Monday, October 25, 2010

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

சிறு பராயத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதென்றால் ஒரு வகை அலாதி ஆன்ந்தம் எல்லோருக்கும் உண்டுதான்.

அப்போதெல்லாம் தெருவில் உள்ள பொடிசுகள் சேர்ந்தால் புழுதி கிளம்பும். எவனாவது எங்கிருந்தோ ஒரு பூனைக்குட்டியினை கொண்டு வந்துவிடுவான். அதற்கு பெயர் வைப்பதில் ஆரம்பித்து சாப்பாடு ஊட்டுவது வரை அனைத்தும் அப்பூனையினை நோக்கியே நகரும். அதுவும் அதற்கு உணவு வைத்துவிட்டு ஒளிந்திருந்து பார்ப்பது ஒரு குஷி. ஆனால் ஏனோ தெரியவில்லை, ஒரு பூனைக்குட்டியாவது, கார்ட்டுன்களில் வருவது போல, எங்களைக் கண்ட்தும் ஓடி வந்து கால்களினை உரசவோ, விளையாடவோ இல்லை. ஒன்று, ஈனமாக கத்திக்கொண்டிருக்கும் அல்லது எப்படியாவது ஓட முயற்சிக்கும். இப்படித்தான் ஆரம்பகால செல்லப்பிராணிகளுடனான தொடர்புகள் உண்டாயின.

பின்னர், புறாக்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் – பக்கத்து வீட்டு அண்ணன். அவரிடம் பெருந்தொகை புறாக்கள் இருந்தன. அவை சுதந்திரமாக உலவின. அதோடு அவரது கையசைப்புக்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அவை நடக்கும். கூண்டுக்குள் இருக்க, இரையினை எடுக்க என எல்லாவற்றுக்கும் அவர் ஒரு கை தேர்ந்த சர்க்கஸ் ரிங்க் மாஸ்டர் போல அவற்றுக்கு ஆணைகளினை தன் உடல் மொழி மூலம் சொல்வார். அது பார்க்க ரொம்ப சுவாரசியாமாக இருக்கும்.
அந்த ஆசையில் புறாக்கள் வாங்கி, அம்மாவின் திட்டுடன் கிடந்த தகரம் பலகை எல்லாம் சேர்த்து கூடுகள் தயாரித்து, பல்வேறு கனாக்களுடன் வாங்கிய இரு ஜோடிகளினையும் விட்டாச்சு. இதில் கூட இருப்பவனுகளின் அட்வைஸ்கள் வேரு. ஆளாளுக்கு அள்ளி இறைத்துக்கொண்டிருந்தானுகள். புறாக்கு படுக்க வைக்கோல், முட்டை சீக்கிரமா விட வேண்டுமெண்டா சிப்பித்தூள் இப்பிடி பலப்பல..

எனது கனவெல்லாம், பக்கத்து வீட்டு அண்ணன் போல புறாக்கள் தன்பாட்டுக்கு சுதந்திரமாக திரிய வேண்டும், எனது கை அசைவுகளுக்கு ஏற்றவாறு அவை நடக்க வேண்டும் என்பதே! சிறிது காலம் அடைத்து வைத்து அவற்றினை பழக்கிய பின் திறந்து விட்டால் அவை பழகிவிடும் என்ற ஆலோசனையின் பேரில் ஒரு சுப யோக சுப தினத்தில், புறாக்கள் வானில் பறந்து பின் என் கைகளில் வந்து நிற்பது போன்ற பல கனவுகளுடன் கூண்டினை திறந்து விட்டேன். வேகமாக சிறகசைத்தவாறு, நான்கு புறாக்களும் பறந்து எங்கள் வீட்டு க்கூரை மேல் நின்று கொண்டு என்னை தலையினை சாய்த்து பார்த்தன. நானும் ஒரு எதிர்பார்ப்புடன் கீழே நின்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அப்பார்வையின் அர்த்தம் புரியவில்லை. “ இவ்வளவு அப்பாவியா இஎஉக்கியே? எப்பிடி பொழைக்கப்போற?” என்ற கேள்விப்பார்வை என்பது, பின்னர் புரிந்த்து. பிறகு அப்புறாக்கூடு, அம்மாவிற்கு விறகாக பயன்பட்டது எனக்கு மிக வருத்தமாய் போனது.

பின்னர் காலங்களுக்கும் கால்களுக்கும் ஓய்வில்லாமல் போனதால் வளர்ப்பு பிராணிகள் பக்கம் நாட்டம் செல்லவில்லை. தற்போது வாழ்க்கை வெளிநாட்டில் என்றான போது, ஆரம்பங்களில் தனிமையினை போக்க ஏதாவது செய்யலாம் என்ற எண்ண்த்தில் எனது அலுவலக அறையில் மீன் வளர்க்கலாம் என முடிவு செய்து அதனை செய்து வருகின்றேன். ஒரு சோடி தங்க மீன்கள் அதாங்க Gold fish உள்ளன. கண்ணம்மா, செல்லத்தாயி.. பெயரைக்கேட்டு சிரிப்பு வரலாம். எனது பாரதிக்கு பிடித்த பெயர் எனக்கும் பிடித்துள்ளது. இப்போது அவை இரண்டுக்கும் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது.

அலுவலக கதவினை திறந்து உள்ளே வருவது முதல் எனது ஒவ்வொரு அசைவ்களுக்கும் அவை செய்யும் சேட்டைகள் சுவாரசியமானவை. கூட பணியாற்றும் நண்பர்கள் கூட இப்போது அவற்றிற்கு ரசிகர்கள். என்ன! கொஞ்சம் கண்ணம்மா செல்லம்மா வினைத்தான் கடித்து குதறுவார்கள்.
எதுவும் தோணாத, வெர்மையான எனது கணங்களினை நிரப்ப நான் அவற்றின் மீதுதான் கவனம் செலுத்துவேன். நீர்னின் மேல் மெதுவாக விரல்களினை கொண்டு செல்லும் போது கை விரல்களினை சுற்றிக்கொண்டும் மெதுவாக தீண்டும் போதும் ஒரு வித மகிழ்ச்சி.. இப்படி அவை தரும் அனுபங்கள் ஏராளம்.. ஏராளம்… அவை இன்னும் வாழ நான் பிரார்த்திக்கின்றேன்.. எனக்காக நீங்களும் செய்யுங்களேன்…

நான் கண்ணம்மாவையும் செல்லத்தாயியையும் காதலிக்கின்றேன்…

__________________

2 comments:

ம.தி.சுதா said...

ஆஹா ரசிக்கக் கூடிய பதிவு ஒன்று.. நன்றிகள்...

போளூர் தயாநிதி said...

nalla pathivu parattugal
polurdhayanithi