Subscribe

Sunday, October 31, 2010

சொந்த செலவில் அசின் வைத்த சூனியம்

நம் தமிழில் எப்போதும் எதற்கும் பழமொழிகள் உண்டு.. இன்று காலையில் பத்திரிகையில் ஒரு செய்தி படிக்கும் போது ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது. “ பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை” இப்போ அசினுக்கும் அந்த நிலைதான்
வேறொன்றுமில்லை, தமிழ் திரைப்பட்த்துறையினர் இட்ட தடையினை மீறி ( ஆமா!! இப்ப அந்த தடை இருக்கா இல்லியா??? ) படப்பிடிப்பிற்கு இலங்கை சென்ற அசின். படப்பிடிப்போடு தனக்கு தெரியாத வேலையை நிறுத்தியிருக்கலாம். நல்லது செய்கின்றேன் பேர்வழி என்று.. வட மாகாணத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து. தனது கலைச்சேவையின ( ??!@#@) இன்னும் கொஞ்சம் விரிவாக்கி, தமிழர்களுக்கு கண்சிகிச்சை முகாம் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து, தனக்கு “கலைச்சேவை” மட்டுமல்ல சமூக சேவை யிலும் ஆர்வமுண்டு என உலகுக்கு உரைத்தார் அசின்.

ஆனால் சனி இப்போது அவரது சமூக சேவை வடிவில் திரும்பி உள்ளது. விசயம் இதுதான், அம்மையார் சொந்த செலவில் நடாத்திய கண்சிகிச்சை முகாமில் சிகிச்சை மற்றும் கண்ணறுவை சிகிச்சை பெற்ற பத்து தமிழர்களின் பார்வை முற்றாக போய்விட்டதாகவும் மேலு பலருக்கு பல விதமான பக்க விளைவுகள் உண்டாகியுள்ளதாகவும் இலங்கையின் பிரபல நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு, யாழில் உள்ள இந்து மக்கள் கட்சி அசினுக்கு எதிராக வழக்கு தொடரவும் உத்தேசித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் அரசியல் ஆதாயத்திற்காகவும் , சுய விளம்ப்ரத்திற்காகவும் மேற் கொள்ளப்பட்ட இச்சிகிச்சை முகாம் மூலம் பாதிக்கப்பட மக்களுக்கு நஸ்ட ஈடு அளிக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொந்த செலவில் அசின் வைத்த சூனியம் இப்போது அவரை சூழ ஆரம்பித்துள்ளதா? பார்க்கலாம். 

Monday, October 25, 2010

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

சிறு பராயத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதென்றால் ஒரு வகை அலாதி ஆன்ந்தம் எல்லோருக்கும் உண்டுதான்.

அப்போதெல்லாம் தெருவில் உள்ள பொடிசுகள் சேர்ந்தால் புழுதி கிளம்பும். எவனாவது எங்கிருந்தோ ஒரு பூனைக்குட்டியினை கொண்டு வந்துவிடுவான். அதற்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்து சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தும் அப்பூனையினை நோக்கியே நகரும். அதுவும் அதற்கு உணவு வைத்துவிட்டு ஒளிந்திருந்து பார்ப்பது ஒரு குஷி. ஆனால் ஏனோ தெரியவில்லை, ஒரு பூனைக்குட்டியாவது, கார்ட்டுன்களில் வருவது போல, எங்களைக் கண்ட்தும் ஓடி வந்து கால்களினை உரசவோ, விளையாடவோ இல்லை. ஒன்று, ஈனமாக கத்திக்கொண்டிருக்கும் அல்லது எப்படியாவது ஓட முயற்சிக்கும். இப்படித்தான் ஆரம்பகால செல்லப்பிராணிகளுடனான தொடர்புகள் உண்டாயின.

பின்னர், புறாக்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் – பக்கத்து வீட்டு அண்ணன். அவரிடம் பெருந்தொகை புறாக்கள் இருந்தன. அவை சுதந்திரமாக உலவின. அதோடு அவரது கையசைப்புக்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அவை நடக்கும். கூண்டுக்குள் இருக்க, இரையினை எடுக்க என எல்லாவற்றுக்கும் அவர் ஒரு கை தேர்ந்த சர்க்கஸ் ரிங்க் மாஸ்டர் போல அவற்றுக்கு ஆணைகளினை தன் உடல் மொழி மூலம் சொல்வார். அது பார்க்க ரொம்ப சுவாரசியாமாக இருக்கும்.
அந்த ஆசையில் புறாக்கள் வாங்கி, அம்மாவின் திட்டுடன் கிடந்த தகரம் பலகை எல்லாம் சேர்த்து கூடுகள் தயாரித்து, பல்வேறு கனாக்களுடன் வாங்கிய இரு ஜோடிகளினையும் விட்டாச்சு. இதில் கூட இருப்பவனுகளின் அட்வைஸ்கள் வேரு. ஆளாளுக்கு அள்ளி இறைத்துக்கொண்டிருந்தானுகள். புறாக்கு படுக்க வைக்கோல், முட்டை சீக்கிரமா விட வேண்டுமெண்டா சிப்பித்தூள் இப்பிடி பலப்பல..

எனது கனவெல்லாம், பக்கத்து வீட்டு அண்ணன் போல புறாக்கள் தன்பாட்டுக்கு சுதந்திரமாக திரிய வேண்டும், எனது கை அசைவுகளுக்கு ஏற்றவாறு அவை நடக்க வேண்டும் என்பதே! சிறிது காலம் அடைத்து வைத்து அவற்றினை பழக்கிய பின் திறந்து விட்டால் அவை பழகிவிடும் என்ற ஆலோசனையின் பேரில் ஒரு சுப யோக சுப தினத்தில், புறாக்கள் வானில் பறந்து பின் என் கைகளில் வந்து நிற்பது போன்ற பல கனவுகளுடன் கூண்டினை திறந்து விட்டேன். வேகமாக சிறகசைத்தவாறு, நான்கு புறாக்களும் பறந்து எங்கள் வீட்டு க்கூரை மேல் நின்று கொண்டு என்னை தலையினை சாய்த்து பார்த்தன. நானும் ஒரு எதிர்பார்ப்புடன் கீழே நின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அப்பார்வையின் அர்த்தம் புரியவில்லை. “ இவ்வளவு அப்பாவியா இஎஉக்கியே? எப்பிடி பொழைக்கப்போற?” என்ற கேள்விப்பார்வை என்பது, பின்னர் புரிந்த்து. பிறகு அப்புறாக்கூடு, அம்மாவிற்கு விறகாக பயன்பட்டது எனக்கு மிக வருத்தமாய் போனது.

பின்னர் காலங்களுக்கும் கால்களுக்கும் ஓய்வில்லாமல் போனதால் வளர்ப்பு பிராணிகள் பக்கம் நாட்டம் செல்லவில்லை. தற்போது வாழ்க்கை வெளிநாட்டில் என்றான போது, ஆரம்பங்களில் தனிமையினை போக்க ஏதாவது செய்யலாம் என்ற எண்ண்த்தில் எனது அலுவலக அறையில் மீன் வளர்க்கலாம் என முடிவு செய்து அதனை செய்து வருகின்றேன். ஒரு சோடி தங்க மீன்கள் அதாங்க Gold fish உள்ளன. கண்ணம்மா, செல்லத்தாயி.. பெயரைக்கேட்டு சிரிப்பு வரலாம். எனது பாரதிக்கு பிடித்த பெயர் எனக்கும் பிடித்துள்ளது. இப்போது அவை இரண்டுக்கும் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

அலுவலக கதவினை திறந்து உள்ளே வருவது முதல் எனது ஒவ்வொரு அசைவ்களுக்கும் அவை செய்யும் சேட்டைகள் சுவாரசியமானவை. கூட பணியாற்றும் நண்பர்கள் கூட இப்போது அவற்றிற்கு ரசிகர்கள். என்ன! கொஞ்சம் கண்ணம்மா செல்லம்மா வினைத்தான் கடித்து குதறுவார்கள்.
எதுவும் தோணாத, வெர்மையான எனது கணங்களினை நிரப்ப நான் அவற்றின் மீதுதான் கவனம் செலுத்துவேன். நீர்னின் மேல் மெதுவாக விரல்களினை கொண்டு செல்லும் போது கை விரல்களினை சுற்றிக்கொண்டும் மெதுவாக தீண்டும் போதும் ஒரு வித மகிழ்ச்சி.. இப்படி அவை தரும் அனுபங்கள் ஏராளம்.. ஏராளம்… அவை இன்னும் வாழ நான் பிரார்த்திக்கின்றேன்.. எனக்காக நீங்களும் செய்யுங்களேன்…

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

__________________

Wednesday, October 13, 2010

உனக்கும் எனக்குமான தூரங்கள்


உனக்கும் எனக்குமான தூரங்கள்
ஓர் திரைக்கப்பால் ஒளிந்துள்ளன
மௌனங்களாகவும், அழுகைகளாகவும்,
திரைவிலக்கும் தருணங்கள் பற்றி
எப்போதும் நாம் பேசிக்கொள்கின்றோம்.
ஆனாலும்,
முடிவென்னவோ -, அவற்றின் கனதிகளை அதிகமாக்கவே..
நிபந்தனைகள் மீது நீ சத்தியம் செய்து சொல்
நீ தயாரா?
நம் திரைவிலக்க???

Monday, October 11, 2010

என்ன ஆச்சு எனக்கு? ஏன் அந்த புத்தகங்களை படிக்க முடியல


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் எனக்கு எப்போதிருந்து ஏற்பட்ட்து என்றால், அது சொல்வது மிக்க கடினம். உண்மைதான்.. எனக்கும் வாசிகசாலைக்குமான உறவு மிக அபரிதமானது. அது 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிலைத்து நிற்கின்றது. அப்பா அப்போதெல்லாம் எங்களூர் வாசிகசாலையில் இருந்து கொண்டு வரும் இரவல் நூற்களின் அட்டைப்படங்கள் தொடக்கம் உள்ளடக்கங்கள் வரை இன்றும் நிழலாடும்..

இருந்தும் இப்போது, எனது படுக்கையிலும் மேசையிலும் கிடக்கும் அப்புத்தகங்களை வெறித்துப் பார்க்கின்றேன்.. எனக்கு என்னவாயிற்று?? எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு புத்தகத்தினை வாங்கினால் முடித்துவிட்டு கீழே வைக்கும் எனக்கு என்னவாயிற்று? ஏன் இந்த புத்தகங்களை வாங்கி இரு வாரமாகியும் விரிக்க கூட மனமின்றி இருக்கின்றது.
இப்போதெல்லாம், காலையில் அலுவலகத்திற்கு போகும் போது,
கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அப்புத்தகங்களினை படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானம், அவ்வோய்வு நேரங்களில் உருமாறி அரட்டையாகவோ உறக்கமாகவோ மாறிப்போகும் அவலம்…… ஆனால், அவற்றினை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளே எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கின்றது..

சிறுவயதில், காமிக்ஸ் புத்தகங்களின் மீது ஒரு அபார காதல். அதன் கதை நாயகர்கள் பற்றிய பிரமாண்டமான பிம்பங்கள் இன்னும் உண்டு.. முகமூடி வீர்ர் மாயாவி, கார்த், லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி, ப்ளாஸ்கார்டன், என பலர். அவர்கள் பற்றிய பல பல சேதிகள் எங்கள் காமிக்ஸ் நண்பர்களிடையே எப்போதும் சுவாரசியமாக பகிரப்படும். ஆனால், இது அனைத்தும் மிக ரகசியமாக இருக்கும். வீட்டுக்கு தெரிந்தால், அப்பா புத்தகத்தையும் என்னையும் சேர்த்து கிழித்துவிடுவார். அவ்வாறு கிழிக்கப்பட்ட தடவைகளும் ஏராளம் உண்டுதான். ஆனாலும் அவற்றினை படிப்பதை விடவில்லை. அது ஒருவகையான போதை போல ஆகிவிட்டது.

வயது கொஞ்சம் ஏற, அப்பாவால் வாசிகசாலைக்கு செல்லும் பழக்கம் வந்துவிட்டது. அது அம்புலிமாமா, காமிக்ஸ் இலிருந்து, இன்னொரு புத்தக உலகினை திறந்துவிட்டது. சாண்டில்யன், கல்கி , புதுமைப்பித்தன், சுஜாதா என பலர் அறிமுகமானார்கள். சாண்டில்யனின் கடல்புறா, மூங்கில் கோட்டை நூற்களோடே வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாக என்னுள் உண்டு. சுஜாதாவின் கணேஸ், வசந்த் பற்றிய பிரஸ்தாபங்கள்.கணேஸாக என்னை உருவகித்துக்கொண்டு வசந்தாக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை எல்லாம் செய்த நேரங்களும் உண்டு..

இப்பிடி எல்லாம் இருந்த எனக்கு ஏன் இந்த புத்தகங்களை மட்டும் படிக்க முடியவில்லை. ஒரு வகையான அசூசை படர அந்நூற்களில் ஒன்றினை புரட்டலாம் என்ற எண்ணம் அலுப்போடு விட்டுவிட்டு வர, இன்று படித்தே விடுவது என்ற தீர்மானத்தோடு, மேசை மீது இருந்த அந்நூற்களில் ஒன்றினை எடுத்து தலைப்பினை நோக்குகின்றேன்.

“Management Accounting MBA 1st year” என்றிருந்தது.