் இவரைப் போன்ற அனைவரும் தீவிரவாதிகள்தானே?.

மனசு முழுக்க வலிக்கின்ற ஒரு விடயத்தினை எந்த ஒரு அசூசையும் இன்றி போகிற போக்கில் தனது வக்கிரத்தை கொட்டிவிட்டு சென்றுவிட்டார். இதை எனக்கு அவர் தர வேண்டியதன் காரணம் என்ன. எதற்காக அந்த வலியினை எனக்கு தர அவர் தீர்மானித்தார். விடை வெளிப்படையானது. நான் முஸ்லிம்! 

ஆனாலும் அதில் உள்ள அநியாயத்தை அவர் அறிந்திருந்தும், அதை உதாசீனப்படுத்தித்தான் இதை செய்திருப்பார் என்பது எனக்கும் தெரியும்.

“ உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம்” என குர் ஆன் சொல்கின்றது. இது தவிர எனக்கு ஒன்றும் தெரியாது.

எனது பெற்றோரால், எனது சமூகத்தால், எனக்கு தரப்பட்டுள்ள போதனைகள் தர்மங்கள் எல்லாம், நல்லதையே சொல்லித் தந்திருக்கின்றன. யாரையும் துன்புறுத்தவோ, கொலை செய்யவோ நான் பயிற்றப்படவில்லை. என்னைப்போல்த்தான் என் சகோதரர்களும்... யாரோ எங்கோ ஒரு முட்டாள் மதத்தின் பெயரினை சொல்லி வெறி கொண்டாடினால், அதற்கு நான் ஏன் பொறுப்பாக வேண்டும். அதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். 

உங்களைப் போலவே சமூக மற்றும் மார்க்க கடமைகளில் ஈடுபட்டு சாதாரண வாழ்க்கை வாழும் அனேக முஸ்லிம்களில் நானும் ஒருவன் அவ்வளவே, 
நீங்கள் எப்படி அந்த நிகழ்வை அணுகுகின்றீர்களோ அப்படியே நானும் நோக்குகின்றேன். அவ்வாறில்லை, நீ ஈவ்வாறுதான் அதை பார்க்க வேண்டும் என மறைமுகமாக நீங்கள் நிர்ப்பந்திப்பது கூட தீவிரவாதம்தானே! 

ஒரு தனி மனிதனாக, மனித நேயம் மிக்க ஒருவனாக, இறந்தவர்களுக்காக கவலைப்படுவதையும், சிறிய பிரார்த்தனையினையும் தவிர என்னால் முடிந்தது ஒன்றும் இல்லை.

எனக்கென்று நிறைய சுமைகள் உள்ளன. வாழ்க்கையின் முழுதுக்கும் அவை எனக்கு போதும். இது போன்று இன்னும் வேண்டாமே!!

( என்னை போன்று இன்னும் சிலர் இக்காலங்களில் காயப்பட்டிருக்கலாம். அவர்களுக்காகவும், எனது ஆறுதலுக்காகவுமே இப்பதிவு. வேறொன்றுமில்லை!)







Wednesday, July 13, 2011

பதிவுலகில் நட்பை பெற, மனதை திறந்து வையுங்கள்…


நண்பர்கள் எனக்கு தேவை. ஆனால், நான் அவர்களுக்கு கிடைக்க கூடியதாய் இருக்கின்றேனா?

நிதர்சனம் அப்படித்தான் இருக்கின்றது தோழர்காள்! பள்ளிக்கால நட்பு, கல்லூரி நட்பு, ஊர் நட்பு என பல வட்டங்கள் தாண்டி இங்கு நான் சொல்ல வருகின்ற நட்பு – வலையுலக நட்புக்கள். இன மத நாடு போன்ர எல்லைகளுக்கு அப்பால்  நின்று நட்பினால் பின்னப்பட்ட இந்த வலாஇயுலகில் நானும் ஒரு சிறு அங்கம் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏதோ ஒரு நெருடல் இன்னும் உள்ளே உண்டு. அது – நான் தலைப்பாக இட்டுள்ள கேள்விதான்!! இங்கு எப்போதும் ஒரு வாசகனாய் இருப்பதில் எனக்கு நிறைய சௌகரியங்கள் இருக்கின்றன. பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள் எதுவும் தேவையில்லை எனும் அளவிற்கு எனக்கு அவர்களை தெரியும், ஆனால் எத்தனை பேருக்கு என்னை தெரியும்???


நிச்சயமாக இதற்கு காரணம் நான் தான்..அதுவும் எனக்கு தெரியும். நிச்சயமாக இந்தப் பதிவு என் போல் உள்ள பல பதிவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம். அதற்காகவே இதை எழுதுகின்றேன். தனிப்பட்ட ஒருவரின் குண நலன்கள் இப்பதிவுலகில் – பதிவர்கள் என்றவகையில் பிரதிபலிக்கின்றன என்றால் மறுப்பதற்கில்லை அல்லவா?? இது என்னை வைத்துத்தான் சொல்கின்றேன்..


மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் சிறிது தயக்கம் கொண்ட என் போன்றவர்களால், இணைய உலகில் ஒரு நட்பு வட்டத்தினை உண்டாக்குவதென்பது முடியாத காரியம். மற்றவர்களிடம் சென்று தானே நட்பினை உண்டாக்கும் அளவிற்கு திராணி எனக்கு இது வரைக்கும் வந்ததில்லை. (இப்போது என்னவோ ஒரு வேகம் வந்துள்ளது பார்க்கலாம்!!) இது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மைதான் அல்லவா/ மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என எண்ணுவதிலேயே என் போன்றவர்களின் காலம் கழிந்து விடுகின்றது ((.


ஆனாலும் எதிர்பார்ப்புகளிற்கு பஞ்சம் இல்லாமல் இல்லை. நாம் எழுதும் பதிவுகளுக்கு மற்றவர்கள் எதீர்வினை செய்ய வேண்டும் என எண்ணுகின்ற நியாயம் நாம் ஏன் அதை செய்வதில்லை என்ற கேஎள்விக்கு, நம்ம கருத்தெல்லாம் ஒரு பெரிய விசயமா என்ற சமாதானப்படுத்தலுடன் முற்றுப் பெறுகின்றது. இது பலருக்கு புரியலாம்.

ஆரோக்கியமான பதிவுலக நட்புக்கள், அவர்களுக்கிடையிலானுறவுப் பிணைப்புக்கள் என எல்லாம் பார்க்கின்ற போது நாமும் அதற்குள் இணைய மாட்டோமா என்ற ஏக்கம் எழத்தான் செய்கின்றது. ஆனாலும் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்கின்ற யதார்த்தம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்கத் தொடங்கியுள்ளது,

என் போன்றுள்ள பதிவர்காள் கேளுங்கள், ஆரோக்கியமான நட்புக்களை பதிவுலகில் பெற வேண்டுமா ஒன்றும் செய்ய தேவை இல்லை,

முதலில் – தாழ்வுச்சிக்கலோ, நான் பெரியவன் என்ற மமதையோ இன்றி திறந்த மனசுடன் ஆரம்பிக்கலாம் , வாசல் கதவு திறந்திருந்தால்தானே விருந்தாளிகள் உள்ளே வருவார்கள்??

இன்னும், பாராட்டு என்பது அனைவருக்கும் தேவையானது, வேண்டி நிற்பது. அதை செய்ய ஒரு போதும் தயங்க கூடாது. எனக்கும் அது தேவை எனும் போது, நானும் கொஞ்சம் கொடுத்தால்தானேஎ, எனக்கும் கிடைக்கும். நான் எனதை என்னிடமே வைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது நியாயமில்லை அல்லவா?

புதிதாக வருகின்ற சில பதிவர்கள் வெகு சீக்கிரத்தில் தமக்கென்று ஒரு தனி முத்திரையினை பதிப்ப்பதை அவதானிக்கலாம். அவர்களை அவதானித்தால் மேற் சொன்ன இரு விடயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
இது இத்தனை வருட எனது தனிப்பட்ட பதிவுலக அனுபவங்களில் இருந்து நான் படித்தது. இன்னும் நான் இதை பின் பற்றவில்லை. இனி நானும் முயலப் போகின்றேன்..

நண்பர்களே காத்திருங்கள் இதோ ஒருவன் உங்களை தேடி வரப் போகின்றான்.. கூடை நிறைய நட்புக்களோடு…

நட்போடு மகிழ்ந்திருப்போம்….   




கிட்டாதவை பற்றி அலையும் மனசு………..





தூரமாய் மிதந்தபடி அது செல்ல,
எதுவோ என்னை உந்தியதுபற்றிப் பிடி என,
கால்களின் வலு இறக்கும் வரை ஓடினேன்.
தூரங்கள் சமாந்தரமாக,
எனக்கு அதற்குமான பயணங்கள்
எப்போதும் அடையா இலக்காகிப் போனது.


Monday, July 11, 2011

WWW.பிச்சுமணி.காம்



ஒன்னுமில்ல!  கொஞ்ச நாளாவே ஒரு ஆசை, நமக்கென்னு ஏன் ஒரு www. வாங்க கூடாது என.. இடைக்கிடை ப்ளாக்கரின் பக்கம் போகும் போதும், உன் பெயரிலேயெ .கொம் உன்௶உ வாங்கிக்கிறியா வாங்கிகிறியா ன்னு கேட்டுக்கிட்டே ஆசைய கிளறிவிட்டுக் கொண்டே இருந்தது. வாங்குவோமா ன்னு யோசித்தால், யாரோ தூர நின்னு கை கொட்டி சிரிக்கின்ற சத்தம்.. “ ஹா,,,ஹா இவுரு பெரிய பதிவரு, சொந்தமா டொமைன் வாங்குறாராமில்ல,” ன்னு கைகொட்டி சிரிக்கின்ற சத்தம்.. ஆனானப்பட்ட பிரபல பதிவர்களே சும்மா இருக்கும் போது ஒனக்கு எதற்கு இதெல்லாம் என்று ஒரு குரல் விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.

நமக்குன்னு பதிவுலகத்துல ஒரு உருப்படியான நட்போ, உறவோ இல்ல. அதுக்கும் காரணம் நாமதான், ஒழுங்கா அடுத்தவங்க பக்கம் போயி நாலு கொமண்ட்ட போட்டாத்தானே அவங்க நம்ம பக்கம் வருவாங்க. அப்பிடி இல்லாம சும்மா நம்ம சொதப்பல்களயும் , சுய சொறிதல்களையும் வாசிச்சிட்டு பாராட்டி போவாங்கன்னு எதிர்பார்க்கிறது எந்தவகையில் நியாயம்? என்னா செய்றது எல்லாம் புரியுதுதான்.. ஆனாலும், ஒரு உசார் வந்து இனி ஒழுங்கா , பக்காவா எல்லாத்தையும் செய்யனும்னு உறுதி எடுத்துக்கினு ஒரு நாளைக்கு வந்தா, அது அன்னைக்கு ராத்திரியோட முடிஞ்சி போயிடுது. என்னத்த சொல்றது.

இருந்தும் இந்த டொமைன் ஆசை விட்ட பாடில்லை. இன்னைக்கு காலைல நான் இட்ட பதிவொன்னு இன்ட்லில பிரபலமாயிருக்குன்னு கண்டதும்.. ஒரே குஷி, கிட்டத்தட்ட 80 பதிவுக்கு மேல இட்டும் இது நான்காவது பதிவு பிரபலமாகின்றது. பதிவு சும்மா நம்ம திருப்திக்கு எழுதினாலும், பாராட்டு கிடைக்கும் போது கொஞ்சம் மகிழ்ச்சிதானே, ஒரு கமண்ட் வந்தாலே தைய தக்கா,, தைய தக்கா ன்னு குதிப்போம்.. இதில ஒரு பதிவு பிரபலமாகுதுன்னா! அதுவும் பிரபல திரட்டி ஒன்டுல,, மகிழ்ச்சிதானே!!!

இந்த குஷியில என்ன செய்றன்னு விளங்காம ப்ளாக்கர் பக்கம் போனா இன்னைக்கும், தனி டொமைன் வாங்கிக்கிறியான்னு என்ன பார்த்து சிரிக்குது, சரி நாமதான் பிரபல பதிவர் ஆகிட்டோமே ( என்னாது !!!!!!!!!!! ??) வாங்கித்தான் பார்ப்போமேன்னு முடிவு செஞ்சி வாங்கிட்டேன்.  ஒரு வருசத்துக்கு $10.00 ஆட்டோவா அடுத்த வருசத்துக்கும் ரினியூ பண்ணட்டுமான்னு கேட்டிருந்துச்சு, வேணாஞ் சாமி, அத பொறவு பார்ப்போம்னு சொல்லி, இத வாங்கிட்டேன். இப்போ நம்ம அட்ரஸ் – www.sarhoon.com. இத பார்க்கும் போது , வடிவேல் ஒரு படத்தில சொல்வாரே,

     என்ன கான்டாக்ட் பண்னனும்னா, www.பிச்சுமணி.com க்கு பண்ணிக்கோன்னு அதான் ஞாபகத்துக்கு வருது!!!

அலம்பல் ஜாஸ்தி போலருக்கா? ப்ளீஸ் சிறியோனை பொறுத்துக்கோங்கோ மக்கள்ஸ்!!!!!!!




Saturday, July 09, 2011

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….



த்தியமாங்க, சில வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா!!! இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக்!! பப்ளிக்!! ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது?? கற்பனையிலேயே குத்திக் கொள்ள வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..

     வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????

     இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.

     சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக மலையாளிகளின் உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா போக முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட் போனா, “ தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….” பாட்டுத்தான் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!

     ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

     ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா, எவனாவது கூட படிச்சவன் மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல எவன் எவள கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட இருக்கிறவன்ட கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்.ஐயோ முடியல வேற ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா.. ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து விருச்சிககாந்த், சாம் அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா, மச்சான் ஒரு அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு மாமாங்கம் கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே………………….


இப்பிடி ஒரு நெடிய லிஸ்ற்றே இருக்குங்க!! என்னா செய்றது. இப்பிடி பொலம்பிக்கிட்டு, இவனுகளோட அட்ஜஸ்ட் பண்ணிக்கு போக வேண்டியதுதான்.. அவனுகள திருத்தவும் முடியாது. நமக்கும் இத மாற்ற முடியாது… இதானே வாழ்க்கை….



என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!!!!!!!!!! 





     

இது எங்க தமிழ்… நீ உள்ளே வராதே!!!!!!!!!



வெண்ண..
ங்கொய்யால..
ஆணி புடுங்குறது..
போடாங்க்..
ஆட்டைய போடுறது
ஜொள்ளு
லொள்ளு
கலாய்க்கிறது
கும்முறது.

தெல்லாம் என்ன எங்கிறீங்க… நம் மக்கள்ஸ் அன்றாடம் பாவிக்கின்ற வார்த்தைகள்தான். வலையுலகம் பரிச்சயமானவர்களுக்கு இவை ஒன்றும் புதிதல்ல. ஏன் தமிழ் சினிமாக்களில் கூட இவை புழக்கத்தில் அதிகமாகவே உண்டு. இவற்றிற்கெல்லாம் அர்த்தம்!!!!!!!!!!!! விளக்கம் !! தெரியாது. ஆனாலும் சில இடங்களில் இவற்றினை சொல்லும் போது அதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பொருந்திப்போகின்றது.

சில வேளைகளில் இவை பகிடி போல தோன்றினாலும், பல நேரங்களில் இது போன்ற வார்த்தைகளின் நதி மூலம் ரிஷி மூலம் பற்றி எல்லாம் மண்டையினை போட்டு உருட்டி இருக்கின்றேன், ஆனாலும் பலன் பூச்சியம்தான். 

எனது முன்னறையில் தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவரிடம் இது பற்றி நேண்டலாம் என பேச்சுக்கொடுத்தேன்.

“றாசில்!”

“என்ன சொல்லுங்க?” என்றார்.

“வெண்ண என்டா என்ன?” எனக் கேட்ட என்னை மேலும் கீழுமாக ஒரு மாதிரி பார்த்தார்.

என்னடா தப்பா கேட்டுட்டோமா என யோசித்துக்கொண்டே, “ இல்ல, இந்த சினிமாக்களில, எல்லாம் ஏசுறதுக்கு வெண்ண என்டு சொல்லுவாங்களே அதான் கேட்டேன்” என்றேன்.

அவருக்கும் சரியாக விளங்கவில்லை என்பது அவரின் குழப்பமான பார்வையிலேயே புரிந்தது. “ வெண்ண ன்னா………… ச்சும்மா சொல்றதுதான்..” என்றவாறு இழுத்தார்.

சரி அவருக்கும் விளக்கம் தெரியவில்லை என்று எண்ணிக்கொண்டேன்.

திடீரென கனவில் இருந்து விளித்தவர் போல, “ ஏசுறதுன்னா என்னங்க?” என்று என்னை நோக்கி ஒரு கேள்வியினை எறிந்தார்.

‘கிழிஞ்சது போ!!’ என மனதுக்குள் எண்ணியவாறு, 

“திட்றது” என பதில் சொன்னேன்.

இதன் பின் அவரிடம் சொல்லுக்கு விளக்கவுரை கேட்பதை நிறுத்திவிட்டேன். நாம ஏதாவது கேட்கப்போய், அவருக்கு அதில் ஏதாவது சந்தேகம் வந்து, திரும்ப அதை அவர் நம்ம பக்கம் திருப்பி விட்டார் என்றால்…. இந்த வினையே வேண்டாம்.

புதிதாக வந்த தமிழ் சினிமா ஒன்றில், ஒரு இன்ஸ்பெக்டர் ஒருவர், “ அம்மா வை சொல்ற ஆத்தா எங்கிற வார்த்தையையே கெட்ட வார்த்தையாக்கினவங்கதானேடா “ எனப்பொருள்பட சொல்லுவார். அவர் குறிப்பிடுவது சென்னைத்தமிழை என நினைக்கின்றேன். அது உண்மைதான் என்பது எனக்கு அந்த வார்த்தையினை சிலர் இங்கு பிரயோகிக்கும் போது புரிந்தது. “ அம்மா” என்பதைல் உள்ள பரிவினை விட “ஆத்தா” என்பதில் உள்ள பிடிப்பு , பரிவு மிக அதிகமாக இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. ஆனாலும் அதை கெட்ட வார்த்தையாக பிரயோகிகின்றோம் எனும் போது கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருக்கின்றது அல்லவா??

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், கொஞ்சம் கலப்படமின்றி தமிழில் பேசுகின்ற இலங்கையர்களும் இப்போது, தமிழ் சினிமாவின் உபயத்தால் இது போன்ற வார்த்தைகளுக்கு பழக்கமாகிவிட்டனர். அது எமது பதிவுலகு வரை நீண்டுள்ளது. இது ஒரு குறை என்று சொல்லவில்லை, அதன் பாதிப்பு பற்றி பதிவு செய்கின்றேன் அவ்வளவே..


Friday, July 01, 2011

காட்சி அனுபவங்களை வாரி அளிக்கும் Transformers dark of the moon (3D)


சாதாரண இரு தமிழ் சினிமா ரசிகனான எனக்கு, சர்வதேச சினிமா பற்றியோ, அதிலுள்ள அழகியல்ல், இசம் இன்னும் பிற எது பற்றியோ அக்கறை ஒரு போதும் இருந்ததில்லை. ஆனாலும் இம்முறை நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அவருடன் இத்திரைப்படம் பார்க்க செல்ல நேரிட்டது.

அதிலும் முப்பரிமாண திரப்படங்கள் தருகின்ற அனுபவங்கள் எனக்கு எப்போதும் ஒரு கிளர்ச்ச்சியினை ஏற்படுத்தும். இது அவதார் திரப்ப்படத்தில் ஏஎற்பட்டு இத்திரைப்படத்துடன் மூன்றாவதாக மாறியுள்ளது.
சரியாக திரைப்படம் தொடர்பான கதைக்கோ அல்லது அது தொடர்பான விமர்சனங்களுக்குள்ளோ நான் வரவில்லை.முப்பரிமாணத்தில் அது தந்த காட்சியனுப்பவங்களின் பிரமிப்பு இன்னும் அகலவில்லை, அதன் பாதிப்பே இது.

வேற்று கிரக வாசிகளாக வரும் அப்பிரமாண்ட உருவங்களுக்கு  உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கும் திறமை!! வியக்க வைக்கின்றது.. அதிலும் உருவங்களின் பிரமாண்டங்களை ரசிகனுக்கு உணர்த்த கைக்கொள்ளப்ப்படுகின்ற உத்திகள் சுவாரசியமானவை. மனிதர்களுக்கும் அந்த ராட்சச எந்திரங்களுக்குமான அளவாகட்டும், அந்த எந்திரங்களுக்கிடையில் உள்ள உருவ வேற்றுமையாகட்டும், அவை செல்கின்ற விண்வெளி ஓடங்களின் அளவாகட்டும் அப்பா!!!!!!!!!! அவர்கள்ன் உழைப்பு தெரிகின்றது.

கடைசி ஒரு மணித்தியாலம் காட்சிகளின் உச்சம் என்றே சொல்லலாம். அந்த பிரமாண்டத்தினை வார்த்தைகளால் விவரிப்பதை விட, பார்க்க வேண்டும். இதே அனுபவம் இரு பரிமாண திரைப்படத்தில் கிடைக்குமா என தெரியாது. அந்த பிரமாண்ட உருவங்களுக்கிடையில் மூளும் சண்டையில் மனிதர்கள் சிறு சிறு புழுக்கள் போல மிதி படுகின்ற போது ஏற்படுகின்ற உணர்வுகள் , சில வேளைகளில், நிஜமோ என எண்ணத் தோன்றுகின்றது. குண்டுகள் பாய்கின்ற போது சில வேளகளில் நாம் திரைப்படத்தினை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் மறந்து தலை தானாகவே தாழ்ந்து போகின்ற சந்தர்ப்பங்களும் உண்டாகின என்றால் எந்தளவுக்கு அத்திரைப்படத்தின் காட்சிகளில் மூழ்கி இருந்திருக்க வேண்டும் என்பதை பாருங்கள்.

நிச்சயமாக அவதார் -  காட்சியனுபவங்களின் உச்சம் என்றால், TRANSFORMER அதற்கு அடுத்தது என்றே சொல்லலாம். இத்திரைப்பட குழுவினரின் உழைப்பு இதன் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக உணர முடிகின்றது.

குழந்தைகளைக் கூட்டிச்சென்று மகிழ வேண்டிய ஒரு திரைப்படம் .. ஓரிரு முத்தக்காட்சிகள் உண்டு, அவ்வளவே!  

ட்ரெய்லர் இதோ; ( முடிந்தால் தியேட்டர் சென்று 3Dயில் பாருங்கள்..)