Thursday, July 29, 2010

தனித்தவனின் புலம்பல்









வீதிகள் முழுதும் சாபங்களை கொட்டிச்செல்கின்றேன்
துணையுடன் செல்லும் அவர்களுக்காக
நிழல் தவிர்த்து ஏதும் துணையில்லா ஒருவன்
இது தவிர்த்து யாது செய்யமுடியும்?



Wednesday, July 28, 2010

ஆனந்த விகடன் நியூஸ்பேப்பர் டெய்லி வருதா இல்ல வாரத்துக்கா?

அழகான ஒரு பாடலை ஒரு செவிடனிடம் சொன்னால் எப்படி இருக்கும். அப்படியான அனுபவங்கள் இருக்கின்றதா உங்களிற்கு. எனக்கு சில வேளைகளில் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வேடிக்கையாகவும் பல தடவைகள் வலி தருபவையாகவும் அவை இருக்கும்.

சில விடயங்கள் அங்கீகரிக்கப்படும் போது, அல்லது நாம் இதை யாரிடமாவது பகிர வேண்டுமே என துடிக்கும் போது, உரிய ஆள் எமக்கு கிடைக்க வேண்டும். இல்லை என்றால், நான் மேற்சொன்னதுதான் நடக்கும். நான் ரசித்துக்கேட்ட ஒரு பாடல் பற்றி நான் பகிர வேண்டும் என்றால், அதே ரசனையுடன் உள்ள ஒருவர் இருக்க வேண்டும். இல்லை என்றால், அது அந்தச்செவிடன் கதி போலத்தான்.

அண்மையில் எனது பதிவுகளில் ஒன்று யூத்புல் விகடனின் , குட் பிளாக்ஸ் ஆக வந்திருந்தது. எனக்கு தலைகால் புரியாத சந்தோசம், அது எனது எழுத்துக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் மாதிரி எனக்கிருந்தது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அப்போது என்னை புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. நண்பனுக்கு தொலைபேசினேன்.

“ஹலோ!!” இது நான்.

“ஆ.. மச்சான் சொல்றா”

மேட்டர விடுவம்.
இருக்கிறாதுல கொஞ்சம் எழுத்து, வாசிப்பு எண்டு கதைக்கிறாது இவன் மட்டும்தான் என்பதால் இவனிடம் பகிர்ந்தால்தான் நன்றாக இருக்கும் என்பது என் கணிப்பு.

“ மச்சான் என் ப்ளாக், யூத் புல் விகடனில் குட் ப்ளாக் பேஜ் ல வந்திருக்குடா!!!!!!!!!!”

……………….” கொஞ்ச நேரம் மறுமுனையில் சத்தம் எதுவுமில்லை.

புரியவில்லையா அவனுக்கு. என்ற என் சந்தேகத்தை அவன் உறுதிப்படுத்தினான்.

“என்ன ப்ளாக்?” அதுசரி

“ உன்னிடம் அன்று காட்டினேனே, நான் எழுதுற அந்த .” என்று முடிப்பதற்குள்,

“ஓ உண்ட வெப்சைட்..” என்றான். எதையோ கண்டுபிடித்த குதுகலத்தில் வெப்பேJ, ப்ளாக் வித்தியாசம் தெரியாதவனா நீயீ என கூவல் சத்தம் கேட்டது..
ஆஹா .. நானாத்தான் வந்து மாட்டிக்கிட்டேனா.. என்று எனக்குள்ளெ சொல்லிகொண்டேன்.

“ஆமா.. அதுதான்..” என்றேன்.

“சரி. அதுக்கென்னடா இப்ப?”

“ இல்ல அதுல எழுதின ஒரு ஆட்டிகல், யூத்புல் விகடன் சைட் ல வந்திருக்கு” என இழுத்தேன் ஒர் சுரத்தில்லாமல்.

“யூத் புல் விகடனா..! அதென்னது, வெப்சைட்டா??”

எனக்கு வாய் விட்டு அலறவேண்டும் போல இருந்தது.

“அது ஆனந்த விகடண்ட வெப்சைட்..” என்றேன் வேண்டா வெறுப்பாக..

“ஆனந்த விகடன்…” என்று இழுத்தவன், தொடர்ந்து, “ அந்த நியூஸ் பேப்பர்(!!???) இப்ப டெய்லி வருதா இல்ல கிழமைக்கு ஒண்டா” என்று போட்டானே ஒரு போடு..

“மச்சான் அப்ப நான் பிறகு எடுக்கன்..” என்று அவனது பதிலையும் எதிர்பாராமல் தொலைபேசியினை வைத்துவிட்டேன். 
இனி இவனிடம், நமீதா நயந்தாரா , அசீன் தாண்டி வேறு எதுவும் கதைப்பதில்லை என்ற தீர்மானத்தோடு..

Sunday, July 25, 2010

பலதும் பத்தும் II

1.   உடம்பு கொஞ்சம் சோர்ந்து போகின்ற போதே , வாழ்க்கையின் சாரங்கள், விரக்திகள் எல்லாம் வருகின்றது. புத்தருக்கு ஞானம் கிடைத்தது போல. இன்று காலையிலிருந்தே உடம்பு முக்கியமாக கால்கள் இரண்டும் இனம் பிரித்தறிய முடியா வலியால் அவதியுறுகின்றது. வேலைகள் அப்படியே கிடக்க, ஒரு வித மோன நிலையில் கிடக்கின்றேன். வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள பல அசௌகரியங்களில் இதுவும் ஒன்று. உடம்புக்கு முடியவில்லை என்றால், நாம்தான் நம்மை பார்க்க வேண்டும். வேறு யாரும் இல்லை. இவ்வாறான நிலைமைகள்தான் வீட்டினை எமக்கு நிறைய நினைவுபடுத்துவதோடு, இன்னும் பலவற்றினையும் ஞபகப்படுத்தும்.

2.    உலகில் மனிதர்களினை விட சிறந்த புத்தகங்கள் எதுவுமில்லை” என எங்கோ படித்த ஞாபகம். அது உண்மைதான். சில நாட்களுக்கு முன்பு இரவுச் சாப்பாட்டுக்காக, ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். அங்கு இரு ஊழியர்களுக்கிடையில் தர்க்கம். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. சண்டையினை விலக்க எல்லோரும் முயற்சித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் இருவரினையும் பிரித்துக்கொண்டிருக்க,ஒரு வயதான பெரியவர் மட்டும், சண்டை இட்ட இருவரினதும் வாய்களினை மாறி மாறி மூட முயற்சித்துக் கொண்டிருந்தார். எனக்கு இது வித்தியாசமாகப்பட்டது. எல்லாம் முடிந்தும் அவரது செய்கை எனக்கு பிடிபடவே இல்லை. அவரிடமே கேட்டுவிட்டேன். சிரித்தவாறே அவர் சொன்னார். “ மகனே! கையால் அடிப்பது உடல் வலியோடு போய்விடும். அதன் பின் அவர்கள் நண்பர்கள் ஆகலாம், வாய் வார்த்தைகள் வாழ்க்கை முழுவதும் சுட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் அவர்கள் வாயினை மூட முயற்சித்தேன்.” என்றார். மனிதர்கள் புத்தகங்கள்தான். நாம்தான் கண்டு கொள்வதில்லை.

3.   சிலர் பற்றி நாம் வைத்துள்ள பிம்பங்கள், அவர்களினை நேரில் காணும் போது சடாரென உடைந்து நொறுங்கி விடும் இல்லையா? அப்படித்தான் எனக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது. அது-சின்மயி. சங்கீத மகா யுத்தம் என்று ஒரு நிகழ்ச்சி சன் டீவி யில் ஒளிபரப்பாகின்றது அதில் சின்மயிதான் நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் அணிந்துவரும் ஆடைகளினை நோக்கும் போது., அப்பா.......!! அது பார்வையாளர்களின் மீதான வன்முறை என்றே நான் சொல்லுவேன். ஆடை என்பது தமக்காக மட்டும் அணிவதில்லை பிறரும் அதை ஏற்கவேண்டும். இது என்ன கோலம். நீண்ட ஹீல்ஸ் உம் இறுக்கிய ஜீன்ஸும்.. அது அணிந்தால் பரவாயில்லை. ஆனால், எனது உட வாகுக்கு என்ன அணிந்தால் நன்றாக இருக்கும் என்கிற அறிவு கூடவா இல்லை. அதோடு மேடையின் நடுவில் அம்மணி நிற்கும் முறை அதற்கும் மேல்.. எங்க ஊரில சொல்லுவாங்க.. நாறின சோற்றுக்கு வெண்டிக்காய் கறி போல.......

4.   “களவாணி” திரைப்படம் அண்மையில் நான் பார்த்த திரைப்படங்களில் என்னைக்கவர்ந்த திரைப்படம். “பசங்க” பார்த்ததன் பின் இரண்டு முறை பார்த்த படம். கஞ்சாகருப்பு வின் காமடி சூப்பர். மனிதர், அவ்விளைஞர்களிடம் சிக்கி படுகின்ற பாடு, வயிறு வலிக்க வைக்கின்றது. குடும்பத்துடன் பார்க்கலாம். அந்த கதாநாயகியும் எங்கோ பார்த்த முகம் மாதிரி இருக்கின்றது.

5.   அலுவலகத்தில் இருக்கும்போது சற்று ஓய்வு கிடைத்தால் எதையாவது எழுத ஆரம்பித்துவிடுவேன்.. இதோ இப்படி. அங்கள் அலுவலகத்தில் ஒர் பிலிப்பினி இருக்கிறாள். இப்படி நான் எதையாவது கிறுக்குவதைக் கண்டால், எனது பெண் நண்பிக்கு காதல் கடிதம் எழுதுவதாக கூறிக் கேலி பண்ணுவாள். நானும் கண்டு கொள்வதில்லை. பிலிப்பினிகளின் வாழ்க்கை முறை ஒரு வகையான கொண்டாட்ட நிலையுடன் கூடியது என்பது எனது எண்ணம். இங்கு உழைக்கும் அனைத்தினையும் இங்கேயே அழித்து முடித்துவிடுவது. அதிலும் பெண்கள்.. அப்பா.. சொல்லவே வேண்டாம்.


என் கனவுகளும் எதிர்காலமும்

அதோ அம்மலைகளின் பின்
என் கனவுகள் உள்ளன என எதிர்காலத்திடம் சொன்னேன்.
நீண்ட ஒரு சிரிப்பொலியுடன் அது என்னை கடந்து சென்றது.
கோபம் தலைக்கேற,
தீர்க்கமாக என் கைகளினை நீட்டினேன் - அம்மலையினை நோக்கி
இப்போது மௌனம்,
பின்,
சிறிய கேவலுடன் அது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.
எதுவும் சொல்லத்தோன்றாமல்,
அவ்வழுகையின் பிற்பாடு கூட
இன்னும் என் கை அத்திசையினை நோக்கியே நீண்டவாறு உள்ளது.



Saturday, July 24, 2010

தொலைபேசிகளின் மௌனங்கள்

தொலைபேசிகள் மௌனிக்கும் போது
எனக்குள் சில திணுக்கிடல்கள் ஏற்படுகின்றன.
கவலைகள் சூழ்கின்றன.
ஒரு குழந்தை போல அதை வெறித்தவாறு நிற்கின்றேன்.
இதோ எனக்கான அழைப்பு வருகின்றது என்ற பிரமையுடன்.
ஆனால் அது மௌனித்தவாறே இருக்கின்றது.

நீண்ட மௌனம் எனக்கும் என் தொலைபேசிக்கும்
அதன் வெற்றி பற்றி எப்போதும் கவலை கொள்கின்றேன்.
ஆனாலும் அது நிகழவில்லை.

அறையில் நானும் என் தொலைபேசியும் மௌனமும்
வேறு எந்த பிரசன்ன்ஙகளினையும் நாங்கள் விரும்பவில்லை.
என் காத்திருப்பு நீண்டே போகின்றது.
ஆனாலும் அது முடிவதாக இல்லை.


Thursday, July 22, 2010

800 விக்கட்டுக்கள் !!!!!!!!!! யாராவது முறியடிப்பார்களா?



டெஸ்ட் வரலாற்றில் யாரும் உடைக்க முடியாத ஒரு இமாலய சாதனை 800 விக்கட்டுக்கள். பல்வேறு தடைகளினையும் தாண்டி இச்சாதனை படைத்த முரளிக்கு எனது வாழ்த்துக்கள்……………….

இது முறியடிக்கப்பட முடியாத ஒன்று என்றே கருத இடமுண்டு முரளிக்கு அடுத்த்தாக அதிக விக்கட் எடுத்தோர் பட்டியலில் உள்ளவர் ஹர்பஜன் 84 போட்டிகளில் 355 விக்கட்டுக்கள். முறியடிக்க முடியுமா?? நான் நினைக்கவில்லை.

வாழ்த்துக்கள் முரளி…..


Wednesday, July 21, 2010

வார்த்தைகள் பறக்கின்றன.

வார்த்தைகள் பறக்கின்றன.
தூக்கம் கலைந்த ஒரு மாலையில்
என் பேனாக்கள் திறக்கப்பட்டதும்
அவை பறக்கின்றன
ஒரு பட்டாம் பூச்சி போல,
இல்லை.. இல்லை..
ஒரு இலையான் போல..

அயர்ச்சி கவ்வும் அம்மாலையில்
படுக்கையில் முகம் புதைக்கும் ஒர் தருணத்தில்
மீண்டும்
அவை பறக்கின்றன
இப்போது அவை கொசுக்களாக மாறி..




Tuesday, July 20, 2010

நினைவிருந்தும் இறந்து போன ஆட்டோகிராபுfம் ஒரு நட்பும்…



கல்லூரிகள் முடியும் போது
சில ஞாபகங்களும்,
கொஞ்சம் நட்புடனும் சேர்த்து
நிறைய ஆட்டோகிராப் வாசகங்களும்

அழகாய் பூக்களிட்டு,
வார்த்தைகள் செதுக்கி,
கண்ணீரால் நனைத்து
கனதியாய் நிறையும் ஆட்டோகிராப்

காலங்கள் கரைய,
எப்போதாவது கதவு தட்டும் நினைவுகள்
அழைத்துச்செல்லும் ஆட்டோகிராப் நோக்கி.
சண்டை இட்ட சம்பவங்கள்,
சபலம் தட்டிய இரவுகள்,
சிரித்து பிரிந்த கணங்கள் என
அனைத்தும் நண்பன் முகத்தோடு திரும்ப
இப்போது எங்கிருக்கிறாய் நண்பா
என கேவலுடன் அவன் இலக்கம் தேடும் கண்கள்.

ஆயிரம் கதைகள் பேச
அவன் இலக்கம் அழைத்தால்..
“ நீங்கள் அழைத்த இலக்கம் பாவனையில் இல்லை”
என இயந்திரக்குரல் ஒன்று..
எம் நட்பினை கேலி செய்து போனது..

Monday, July 19, 2010

வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்


அழகான பெண்களினை
எப்போதும் என் கண்கள் தொடர்கின்றன.
அலைகின்ற மனசைக் கூட்டிக்கொண்டு.

வீதிகளில் நிறைகின்ற அழகுகளில்
கண்களும் மனமும் சருகாய் அலைய
நான் மட்டும் வேறாகி

கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு.

கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்



Sunday, July 18, 2010

இன்று ஐஸ் கிறீம் தினம்.




ஐஸ் கிறீமுக்கு ஏது இலக்கணம். பெரியோர் முதல் சிறியோர் வரை சப்புக்கொட்டும் ஐஸ் கிறீமுக்கு இன்று ஒரு நாள்- பிறந்த நாள் போல

இதை 1984ல் அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் ஆரம்பித்து வைத்தார். அதுவும் ஜூலை மாதத்தினை ஐஸ்கிறீம் மாதமாகவே பிரகடனம் செய்துள்ளார். ( அடிக்கிற வெயிலுக்கு அதான் சரி..) ஐஸ்கிறீம் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு ஐஸ்கிறீம் தினம். அதாவது இன்று.


ஆகவே மக்களே, இன்னைக்கு கஞ்சத்தனம், கருமித்தனம், டயட் அது இது எல்லாம் மறந்து ஐஸ்கிறீம் தினத்தை ஐஸ்கிறீம் சாப்பிட்டு கொண்டாடுவோம். ( நமக்கு எல்லா நாளும் ஐஸ்கிறீம் டே தான்…………)

Saturday, July 17, 2010

பலதும் பத்தும்..




1.      அபுதாபியில் இன்று வெப்ப நிலை 47°C. நெருப்பள்ளி இறைத்தது போல இருந்தது. உணவு வேளைக்கு அறைக்கு செல்லும் போது.. அப்பா..இப்படியான நேரங்களில்தான் வெறுப்பு வந்து ஒட்டிக்கொள்ளும். ஏசிக்குள்ளே இருந்துவிட்டு கொஞ்ச நேரம் இச்சூட்டினை தாங்கவே இவ்வளவு வேதனை என்றால். இங்குள்ள கட்டிட மற்றும் துப்பரவுத்தொழிலாளர்களின் நிலை.... மிகப்பரிதாபம்.உழைக்க இன்னும் எதை எல்லாம் இழக்க இருக்கின்றொமோ தெரியவில்லை.

2.    என்னோடு அறையில் இருக்கும் நண்பர் ஒருவர் கணிய அளவையிலாளர். நேற்று க்காலையில் ஜோகிங் போகும் போது, அவரது கம்பனிக்கு வந்துள்ள புதிய கட்டிட ப்ரஜக்ட் பற்றி பேசிக்கொண்டு வந்தார். அதில் அவர் சொன்ன விசயம் ரொம்ப சிரிப்பா இருந்தது. அதாவது, அந்த பில்டிங்க் 2 ஏக்கரில் வருகின்றதாம். 5000 டாய்லட் கள் உண்டாம். அதில் விஐபி டாய்லட் கள் கூட உண்டாம், அடப்பாவிகளா!!!!!!! டாய்லட் ல என்னடா விஐபி.. ஆய் போறதுக்கு என்னடா டீலக்ஸ் நொன் டீலக்ஸ்,. நாயகன் படத்துல நாசர் சொல்ற மாதிரி. “ சந்தனம் மிஞ்சிப்போனா ..................ல தேச்சுக்குற மாதிரி..”

3.    தீபம் தொலைக்காட்சி பார்க்க நேரிட்டது. புலம்பெயர் தமிழர்களால் பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி என கேள்விப்பட்டிருந்த்தால், சில பல எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால். ம்ஹூம் வறட்சி.. வறட்சி ....வறட்சி மட்டுமே.. பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஜெயா , விஜய் ரீவி களின் நிகழ்ச்சிகள். வேறு பெரிதாக ஒன்றையும் காணோம்.

4.       சிலர் எப்போதும் பழைய புண்களை நோண்டுவதில் அலதிப்பிரியம். மற்றவர்கள் பற்றி சிந்திக்காத நிறைய ஜீவன்கள் உலவுகின்றன. நீண்ட நாட்களுக்கு பின் என்னோடு படித்த ஒரு நண்பனை Face Book மூலமாக காணக்கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின் என்பதால், மிக்க மகிழ்ச்சி, தொடர்பினை ஏற்படுத்தி கதைக்க தொடங்கிய சில நிமிடங்களில், மேற் சொன்னவாறு கிளற ஆரம்பித்துவிட்டான். ஒரே ஆயாசமாக் போய்விட்ட்து. நாசூக்காக கதையினை மாற்றிப்பார்த்தும் பயனில்லை. இறுதியில் ஏதோ பொய் சொல்லி அவனிடமிருந்து கழர வேண்டியதாயிற்று. நீண்ட காலங்களின் பின் சந்தித்த மகிழ்ச்சி ஒரு நொடியிலேயே இல்லாமல் போய் விட்டது.

5.       சில பாடல்களினை கேட்கும் போது அதன் வரிகள் மட்டுமல்லாமல், சில காட்சிகளும் திடீரென ஈர்க்கும். நேற்று முதல் மரியாதை திரைப்பட்த்தில் இடம்பெறும், “ அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்” என்ற பாடலினை பார்த்துக்கொண்டிருந்த போது அது எனக்கு நிகழ்ந்தது. 





இந்தப்பாடலில் 1.26 நிமிடத்திலிருந்து 1.40லிருந்து வரு காட்சிகள் என்னை மிகவும் பாதித்த சில காட்சிகள் வருகின்றன. அதில் அந்தப் பெண் நடிகையின் முக பாவம் மிக அருமை க்யூட். அந்த கண்களில் உண்மையான காதல் வழிகின்றது.

Wednesday, July 14, 2010

விமல் வீரவன்சவின் உண்ணா நோன்பு - என்னா ஒரு கொள்கைப்பிடிப்பு................

அண்மையில் இலங்கையின் அமைச்சர் திரு. வீரவன்ச, ஐநா சபையினால் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆலோசனைக்குழுவினை கலைக்க கோரி, சாகும் வரையிலான ( ???? ) உண்ணா விரதப்போராட்ட்த்தினை நடத்தியது அனைவருக்கும் தெரியும் . இப்போராட்டத்தில் இரண்டு நோக்கங்களும் நிறைவேறவில்லை என்பது வேறு கதை. என்னென்ன நோக்கங்கள் என்கிறீர்களா?
ஒன்று – ஆலோசனைக் குழுவினை கலைப்பது.
மற்றது………….. உங்க யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.
விசயம் என்னவென்றால், இன்னைக்கு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது, பார்த்தவுடன் ஷாக் ஆயிட்டன்.

“இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” என்கிற மாதிரி, அமைச்சரின் உண்ணாவிரத மேடையில் பிஸ்கட் பெட்டிக்கு என்ன வேலை????????


அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.................







Tuesday, July 13, 2010

கனவு லோகத்திலிருந்து – நிஜ உலகு வரை

திடீரென இப்படி ஒரு சக்தி எங்கிருந்து வந்தது என நான் அறியேன். அட எல்லோரும் நான் இடும் ஆணைக்கு அடிபணிகின்றார்கள்..

அட இலங்கையில் என்னை தவிர எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.. ஜனாதிபதி என்னை சந்திக்க வெண்டும் என கோரிய அனுமதிக்கடிதம் அப்படியே என் மேசையில் கிடக்கின்றது. எப்போ அப்பொய்ண்ட்மெண்ட் கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டே, வரட்டும், இந்த முறை ஆளுக்கு நல்லா டோஸ் விடனும், எவ்வளவு நாளா இந்தப்பிரச்சினைகள் இழுத்துக்கொண்டே போறார். என்ன நினைச்சுக்கு இருக்காங்க.. வரட்டும் என எண்ணிக்கொண்டேன்.

பக்கத்தில் திரும்பினால், அட! அஜ்மல்.. என்னோடு ஐந்தாம் ஆண்டு வரை ஒன்றாய் படித்தவன்.. இவன் எங்கே இங்கே?? இவ்வளவு நாளும் எங்கிருந்தான். பல சிந்தனைகள் ஓடுவதற்குள், நாங்கள் முன்பு விளையாடும் பக்கத்து வீட்டு பாழ் வளவுக்குள் கிரிக்கட் மட்ச் நடக்கின்றது. வழமை போலவே அவன்- சக்கி அழுகுணி ஆட்டம் ஆடுகின்றான். பந்தை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கும் அவனை துரத்துகின்றேன். அவன் ஒரு வீட்டிற்குள் நுழைய, நானும் நுழைகின்றேன். ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருப்பது- அவளல்லவா?????????? இவள் எங்கே இங்கே? எதோ ஒன்று தொண்டையில் அடைக்க.. அவளைப்பார்க்க வேண்டாம் என திரும்பும் போது, அம்மா அழைக்கும் சத்தம்.. விளயாட கொஞ்சமும் விட மாட்டா என்று அலுத்தவாறே…. “ ஓ வாறன்.. “ என குரல் கொடுத்துக்கொண்டே ஓடுகின்றேன்.

ஓ வாறாயா? எழும்புடா எரும.. நேரம் ஆறரை.. ஆகுது .. கனவா?.. அடியேய் பிந்தினாய் எண்டா.. அந்த அரபி உரிச்சு தொங்க விடுவான்.. ஓடு.. ஓடு..” என்ற குரல் அசரீரி மாதிரி.. எங்கோ கேட்ட குரல்… திடீரென முன்னால் அறை நண்பன். என்ன நடக்குது இங்கே??????? அட கனவா!!!!!!!!!!

“என்ன கடும் கனவு போல” என்றவனுக்கு , ஒன்றும் கூறாமல் மழுப்பலாக சிரித்துக்கொண்டே… நிஜ உலகில் போராட கிளம்பி விட்டேன்

ஆனாலும், அக்கனவு- இன்னும் உள்ளே இறங்கிக்கொண்டே இருக்கின்றது…………..

தமிழிஸ் : என்னை ஏத்துக்கோ, ஏத்திக்கோ.


ஒண்ணுமில்ல மக்களே, வலைப்பூ ஆரம்பித்து நீண்ட காலம் ஆனாலும், சில மாதங்கள் முன்பிருந்தே சில, பல பதிவுகளினை இட ஆரம்பித்துள்ளேன். அதில் அனேகமானவற்றினை தமிழிஸ் திரட்டியுனூடாகவே, நண்பர்கள் பலர் எனக்கு அறிமுகமானார்கள்.

ஆனாலும் ஒரு குறை, இன்னும் எனது எந்த ஒரு பதிவும் பிரபல பதிவுகளில் வந்ததே இல்லை. நானும் அத இத எண்டு முடிஞ்ச முயற்சியெல்லாம் செய்றன். ம்ஹூம்…….. முடியல…. மத்த திரட்டிகளில் வந்திருந்தாலும், தமிழிஸ் இல் இனும் வரவில்லையே என்ற குறை என்னை அரித்துக்கொண்டே இருக்கின்றது.

பிரபல இடுகை பெற அல்லது அதிக வாக்குகள் பெற ஏதாவது கோர்ஸ் இருக்கா மக்கா??????? இருந்தா சொல்லுங்கோ….


Sunday, July 11, 2010

மனிதன் புரிவதில்லை

மனிதன் புரிவதில்லை

முகம் முழுதும் சிந்தனை கோடுகள்
கால்கள் நடக்க..
உலகம் உழல்கிறது.

யார் மீதும் யாருக்கும் அக்கறையில்லை.
சாலையோர மனிதர்கள்,
கையேந்தும் பிஞ்சுகள்,
புதினம் மட்டுமே...

ஆயிரம் சிந்தனைகள்
அவரவரை சூழ...
உலகம் மறந்த நிலையில்
அவர் அவர் உலகில்...

ஆனாலும்..
ஆடை இறங்கி
ஓர் நங்கை அருகில் சென்றால்..
அனைத்தும் மறக்கும்.
அடிக்கடி கண் அங்கே பறக்கும்.

மனங்களின் மாயங்கள்
மனிதன் புரிவதில்லை
__________________

Saturday, July 10, 2010

நீ சென்றுவிட்டாய்.









நீ சென்றுவிட்டாய்.

கருமைகள் வழியும்
ஓர் இரவில் என் கனவுகள் அரங்கேறின..
நீ சென்றுவிட்டாய்.
உண்மையில் நீ சென்றுவிட்டாய்..
தனிமையில் கூவும் குயில் கூட,
என் தனிமையினை பறைசாற்றுகின்றது.
நீ சென்றுவிட்டாய்..

அடிமனசினை இறுக கவ்வும்
மாலைப்பொழுதொன்றில்
நீ பிரிந்து சென்றாய்.
அதன் பின்னான பொழுதுகளில்..
மாலைப்பொழுதுகளிற்கு அஞ்சுகின்றேன் பெண்ணே..
அவை உன் ஞாபகங்களினை கொணர்வதால்.

உன் பாடல்கள் கூட என்னிடம் உள்ளன.
ஓர் அனாதைக் குழந்தை போல..
நீ சென்றுவிட்டாய்.

இன்னும் என் இரவுகள் முடியவில்லை..
ஒளியினை கொண்டு சென்ற-
நீ தூங்கு..
நான் எப்போதும் போல்
உன் பாடல்களுடன் காலம் தள்ளுகின்றேன்
__________________

Wednesday, July 07, 2010

2084ல் கூகிள்

தகவல் தொழில் நுட்பத்தின் வேகம் உலகினை இன்று எங்கோ கொண்டு செல்கின்றது. ஒரு தசாப்தத்திற்கு முன் நாம் நினைத்தே பார்த்திராத, சாத்தியமெ இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த பல விடயங்கள் சர்வ சாதாரணமாக் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது இப்படியே போனால், இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் என பலரும் பல வகையில் சுவாரசியமாக யூகிக்கின்றனர். அதில் என்னை கவர்ந்த ஒரு படம் கீழே: 2084ம் ஆண்டு கூகிளின் முகப்புத்தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்கின்றது.


2084 ல் அல்லது இனிவரும் காலங்கள் தனிமனித சுதந்திரத்தினை கேள்விக்குள்ளாக்கும் என்பது தெளிவு. அதோடு, குடும்பம் சார் உறவுகள் மற்றும் சமூக அமைப்புக்கள் என்பன சிதைந்து போகும் என்பதையும் செய்தியாக இப்படம் சொல்கின்றது போலவே எனக்குப்ப்டுகின்றது.


Monday, July 05, 2010

தனிமை கொல்லும் நட்புக்கள்

தொலைதூர வாழ்வில்,
அயர்ச்சிகள் தரும் நேரம்
வாழ்க்கை மெல்ல அலுக்கும் தருணங்களில்,
அவ்வழைப்புகள் வரும்
நட்புடன் நக்கலும் கலந்து..
ஊர்க்கதை பேசி,
திருமண திட்டங்கள் வகுத்து,
இன்னும் தோன்ற தோன்ற
பேசி முடியும் வேளைகளில்
உற்சாகம் தொற்றிக்கொள்ள
ஓரிரு நாளினை ஓட்டலாம்.

நாட்கள் நகரும் சக்கரமாய் நிற்பான்
எப்போதோ சந்திக்கும் போது
மெலிதாய் மலரும் ஒரு சுகானுபவம்.
ஒன்றாய் உண்டு களித்து,
ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும்,
காரணமின்றி சிரித்துக்கொண்டும்
களைப்புடன் அறை நோக்கி பஸ் ஏறுகையில்,
ஊர் நினைவுகள் பாரமாய் அழுந்தும்.

தூர தேசங்கள் தரும் தனிமையின் வலி மருந்துகளாய்
இன்னும் நிற்பர் என் நண்பர்கள்
சமீர், றிஸாட் , ஹாசீர் எனப்பலரும்…


விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்

இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு பதிவல்ல. ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல் அல்லது வாக்குமூலம். இதில் உள்ள நியாங்களினை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பது எனது திண்ணம்.
(சில விடயங்கள் மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கடிக்கப்படமுடியாது)

தமிழ் விடுதலை, தமிழர் உரிமைகள் என அது தொடர்பில் பல விடயங்கள் எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கையில், இன அடக்கு முறைக்கு எதிராக, ஆயுதங்களினை கையில் ஏந்திய விடுதலை இயக்கங்களில், விடுதலைப்புலிகளின் அஸ்திவாரம் மிக உறுதியானது. இன்று தமிழர் விடுதலை என்றால் , புலிகளினை தவிர்த்து நோக்க முடியாமல் இருக்கின்றது.

எந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராக இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்ட்த்தில் குதித்தார்களோ, அதே அடக்குமுறையினை இன்னொரு சமூகத்தின் மீது அவர்களின் கை ஓங்கி இருந்த காலத்தில் திணித்தார்கள் என்பது பற்றி அறிவீர்களா நண்பர்களே? அவர்கள் முஸ்லீம்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சுமூக உறவு, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் ஆரோக்கியமாக இருந்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் தாமாகவே தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில பல கசப்பான அனுபவங்கள், பழிவாங்கல்கள் போன்றவற்றால் இறந்து போனது. அடித்தட்டு மக்களிடம் , இன்னும் அவை சில சந்தர்ப்பவாதிகளாலும் இன்னும் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றது. அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் நன்மைக்கும் அமைவாக அமைந்தாலும், சில உண்மைகளினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் நான் பல தமிழக நண்பர்களினை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரதும் ஆதங்கம், ஈழத்தமிழ் உறவுகள் பற்றியதாக இருக்கும். அங்கு தமிழர்கள் படும் அவலங்கள், அழிவுகல் பற்றி எல்லாம் மிக மிக கவலையுடன் பகிர்ந்து கொள்வதைப்பார்க்கும் போது, எனக்குள் எழும் மற்றொரு கேள்வி- இதே இனப்பிரச்சினையால்,வேறொரு வகையில் பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை? அவர்களின் அவலங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் இருட்டடிக்கப்படுகின்றனவா? என்பது போன்ற வினாக்கள் என்னை அரித்துக்கொண்டிருக்கின்றன.

உடுத்த ஆடைகளுடன் மட்டும் நிர்க்கதியானவர்களாக யாழினை விட்டு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர்கள் அகதிகளாக புத்தளம் எனும் ஊரில் வாழ்கின்றனர். யாழின் பொருளாதாரத்தில் அன்று முக்கிய பங்காளிகளாக இருந்த மக்கள் இன்று அகதிகள். இந்நிலைக்கு காரணம் யார்? அடக்கு முறைக்கு எதிரான விடுதலைப்போராட்டம் என்பது, இன்னொரு இனம் மீதான திணிப்பா? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

அதே போல், கிழக்கில் எத்தனை முஸ்லிம் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன? எதற்காக இறக்கின்றோம் என்பதனை அறியாமல் இறந்த உயிர்கள் எத்தனை? பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது கொலைவெறியாட்டம் நடத்தப்பட்டது. ஏறாவூரில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். சிறு குழந்தைகள் பெண்கள் கோரமாக கொல்லப்பட்டனர். கர்ப்பிணிகள் வயிற்றினை கிழித்துக்கொல்லப்பட்டனர். கிறவல் குழி எனும் இடத்தில், விவசாயிகள் கைகள் கண்கள் கட்டப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர். இன்னும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயமும் விடுதலையின் பெயரால் கபளீகரிக்கப்பட்டிருக்கின்றன. பல நூற்றுக்கணக்கான வயல் காணிகள் “ மேய்ச்சல் நிலங்கள் “ என பிரகடனப்படுத்தப்பட்ட அடாவடித்தனங்களும் விடுதலை எனும் பெயரால் நிகழ்த்தப்பட்டன.
ஏறாவூர் மற்றும் காத்தான்குடி படுகொலைகள் பற்றி இன்று பேச யார் உள்ளார்கள். விடுதலை எனும் பேரில் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட சில அக்கிரமங்களின் பதிவுகள் இவை.




இவைகளின் நினைவுகள் ஒவ்வொரு முஸ்லிம்களின் மனங்களிலும் இன்னும் உள்ளன. தமிழர்களுக்கு எப்படி, முள்ளிவாய்க்கல் மற்றும் இன்னும் பலவோ அப்படி முஸ்லிம்களுக்கும் ஏறாவூர் ,காத்தான் குடி, , கிறவல் குழி என பலவும் உண்டு என்பதையும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் என்பது தமிழர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பது புரியப்பட வேண்டும். அப்புரிதல் அரசியல் தவிர்ந்து மன ரீதியாக நிகழ்ந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

அனைவரும் அவரவர் உரிமைகளுடன் மகிழ்சியாக வாழ வேண்டும் என்பதே எல்லோரது பிரார்த்தனையும், விட்ட தவறுகள் மேலும் எழாமல் பார்த்துக்கொள்வதும் எமக்கான கடமைகள் 

Saturday, July 03, 2010

உலகில் இப்பெயரினை கொண்டவன் நான் மட்டும்தானா?

பெயர் என்பது – அடையாளம். மனிதர்கள் தொடங்கி உலகில் உள்ள அனைத்திற்கும் பொதுவானது பெயர். பெயரின்றி ஏதும் உண்டா என்றால். என் அறிவிற்கு எட்டியவரை எந்த ஒரு பெயரிலிகளும் இல்லை என்றே கூறுவேன். பெயரிலி என்பதே சில வேளை அதை குறிப்பிடும் பெயராக மாறக்கூடும். இதில் மனிதர்களின் பெயர்கள் ஒரு குறியீடாக மட்டுமன்றி சமூக அந்தஸ்துள்ளதாகவும் உள்ளது.

அண்மையில் விஜை டீவியின் நீயா நானா நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. அதில் கோபிநாத்தால் பேசப்பட்ட விடயம் பெயர். சுவாரசியமாக இருந்தது. அந்நிகழ்ச்சிதான் இப்பதிவினை இடவும் தூண்டியது. பெயர்கள் தொடர்பாக உள்ள மனத்தடைகள், தாழ்வுச்சிக்கல்கள், மனரீதியான உணர்வுகள் என்பனவற்றை பங்கேற்பாளர்கள். முன்வைக்கும் போது, மலைப்பாக இருந்தது. இதன் பின் இவ்வளவு விடயம் உண்டா என்ற மலைப்பும் எனக்குள் உண்டானது. அதனோடு ஒத்ததாக எனது பெயர் பற்றிய சிந்தனை ஒன்றும் உதித்தது.

எனது பெயர் முஹம்மத் முஹைதீன் சர்ஹூன் (Mohammed Mohideen Sarhoon) எப்போதும் எனது தந்தையின் பெயரினை முதலில் இட்டுக்கொள்வேன். எனது பெயர் சற்றுக்கடினமாக இருப்பதாலும் இதனை நான் நிரந்தரமாக்கி கொண்டேன். முதல் தடவை எனது பெயரினை யாருக்காவது கூறும் போது, அவர்களால் சீக்கிரமாக கிரகிக்க் முடியாது. மீண்டும் ஒரு முறை நிறுத்தி நிதானமாக் சொன்னாலும், அவர்கள் அதனை கடித்து குதறி மென்று முழுங்கியே மீதியினை  சரூன் என்றோ ஷஹ்ரூன் என்றோ அழைப்பர். இதில் இன்னொரு அபாயம் சிலர், எனது பெயரினை, ஸெரோன் கிரகிக்கும் போது கொஞ்சம் அசூசையாக இருக்கும். இவ்வாறு கிரகித்துக்கொண்டு சிலர் என்னிடம் விளக்கம் வேறு கேட்பர். மத்திய கிழக்கில் ஸெரோன் என்ற பெயரில் உள்ள வெறுப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதனால் எனது பெயரினை இவ்வாறு கிரகித்துக்கொள்வோர் தொடர்பில் நான் மிக்க கவனத்தினை எடுத்துக்கொள்கின்றேன்.

நான் மேற்சொன்ன இந்த நடைமுறை சிக்கல்களுக்கு காரணம் எனது பெயர் அசாதாரணமாக தோன்றுகின்றமையே என்பது எனது எண்ணம். வழமையாக முஸ்லிமகள் தங்கள் பெயர்களினை அரபிலிருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்வர். இப்படி இருக்கும் போது, எனக்கு என் பெற்றோர் இட்ட இப்பெயர் பற்றி அவர்களிடம் நான் வினவிய போது. தெளிவான பதில்கள் வரவில்லை. ஏனெனில், நான் அறிந்த வகையில், சர்ஜூன் என்ற பெயர் உண்டு. ஆனால், சர்ஹூன்?? எனது பெயருக்கான அர்த்தம் என்ன என்பதில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம். ஆனாலும் பதில் கிடைத்ததோ மிக அண்மையில்தான். அரபியில் சரஹ் என்றால் விரிவுரைத்தல், அல்லது விளக்கமளித்தல் எனப்பொருளாம். ஆகவே எனது பெயரிற்கு விளக்கமளிப்பவன் என பொருள் சொல்லலாம்.

எனது பெயர் தொடர்பில் நான் ஆச்சரியப்படும் இன்னொரு விடயம், இதுவரையில் நான், எனது ஒத்த பெயருடைய ஒரு நபரைக்கூட சந்தித்ததில்லை. இப்படியான அனுபவங்கள் வேறு யாருக்காவது இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது. 

சரி, நாம் சந்தித்ததுதான் இல்லை, சில வேளைகளில் சமூக வலைத்தளங்களில் தேடிப்பார்க்கலாம் என எண்ணி பேஸ் புக் ஊடாக தேடியபோது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. Sarhoon எனும் பெயரில் எனது விபரங்கள் தவிர வேறு ஒரு நபரினையும் இதுவரை பேஸ் புக் காட்டவில்லை. (நீங்கள் வேண்டுமானாலும் முயற்சி செய்து பாருங்கள்) உலகில் உள்ள மிகப்பெரிய சமூக வலைத்தளத்திலேயே எனது பெயரினை ஒத்த யாரும் இல்லை என்றால். உலகில் இப்பெயரினை கொண்டவன் நான் மட்டும்தானா?? வேறு யாராவது இருந்தால் அல்லது நீங்கள் அறிந்தால் சொல்லுங்கள்.

( இதன் பின் பேஸ் புக்கில் எனது பெயரில் வேறு யாராவது இருந்தால், அது இப்பதிவினை பார்த்துவிட்டு நண்பர்கள் செய்யும் குறும்பாக இருக்கும் என்பது எனது அனுமானம். சரியா??? )