Thursday, April 22, 2010

உன் ஞாபக தொல்லைகள்


இன்றும் தொடங்கிற்று
உன் ஞாபக தொல்லைகள்

அச்சோதனை சாவடியில்
எல்லோரும் பொதிகளோடு இறங்க,
எப்போதும் போல்,
நான் மட்டும் உன் ஞாபக சுமையோடு இறங்குவேன்.

காலம் விழுங்கிய உன்னை
என்றும் ஞாபகப்படுத்தும்- அவள்,
காக்கி உடையோடு...
நீதான் நீயேதான் என மனம் கூவும்; அடம்பிடிக்கும்
ஆனாலும்,
காலம் உன்னை தொலைக்க காரணமும்,
அவள் அணிந்துள்ள காக்கிதான்
உண்மை சுட எப்போதும் போல்
அடையாள அட்டையுடன் முடித்து கொள்வேன்.
உன்னையும் உன் ஞாபகங்களையும்.
__________________

நிமிடங்கள் கழியும் நீயின்றி...


மௌனங்கள்
என் வாழ்வாகிப்போன-
ஓர் நாளில்,
நீ என்னில் நீங்கிப்போனாய்.
அன்றுதான்,
மழை எனக்காக அழுதது.
காலம் பொய்த்த ஒரு வெளியில்
நான் குடியிருக்கலானேன்.

நீ அறிவாயா?
இன்னு நான் உன் ஞாபகங்களில் சீவிக்கின்றேன்...
உன்னோடான நிமிடங்களின் பெறுமதி
என்னைத் தவிர யார் அறிவார் கண்மணி?

உன் அருகிலான என் இருப்புகளில்,
உன் புத்தாடை வாசனை இன்றும் உண்டு..
எங்கேயோ, யாரிடமோ..
ஆனால் நீ இல்லை,

ஒவ்வொன்றும் பொய்த்துப் போகும்
ஒரு கணத்தினை மாற்றுவாய்
மெல்லிய முறுவல் செய்து....
என் அடுத்த மேசைக்காரியும் அப்படித்தான்
ஆனால் அவள் நீயில்லை..

நிமிடங்கள் கழியும்
நீயின்றி...
ஆனாலும், நினைவுகள் அகலாது கணப்பொழுதேனும்
__________________

எது தந்தால் என் உலகில் குடியிருப்பாய் பெண்ணே


இன்னும் தொடமுடியாத ஒன்றில்
உனக்கான இருப்பிடங்களினை –
ஏன் அமைத்துக்கொண்டாய்?
என் பின் தொடர்தல்களின் தப்பிதங்களாலா?

நீ சொல்,
என் காதலின் உறுதி பற்றி.
உன் பொய்களில் இன்னும் நான் மயங்குகின்றேன்
அது தெரிந்தும் கூட..
என் ஆன்மாவில் ஒழுகும் உன் நினைவுகளில்
இன்னும் நீ நனைவதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறாய்

உன் பார்வைகளுக்கு மண்டியிட
நான் இன்னும் தயாராகத்தான்..
ஆனாலும் உன் இருப்புக்கள்
என் உலகம் தாண்டியே என்றும்.

எது தந்தால் என் உலகில் குடியிருப்பாய் பெண்ணே?
எதை வேண்டுமானாலும் கேட்டுப்பெற்றுக்கொள்
உன் காதலைத்தவிர…….
__________________
முன்னாள் காதலிக்கு...

முன்னாள் காதலிக்கு...

மழை பொழியும் ஓர் அதிகாலையில், ஏனோ உன் ஞாபகத்தொல்லைகள். அதனால் எழுதித்தொலைக்கின்றேன். ஆனாலும் உனக்கொன்றும் ஆகப்பொவதில்லை. ஏனெனில் எனக்கும் உனக்குமான இடைவெளிகள் கடல் கடந்து போய்விட்டன.

நலமா காதலி?

நலமாய்த்தான் இருப்பாய். மனசு தின்று வாழுமுனக்கென்ன குறை? காலம் எங்கோ சென்றுவிட்டது.
உனக்கு ஞாபகமாஅ இது போன்ற ஓர் மழை நாளில்தான் உன் காதலை கூறினாய். அழகான அக்கொன்றை மரம் இன்றும் அன்று போல் பூத்திருக்கின்றது. அதற்கென்ன... உன்னை போல் என்னை போல் எத்தனை காதலை கண்டிருக்கும்.
நீண்டு செல்லும் தார்ச்சாலைகளில் நான் செல்லும் வரை கண்கள் பூக்க நான் வரும் வரை நீ இருக்கும் அம்மாலைகள் அழகானவை. அதற்காகவே பிந்தும் என் தந்திரங்கள் தெரிந்து நீ காட்டும் பொய் கோபங்களை இன்னும் நான் சேமித்து வைத்திருக்கின்றேன்.
நீ எதை சேமித்து வைத்திருப்பாய்? எனக்குத்தெரியும் உன் எத்தனக்கள் யாவும் என் எதிர்த் திசையில்தான்.

பரவாயில்லை.. நீ என்றும் நலமாய்த்தான் இருப்பாய். இன்னும் ஒன்று எனக்கு ஞாபகம் வருகின்றது. தயவு செய்து உன் குழந்தைக்கு என் பெயரை வைத்து விடாதே. ஏன் எனில் உன் தவறுகள் என்னோடு மட்டும் போகட்டும்.
__________________
நீண்ட கனவொன்றின் தொடக்கம் போல் இருந்தது - நம் முதல் கணங்கள்..

நீண்ட கனவொன்றின் தொடக்கம் போல் இருந்தது -
நம் முதல் கணங்கள்..
வார்த்தைகளினை விழுங்கிக்கொண்டே
உன்னைத் தவிர்த்து
அனைத்தினையும் நோக்கிய
அத்தருணங்கள் பற்றி எண்ணும் போது..
அது
நீண்ட கனவொன்றின் தொடக்கம் போலவே இருந்தது.

துயர் பற்றி அறியா நாட்களில்..
உன் பாடல்களில் லயித்துக்கொண்டே..
உன்னை ..
உன்னை மட்டுமே துதித்துக்கொண்ட
அக்காலங்களினை
இன்று நான் என்ன பெயரிட்டு அழைப்பது?
நீயும் சொல்லாமல் சென்றுவிட்டாய்.
அது நீயும் நானும் கண்ட நீண்ட கனவொன்றா?
இல்லை …
இப்போதும் நான் குழம்பிக்கொள்கின்றேன் பெண்ணே..
எதைச்சொல்லி அதை அழைப்பதென..

நீ ஒன்றும் திரும்பபோவதில்லை..
ஆனாலும்,
ஒரு சுமை போல அவ்வினாவுடன் அலைகின்றேன்
நீ வருவாய் என்கின்ற நப்பாசையுடன்…
__________________
உன்னுடனான உரையாடல்கள்..

ஒரு கனவுப்புள்ளியில் ஆரம்பமானது..
உன்னுடனான உரையாடல்கள்..
காலம் கரைக்கும் அவை பற்றி
உனக்கும் எனக்கும் யாதொரு கவலையுமில்லை.
உன் தோழியர் பற்றி..
அவர்களின் காதல் பற்றி..
இன்னும் உன் கனவுகள் பற்றி ..
இன்னும் இன்னும்
கண்கள் விரிய ..
ஓர் அபிநயத்துடன் சொல்லிச்செல்வாய்..
எதுவும் என்னுள் மிஞ்சாது.. உன் அபிநயங்கள் தவிர்த்து.

கனவுகள் இறந்து..
நிஜங்கள் மீதமான போது..
என்னுடன் நீயுமில்லை..
நாம் தொடர்ந்த அப்புள்ளியும் மறைந்தே போயிற்று.

ஆனாலும்
நான் சேமித்தே வைத்துள்ளேன்..
உன் அபிநயங்களினையும்…
நீ கொஞ்சமாய் தந்துவிட்டுப்போன உன்காதலையும்..
__________________
என் கவிதைகளினை கொல்பவளே..

நினைவுகள் வழியும் நாட்களில்,
எதையெல்லாமோ எழுத எண்ணுகின்றேன்..
ஆனாலும் முடிவதில்லை
யாவும் அந்தரத்தில் நிற்க..
நீ மட்டும் வியாபகமாகி தோன்றுகின்றாய்..

என் கவிதைகளினை கொல்பவளே..
என்னை விட்டுவிடு..
நான் மட்டும் வாழ்கின்றேன்..
உன் பொருட்டில் எனக்கேதும் அக்கறை இல்லை..
__________________

Tuesday, April 20, 2010

நீ எனும் விசம் தின்றே உயிர் வாழ்கின்றேன்.

உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
என் அறை முழுதும் அலைகின்றன..
என் காதலினை சபித்தவாறே..

நீ அறியாய்..
உன் அஸ்திரங்களால் மௌனியாகிப்போன
என்னை துன்புறுத்தும்
அவ்வார்த்தைகள் பற்றி நீ அறியாய்.

நீண்ட ஒரு மாலையில்
என்னோடு வானும் அழ….
நீ சொன்ன வார்த்தைகள்
இன்னும்
என்னையும்
என் காதலினையும் தூக்கிலிட்டுக்கொண்டே இருக்கின்றன.

உனக்காக
சேமித்த என் காதலினையும்
செதுக்கிய என் வார்த்தைகளினையும்
ஓர் நொடியில் அழித்தே சென்றாய்..

ஆனாலும்,பெண்ணே ,
இன்னும் நான்
நீ எனும் விசம் தின்றே உயிர் வாழ்கின்றேன்.
__________________

உனக்கும் எனக்குமான இறுதி வார்த்தையாக இது இருக்கட்டும்.



இன்னும் எதுவும் சொல்வதற்கில்லை –
உன் பிரியாவிடையின் ஆயத்தங்கள் தவிர,
ஏதுமற்றுப் போன என்னுள் இன்னும் எதைத்தேடுகிறாய்?
நீயுமில்லை எனும் போது….

உன் பொழுதுகளில் இனி எனக்கேதும் வேலை இல்லை
அது உனது அழைப்புடன் நின்று போனது.
நான் மீண்டும் தனித்தே போனேன்.
உன் நினைவுகள் ஏதுமின்றி…

வாழ்த்துக்கள்……..
இது –
உனக்கும் எனக்குமான இறுதி வார்த்தையாக இது இருக்கட்டும்
.
__________________