பெயர் என்பது – அடையாளம். மனிதர்கள் தொடங்கி உலகில் உள்ள அனைத்திற்கும் பொதுவானது பெயர். பெயரின்றி ஏதும் உண்டா என்றால். என் அறிவிற்கு எட்டியவரை எந்த ஒரு பெயரிலிகளும் இல்லை என்றே கூறுவேன். பெயரிலி என்பதே சில வேளை அதை குறிப்பிடும் பெயராக மாறக்கூடும். இதில் மனிதர்களின் பெயர்கள் ஒரு குறியீடாக மட்டுமன்றி சமூக அந்தஸ்துள்ளதாகவும் உள்ளது.
அண்மையில் விஜை டீவியின் நீயா நானா நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. அதில் கோபிநாத்தால் பேசப்பட்ட விடயம் பெயர். சுவாரசியமாக இருந்தது. அந்நிகழ்ச்சிதான் இப்பதிவினை இடவும் தூண்டியது. பெயர்கள் தொடர்பாக உள்ள மனத்தடைகள், தாழ்வுச்சிக்கல்கள், மனரீதியான உணர்வுகள் என்பனவற்றை பங்கேற்பாளர்கள். முன்வைக்கும் போது, மலைப்பாக இருந்தது. இதன் பின் இவ்வளவு விடயம் உண்டா என்ற மலைப்பும் எனக்குள் உண்டானது. அதனோடு ஒத்ததாக எனது பெயர் பற்றிய சிந்தனை ஒன்றும் உதித்தது.
எனது பெயர் முஹம்மத் முஹைதீன் சர்ஹூன் (Mohammed Mohideen Sarhoon) எப்போதும் எனது தந்தையின் பெயரினை முதலில் இட்டுக்கொள்வேன். எனது பெயர் சற்றுக்கடினமாக இருப்பதாலும் இதனை நான் நிரந்தரமாக்கி கொண்டேன். முதல் தடவை எனது பெயரினை யாருக்காவது கூறும் போது, அவர்களால் சீக்கிரமாக கிரகிக்க் முடியாது. மீண்டும் ஒரு முறை நிறுத்தி நிதானமாக் சொன்னாலும், அவர்கள் அதனை கடித்து குதறி மென்று முழுங்கியே மீதியினை சரூன் என்றோ ஷஹ்ரூன் என்றோ அழைப்பர். இதில் இன்னொரு அபாயம் சிலர், எனது பெயரினை, ஸெரோன் கிரகிக்கும் போது கொஞ்சம் அசூசையாக இருக்கும். இவ்வாறு கிரகித்துக்கொண்டு சிலர் என்னிடம் விளக்கம் வேறு கேட்பர். மத்திய கிழக்கில் ஸெரோன் என்ற பெயரில் உள்ள வெறுப்பு பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதனால் எனது பெயரினை இவ்வாறு கிரகித்துக்கொள்வோர் தொடர்பில் நான் மிக்க கவனத்தினை எடுத்துக்கொள்கின்றேன்.
நான் மேற்சொன்ன இந்த நடைமுறை சிக்கல்களுக்கு காரணம் எனது பெயர் அசாதாரணமாக தோன்றுகின்றமையே என்பது எனது எண்ணம். வழமையாக முஸ்லிமகள் தங்கள் பெயர்களினை அரபிலிருந்தே தேர்ந்தெடுத்துக்கொள்வர். இப்படி இருக்கும் போது, எனக்கு என் பெற்றோர் இட்ட இப்பெயர் பற்றி அவர்களிடம் நான் வினவிய போது. தெளிவான பதில்கள் வரவில்லை. ஏனெனில், நான் அறிந்த வகையில், சர்ஜூன் என்ற பெயர் உண்டு. ஆனால், சர்ஹூன்?? எனது பெயருக்கான அர்த்தம் என்ன என்பதில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம். ஆனாலும் பதில் கிடைத்ததோ மிக அண்மையில்தான். அரபியில் சரஹ் என்றால் விரிவுரைத்தல், அல்லது விளக்கமளித்தல் எனப்பொருளாம். ஆகவே எனது பெயரிற்கு விளக்கமளிப்பவன் என பொருள் சொல்லலாம்.
எனது பெயர் தொடர்பில் நான் ஆச்சரியப்படும் இன்னொரு விடயம், இதுவரையில் நான், எனது ஒத்த பெயருடைய ஒரு நபரைக்கூட சந்தித்ததில்லை. இப்படியான அனுபவங்கள் வேறு யாருக்காவது இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது.
சரி, நாம் சந்தித்ததுதான் இல்லை, சில வேளைகளில் சமூக வலைத்தளங்களில் தேடிப்பார்க்கலாம் என எண்ணி பேஸ் புக் ஊடாக தேடியபோது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. Sarhoon எனும் பெயரில் எனது விபரங்கள் தவிர வேறு ஒரு நபரினையும் இதுவரை பேஸ் புக் காட்டவில்லை. (நீங்கள் வேண்டுமானாலும் முயற்சி செய்து பாருங்கள்) உலகில் உள்ள மிகப்பெரிய சமூக வலைத்தளத்திலேயே எனது பெயரினை ஒத்த யாரும் இல்லை என்றால். உலகில் இப்பெயரினை கொண்டவன் நான் மட்டும்தானா?? வேறு யாராவது இருந்தால் அல்லது நீங்கள் அறிந்தால் சொல்லுங்கள்.
( இதன் பின் பேஸ் புக்கில் எனது பெயரில் வேறு யாராவது இருந்தால், அது இப்பதிவினை பார்த்துவிட்டு நண்பர்கள் செய்யும் குறும்பாக இருக்கும் என்பது எனது அனுமானம். சரியா??? )
No comments:
Post a Comment