விட்டுவிடு உன் இனிமைகள் மட்டும் போதும் எனக்கு

மழைக்கால தேனீர் போல இன்னும் என்னுள் உன் நினைவுகள் இதமாய் இருக்கின்றன.

அருகில் உட்கார்ந்தும் ஸ்பரிசம் பற்றிய பயங்களை கண்களில் காட்டும் உன் லாவகங்களை எப்போதும் நான் ஆதரித்திருக்கின்றேன்.

ஆனாலும், எப்போதாவது ஏற்படும் விபத்துக்களினை எதிர்கொள்ள நீ செய்யும் ஆயத்தங்கள் அப்போது போல் இன்னும் என்னுள் இனிக்கின்றது.

உனக்கெதுவும் மறந்திருக்காது, அக்கல்லூரி கெண்டீன் கூட,

யாரும் நோக்கா, தூர கதிரையில், பார்வையினை பருகிய படி, எதையாவது குடித்துக்கொண்டிருப்போம் மற்றவர்களுக்காய்..

மாலை வேளைகள் உன் முகம் தெளிக்கும் மஞ்சள் பூசி பூமி சிவக்கும் காலங்கள் இப்போதும் என்னை எங்கும் செல்லவிடாமல் உன்னருகே கட்டி வைக்கின்றது.

ஊடல் கொள்ள உனக்கான பல சந்தர்ப்பங்கள் எப்போதும் என்னிடமிருந்து வரும் என்றாலும் சபதங்கள் உடைத்து கண்ணீருடன் மீண்டும் காதல் சுமந்து வருவாய்..

மீண்டும் தொடங்கும் இன்னொரு இனிமையின் அத்தியாயம்.

நிறைய காதல் வழிகின்ற அக்கண்கள் பற்றி எப்போதும் நான் புலம்புவது உனக்குப்பிடிக்கும் என்பதால், எனக்கும் அதுதவிர வேறு எதுவும் தெரியாமல் போயிற்று, கரும்பு தின்ன யாரும் கூலி கேட்பதில்லைதானே,

விடுமுறைகள் எப்போதும் மெதுவாய்த்தான் நகரும், இடையூறுகளுக்கிடையில் எப்போதும் தொலைபேசுவாய். காலம் தாழ்த்தி கண்டுபிடிக்கப்பட்ட கைபேசிகளை நான் சபிக்கின்றேன். உனக்கும் எனக்கும் உதவாத அவைகள் இப்போது எதற்கு?

இன்னும் இன்னும்
காலங்கள் நகர…… என் காதலை என்னிடமே தந்து விட்டு ………
விட்டுவிடு உன் இனிமைகள் மட்டும் போதும் எனக்கு

Comments

Jana said…
விடுமுறைகள் எப்போதும் மெதுவாய்த்தான் நகரும், இடையூறுகளுக்கிடையில் எப்போதும் தொலைபேசுவாய். காலம் தாழ்த்தி கண்டுபிடிக்கப்பட்ட கைபேசிகளை நான் சபிக்கின்றேன். உனக்கும் எனக்கும் உதவாத அவைகள் இப்போது எதற்கு?

அருமை ஐயா... பிரிவில்க்கூட ஒரு ஊமையின் தியாகம் ஒழிந்துள்ளது...

Popular posts from this blog

மலையாளிக் களவானிகள்!

பலதும் பத்தும் - III

கவியரசனின் ஜனன தினம் இன்று.