Monday, June 27, 2011

விட்டுவிடு உன் இனிமைகள் மட்டும் போதும் எனக்கு

மழைக்கால தேனீர் போல இன்னும் என்னுள் உன் நினைவுகள் இதமாய் இருக்கின்றன.

அருகில் உட்கார்ந்தும் ஸ்பரிசம் பற்றிய பயங்களை கண்களில் காட்டும் உன் லாவகங்களை எப்போதும் நான் ஆதரித்திருக்கின்றேன்.

ஆனாலும், எப்போதாவது ஏற்படும் விபத்துக்களினை எதிர்கொள்ள நீ செய்யும் ஆயத்தங்கள் அப்போது போல் இன்னும் என்னுள் இனிக்கின்றது.

உனக்கெதுவும் மறந்திருக்காது, அக்கல்லூரி கெண்டீன் கூட,

யாரும் நோக்கா, தூர கதிரையில், பார்வையினை பருகிய படி, எதையாவது குடித்துக்கொண்டிருப்போம் மற்றவர்களுக்காய்..

மாலை வேளைகள் உன் முகம் தெளிக்கும் மஞ்சள் பூசி பூமி சிவக்கும் காலங்கள் இப்போதும் என்னை எங்கும் செல்லவிடாமல் உன்னருகே கட்டி வைக்கின்றது.

ஊடல் கொள்ள உனக்கான பல சந்தர்ப்பங்கள் எப்போதும் என்னிடமிருந்து வரும் என்றாலும் சபதங்கள் உடைத்து கண்ணீருடன் மீண்டும் காதல் சுமந்து வருவாய்..

மீண்டும் தொடங்கும் இன்னொரு இனிமையின் அத்தியாயம்.

நிறைய காதல் வழிகின்ற அக்கண்கள் பற்றி எப்போதும் நான் புலம்புவது உனக்குப்பிடிக்கும் என்பதால், எனக்கும் அதுதவிர வேறு எதுவும் தெரியாமல் போயிற்று, கரும்பு தின்ன யாரும் கூலி கேட்பதில்லைதானே,

விடுமுறைகள் எப்போதும் மெதுவாய்த்தான் நகரும், இடையூறுகளுக்கிடையில் எப்போதும் தொலைபேசுவாய். காலம் தாழ்த்தி கண்டுபிடிக்கப்பட்ட கைபேசிகளை நான் சபிக்கின்றேன். உனக்கும் எனக்கும் உதவாத அவைகள் இப்போது எதற்கு?

இன்னும் இன்னும்
காலங்கள் நகர…… என் காதலை என்னிடமே தந்து விட்டு ………
விட்டுவிடு உன் இனிமைகள் மட்டும் போதும் எனக்கு





Thursday, June 02, 2011

வாழ்த்துக்கள் தாயுமானவரே!!!!!!!!!


இசை ஞானி…

சிறுவயதில் அம்மாவின் தாலாட்டுக்குப் பிறகு அதிகம் பேரை உறங்க வைத்தது இவரின் இசைதான்…

வாழ்த்துக்கள் தாயுமானவரே!!!!!!!!!

இசைஞானியின் அனைத்து பாடல்களும் ரம்யமான அனுபவங்கள்தான்… அவற்றில் எனது மனசுக்கு நெருக்கமான சில பாடல்கள் இதோ உங்களுக்காக…


கீரவாணி.. இரவிலே கனவிலே பாட வா நீ..

( நீ பார்த்ததால் தானடி- சூடானது மார்கழி , நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி – இந்த வரிகளினூடு இளையூடம் இசை மனசின் செல்களில் ஊடுருவி என்னை ஒவ்வொரு முறையும் எங்கெல்லாம் அழைத்துச் சென்றுவிடுகின்றது)




வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… சிலு சிலு தென்றல் காற்றும் வீசுதே…




ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்..





புன்னகை மன்னனில் வரும் பாடல்கள்.. அப்பா!!!!!!!!!! I love you ராஜா! புதுப்புது அர்த்தங்கள் தரும் அலாதி ஆனந்தங்கள்….


இன்னும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயுமானவரே!!!!!!!!!!!!!!!!







இன்னும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயுமானவரே!!!!!!!!!!!!!!!!





கனவுகள் உண்டு வாழும் ஒரு பித்தனாகி .............

ன் 
உடைந்த குரலினை கேட்கையில் பறந்துவிடுகின்றன
என் சில தீர்மானங்களும் கோபங்களும்.
வார்த்தைகள் உறைய,
ஒரு முறை என்னையே தட்டிக்கொள்வேன் – நான்தானா என..
சொல்ல நினைப்பவைகள் மறந்து,
உளறல் மட்டும் என் பாஷையாகிப் போகும்,ரம்யங்கள்
எப்போதும் நம் சந்திப்புக்களில் நிகழ்ந்தேறிவிடுகின்றது.
உனக்கும் எனக்குமான காதலின் ஜீவன்
ஏதோ ஓர் மூலையில் கூத்தாட,
காதல் முற்றி,
கனவுகள் உண்டு வாழும்
ஒரு பித்தனாகி
வாழ்க்கை ஓட்டுகின்றேன் – உன் தயவினால்




Wednesday, June 01, 2011

பேனைகளையும் கையெழுத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்

 ழுதி ரொம்ப நாளாச்சு………

தலைப்பை பார்த்ததும் ஏதோ ஓரு பெரிய எழுத்தாளர் / பிரபல பதிவர் போல பீல வுடறான்ன்னு எண்ண வேண்டாம் நண்பர்காள்,,ஒன்னுமில்ல இன்னைக்கு காலைல வேலை விடயமாக பார்ம் ஒன்று நிறப்பும் போது ஏற்பட்ட ஒரு உணர்வுதான்….

“ எழுதி ரொம்ப நாளாச்சில்ல….”

அதேதான், பேனையினால் எழுதுவதைத்தான் சொல்கின்றேன்….
எல்லாம் கணினி மயமான இன்றைய உலகு, கையினால் எழுதுகின்ற பழக்கத்தினை மறப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. உண்மைதான் இல்லையா..எல்லாம் கணணிமயப்படுத்தப் படுகின்றது / பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒப்பமிடுவதில் கூட கணினியின் செல்வாக்கு உள்ளதை அனேக நண்பர்கள் அனுபவித்திருக்கலாம். மனேஜர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் கூட இப்போது எழுத்தில் இல்லை…. யாவும் கணினி கணினி…


பாடசாலை சென்ற காலங்கள் பற்றிய அசை போடல்களில் கட்டாயம் முதல் வகுப்பு பற்றிய நினைவுகள் எழுதப் பழகிய சம்பவங்கள் இன்றி வர சாத்தியமில்லை. வெள்ளை மணலில் சீராக துளாவி டீச்சர் கை பிடித்து எழுதப்பழக்கும் நினைவுகள் ஒரு அழிந்த புகைப்படம் போல இன்னும் நினவுகளில் உண்டு இல்லையா! நான்கு கோட்டு தாள்களில் டீச்சர் எழுதித் தரும் அகரத்தினை அப்படியே எழுதுகின்ற அந்த காலங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனாலும் இது தொடருமா என்றால்.. எதையோ இழப்பது போலவே உணருகின்றேன்.

ஆறாவது விரலாய் முளைத்து நிற்கும் பென்சில்கள்! கிரீடம் வைத்தது போல ரப்பர் வைத்து புதிய பென்சில்கள் கைகளில் கிட்டும் போது ஏற்படுகின்ற சந்தோசம்… அப்பா… அதிலும் கார்ட்டூன் படங்கள் கொண்ட பென்சில்கள் கிடைத்தால் இன்னும் இரட்டிப்பு.. அவை கிடைக்கின்ற போது எப்போதும் எச்சரிக்கையும் கூடவே கிட்டும் – உடைக்க கூடாது. கவனம் அது இது என! முதல் முறையாக பென்சில் சீவும் போது ஏற்படுகின்ற குதூகலம் அதில் எழுதும் போது எழுத்திலும் தெறிக்கும்.. கூர்கள் உடைந்து பென்சில் சிறுக்கும் போது அடுத்தது பற்றிய சிந்தனைகளில் இது பொருட்டின்றி போய்விடும்..

வகுப்புகள் ஏறும் போது, பேனைகள் பற்றிய பிரமிப்புக்கள் மெல்ல ஆரம்பித்து, எப்போது பேனையால் எழுதுவோம் என்ற ஏக்கம் எழும். பேனைகள் எழுதினால் அழியாது என்பது ஒரு பிரமிப்பு.. அதுவும் வர்ணப்பேனைகள் கறுப்பு சிவப்பு என… கொப்பிகளில் சிவப்பால் தலைப்பிட்டு கறுப்பால் எழுதுவது.. அதிலும் சேர்மார் எப்போதும் போடும் V.good கொப்பிகளில் சிவப்பால் இருப்பது ஏதோ ராணுவ வீரனுக்கு கிடைக்கும் பதக்கங்கள் போல.. போட்டி போட்டுக்கொண்டே அதை எண்ணிய காலங்கள் எல்லாம் உண்டு….அது மட்டுமா, அழகான கையெழுத்து என பாராட்டுக்கள் கிடைக்கின்ற போது ஒரு பெருமிதம், எழுத்துப்பிழை இல்லை என்ற பாராட்டுக்கள் வேற இன்னும் நினைவில் உள்ளன.. 


இன்றும் கையெழுத்துக்களும் பேனைகளும் பாடசாலைகளில் உயிர்ப்புடன் இருந்தாலும் ஏனோ அவை மறைந்து போகலாம் என்ற அச்சம் இன்றைய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நோக்குகின்ற போது வருகின்றது…  


அதுதான், பேனைகளையும் கையெழுத்துக்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியுமா என்ற வருத்தம் அனேகருக்கு என்னைப்போல் இருக்கலாம்………….