Saturday, August 21, 2010

தனிமையின் இரைச்சல்கள்

தனிமைகள் நீண்டு செல்கின்றன
எதிலும் ஒட்டாத மௌன்ங்களுடன்
தொலைதூர இரைச்சல்கள் போல
என்னுள் எதுவோ இரைந்து கொண்டே இருக்கின்றது.
அது - என் தனிமையின் போரோ??
எதோடு போரிடுகின்றது?
இல்லாத நட்பின் மீதா!
இறந்த காதலின் பேரிலா?
எதுவென்று புரியவில்லை
இருந்தும், மௌனமாக
அவ்விரைச்சலினை சுமந்தே திரிகின்றேன்.
இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்………………..


Friday, August 13, 2010

ஷேக் ஷயீட் பள்ளிவாசலில் ஒரு நாள்

அண்மையில் அபுதாபியில் உள்ள ஷேக் ஷயீட் பள்ளிவாசலுக்கு சென்றேன். உலகில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. ஒரே தரத்தில் 40,000 பேர் வணக்கத்தில் ஈடுபடலாம் என சொல்லப்படுகின்றது. மிக அழகான வேலைப்பாடுகள், வர்ணவிளக்குகள். என பல சிறப்புக்களினை கொண்டது. மேலும் அதிக வேலைப்பாடுகளுடன் கூடிய மிகப்பெரிய தரை விரிப்புக்கூட இங்குதான் உள்ளது. அங்கு என்னால் எடுக்கப்பட்ட சில புகைப்பட்டங்க்ள உங்கள் பார்வைக்கு இதோ,, ,, 


பிடிச்சிருந்தா குத்துங்க எஜமான் வாக்க குத்துங்க….



Monday, August 09, 2010

காக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை


அப்போதெல்லாம் அப்பாவின் கடிதங்கள் பற்றி
அம்மா
காக்கைகளிடம்தான் முறையிடுவாள்.
வேலிகளில் அமர்ந்தவாறு,
தலையினை சாய்த்து
அது கரைய தொடங்கும் அக்கணம்
அவளின் முகம் பிரகாசிக்கும் – ஏதோ சங்கீதம் கேட்ட மாதிரி
அவளின் எதிர்பார்ப்பு அனேகமாய் வீணாகாது
அடுத்த நாள் தபால்காரன் மணியடிப்பான்.
அப்பாவின் கடிதத்தோடு…

காலம் மாறி உலகு சுருங்க,
காக்கைகளுக்கு வேலை இல்லை.
அவைகள் பற்றி அம்மாக்கள் அலட்டுவதுமில்லை.




Sunday, August 08, 2010

நட்பின்றி உலகேது??

வாழ்க்கை நண்பர்களால் ஆனது. அது பாடசாலையில் தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு காலத்திற்கும் தொடர்ச்சியாகிக்கொண்டே இருக்கும். சிலர் எம் வாழ்க்கையின் சில கட்டங்களில் வந்து போவாஅர்கள். சிலர் தொடர்ச்சியாக வருவார்கள்.  பால்யம் முதல் இதுவரை நண்பர்கள் தொடர்போடு இருப்பது எவ்வளவு இனிமை.

மிக அண்மையில், எனது பாடசாலைத்தோழர்களில் ஒருவன் Face Book ல் எங்களது பாடசாலை நண்பர்கள் பலரினை ஒரு Album ஆக போட்டிருந்தான். பார்ப்பதற்கே மகிழ்வாக இருந்தது. சிலரினை 6 , 7 வருடத்தின் பின்னர் காண்கின்ற பாக்கியம் அவன் மூலம் கிடைத்தது. இன்னும் அந்த Album வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதன் மூலம் தொடர்பின்றி இருந்த பலரின் தொடர்பும் புதிப்பிக்கப்பட்டது.

உயர்தரம் முடிந்து எல்லோரும் பாடசாலை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணத்தில் ஆட்டோகிராப் எல்லோர் கைகளிலும்.
இது எல்லோருக்கும் இருக்கும் அனுபவம். இரண்டு மூன்று ஏடுகள் என அடுக்கி வைத்துக்கொண்டு, எல்லோரிடமும் வாங்கிக்கொள்வோம். அதில் அவனவன் எதுவெல்லாம் தோன்றுகின்றதோ அதை எல்லாம் கிறுக்கி வைப்பான். முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், நக்கல் நையாண்டிகள். உணமையான பிரிவின் வேதனைகள். மன்னிப்புக்கள் என உணர்வின் கலவையாக இருக்கும். அதில் சில கிறுக்கல்கள் எப்போதும் நினைவில் நிற்பவையாக இருக்கும். எழுதியவர்களும்தான்.
அதில் எனது நண்பன் ஒருவன் எனக்கு எழுதிய ஒன்று இன்னும் எனக்குள் உள்ளது. நினைக்கும் போதே அது ஒரு ரம்யமான உணர்வினை தரும் , எனது நட்பினை உணர செய்யும். இதுதான் அது,
“பலரிடம் நட்புண்டு எனக்கு,
ஆனால்-நேசிக்கும் நட்பில்லை யாரிடமும்,
உன்னைத்தவிர………

இன்றும் எனக்கு மிக்க அண்மையில் உள்ள நண்பன் ஒருவனின் வாக்கு மூலம். இது நடந்தது 2001 ல் ஆனால் இன்னும் எனக்குள் அவ்வாசகம் ஓடிக்கொண்டே இருக்கின்றது என்றால் பாருங்கள்.

இது மட்டும் இல்லை இன்னும் நிறைய உண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், எனது பாடசாலை நண்பர்கள் பலர் இன்னும் எனது நட்பெல்லைக்குள்ளேதான் இருக்கின்றார்கள். எனது வெளிநாட்டு வாழ்க்கையில் கூட கூப்பிடு தூரத்தில்தான் பலரும்.  இது வரமல்லவா??? 

அதனால்தான் சொல்கின்றேன்

“நட்பின்றி உலகேது”



Tuesday, August 03, 2010

வீடு நோக்கி கனவுகள் பயணிக்கின்றன.

வீடு நோக்கி கனவுகள் பயணிக்கின்றன.
எங்கோ தூரத்தில் அம்மா அழைக்கும் ஓசை,
தலை நிமிர்த்தி வானம் பார்க்கின்றேன்
அது ஒரு பறவையாகி வறண்ட வானில் பறக்கின்றது.

நாட்கள் முடிவின்றி நீள,
எனக்கான பயண ஆயத்தங்கள் கிடப்பிலேயே கிடக்கின்றன
பொறுப்புகள், தேவைகள் என பல பெயர்களுடன்.


Sunday, August 01, 2010

காலத்தினை விற்கும் ஒருவனின் நாள்

நீண்ட பகலொன்றின் ஆரம்பம் இன்று,
அதே கவலைகளுடன் எனது பயணம் ஆரம்பமானது
எதுவும் புதிதாய் இல்லை.
கடக்கின்ற மனிதர்கள் முதல்,
தானியம் தேடும் அப்புறாக்கள் வரை.
மேசை - தாள்களால் நிறைய,
கவலைகள் உருமாறி,
அலுவலாகத் தொடங்கியது.

காலம் கரைய, இதோ உணவு வேளை.
பசி மட்டுமே தணிக்கும் உணவினை தேடி ஓடுகின்றேன்.
அதோ அப்புறாக்கள் கூட இன்னும் மேய்கின்றன.
அசதியான ஒரு மாலையில் மீண்டும்,
எந்திரங்கள் முடுக்கப்பட,

முடிவில்
இதோ இரவின் எதிர்பார்ப்போடு
ஓர் நடைப்பிணம் அறை நோக்கி நகர்கின்றது.
நாளை
மீண்டும் அதே மீட்டலுக்கு தயாராகவென…