Monday, August 27, 2012

பேஸ்புக்கில் கலக்கும் சூப்ப்ர ஸ்டார்!


என்ன ஆச்சரியமாக இருக்குதா? உண்மைதான். நம்ம தலைவரின் ஸ்டைலினை வைத்து நிறைய கெப்ஸன்கள் இப்போது பேஸ்புக்கில் வலம் வர ஆரம்பித்துள்ளன. எல்லாம் ரசிக்கும் படி உள்ளதோடு. நகைச்சுவையாகவும் இருக்கின்றன.

தலைவா!! YOU ARE GREAT……..

எனக்கு பிடித்த சில உங்கள் பார்வைக்கு..

  • கண்ணா உன்னால முடியாது. ரொம்ப வாலாட்டினா அமெரிக்கா கூட ஜூஜூபி....


  • இது ச்சும்மா!! பொரி உருண்டைக்கு...டோன்ட் டச்!!

  • அது என் நாய் புரியுதா?

Saturday, August 18, 2012

விஜய் டீவியின் ஜூனியர் சுப்பர் சிங்கர் : முன்தீர்மானங்களுடன் நகர்கின்றதா? ( எனது பார்வையில் )

அழுதுவடிக்கும் சீரியல் கொடுமைகளை தாண்டி விஜய் டீவி வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை தருவதால் அதன் நிகழ்ச்சிகளில் எப்போதும் பரீட்சயம் உண்டு. முக்கியமாக – ஜூனியர் சுப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா?

இரு நிகழ்ச்சிகளும் முன்பிருந்ததை விட தற்போது வேறுபாதையில் செல்வது போல இதன் நெடுங்கால பார்வையாளர்களுக்கு தோன்றக்கூடிய சாத்தியங்கள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன. அத்லும் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3  ன் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சி மீதான எனது தனிப்பட்ட பற்றினை குறைத்துக் கொண்டே வருவதாக படுகின்றது. இது என்னைப் போன்ற பலரின் கருத்தாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

டொப் 10 போட்டியாளர்கள் தற்போது  7 ஆக குறைந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படுகின்ற போட்டியாளர்கள் இருப்பவர்களை விட சிறப்பாக பாடக் கூடியவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • -          ஆஜித்
  • -          ரக்சிதா
  • -          செபி
  • -          அகிலேஷ் போன்ற
நல்ல திறமை உள்ள குழந்தைகள் தட்டிக்கழிக்கப்பட்டு யாரோ ஒருவருக்காக இப்போது இந்நிகழ்ச்சி கொண்டு செல்லப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.

ஆஜித் – அந்த சிறுவன் பாடுவது மட்டுமல்ல அவனது ஸ்டைல் அங்க சைஅவுகள் என அனித்தும் ரசிக்கும் படி இருக்கும். தனிப்பட்ட வகையில் எனக்கு மிக பிடித்த இவன் நடுவர்களால் போட்டியிலிருந்து வெளியாற்றப்பட்டதற்கு காரணம் பாடல் வரிகள் மற்ந்து போனதே!  பாடுகின்ற திறமை என்பது குரல்வளம், மற்றும் இன்ன பிற சங்கீதத்துடன் தொடர்பான சமாச்சாரங்கள்தானே அதில் மனனமும் வருகின்றதா? என்ற கேள்வி, இவனது வெளியேற்றத்தின் போது எனக்குள் எழுந்தது. அதேவேளை, பாடும் போது வரி மறந்து மூச்சுவிட்டு பாடிய அஞ்சனா இன்னும் போட்டியில்! ஆஜித்தின் “போ நீ போ..” பாடல் இன்னும் இந்நிகழ்ச்சியில் ஒரு மகுடம். ஆனால் அவன் இன்று போட்டியில் இல்லை!




அதே போல ரக்சிதா! சிறப்பாக பாடிய சிறுமி. இன்று போட்டியில் இல்லை. சொல்லப்படுகின்ற காரணம் ½ மார்க் கம்மியாம்! டொப் 10 க்குள் வரக் கூடிய அனைத்து திறமையும் தகுதியும் இருந்தும் செபிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. தட்டையாக பாடிக்கொண்டிருக்கும் கவுதம் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். கௌதத்துடன் ஒப்பிடும் போது ஆஜித் எவ்வளவோ திறமைசாலி!

அகிலேஷ் – மேடைக் கூச்சமற்ற சிறுவன். அவனது பாடல்களில் தெரிகின்ற உற்சாகம் வேறு யார் பாடும் போதும் வருவதில்லை. அவன் வெளியேற்றப்பட்டமைக்கும் நடுவர்கள் எதையோ காரணமாக சப்பைக் கட்டு கட்டினர்.

இப்போது உள்ள போட்டியாளர்களில், நடுவர்களின் அருள் பார்வை எப்போதும் ஒருவரை நோக்கியே இருக்கின்றது. அது பிரகதி.  அவருக்கு சாக்லேட் அடைமழையாக பொழிகின்றது. அதோடு மட்டும் நின்றுவிடாமல் பாராட்டு மழை. அப்ப்ப்ப்ப்ப்ப்பா!!  நடுவர்கள் - அவரை மட்டும் பாராட்டுவதோடு நிற்காமல் அவரது அம்மாவையும் பாராட்டி தள்ளுகின்றார்கள். இது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது, சுப்பர் சிங்கரில் மற்ற குழந்தைகள் பிரதான நிகழ்ச்சிக்கு வருமுன்னர் பல்வேறு தடகளை தாண்ட வேண்டி இருக்க, இவர் மட்டும் திடீரென சுப்பர் சிங்கருக்குள் முளைத்தார். அதாவது எந்தவித முதற்கட்ட சோதனைகளும் இன்றி.. அன்றிலிருந்து இன்று வரை இவருக்கான இடத்தினை நடுவர்கள் எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றனர், இது நடுவர்கள் மட்டுமன்றி இந்த நிகழ்ச்சி மீதான நடுநிலையினைப் பற்றிய கேள்வியிஅனி எழுப்புகின்றது. இவருக்கு மட்டுமான முன்னுரிமைக்கு என்ன காரணம்? நடுவர்கள் வாய்கிழிய புகழும் அளவிற்கு இவரிடம் பாடும் திறமை உள்ளதா??

தற்போது உள்ளதில் யாழினி மற்றும் சுகன்யாவுடன் ஜெயந்த் ஆகியோர் இறுதிச்சுற்று வரை செல்லும் தகுதியுடன் தெரிகின்றனர். ஆனாலும் யாழினியின் திறமைகள் நடுவர்களால் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் அவர்களின் கருத்துக்கள், அடிக்கடி அந்த்க்குழந்தை டேஞ்சர் சோனுக்குள் வருவதை வைத்து எண்ண தோன்றுகின்றது.

இப்போது இந்நிகழ்ச்சி – முன்மொழியப்பட்ட யாரோ ஒருவருக்கு ஜூனியர் சுப்பர் சிங்கர் பட்டத்தினை கொடுக்க நடாத்தப்படுகின்ற ஒரு செட்டப் கேம் போலவே எனது பார்வைக்கு படுகின்றது.



Thursday, August 09, 2012

ஆளில்லா கடையில் டீ ஆத்த நடைபெறும் சண்டைகள் : மாகாண சபைத் தேர்தல் எனது பார்வையில்


தேர்தல் என்றால் ஒருவித திருவிழா மனநிலையே பெரும்பாலான நம்மவர்களிடம் காணப்படுகின்றது. அதற்கு காரணம் என எனக்கு தோன்றுவது. மாறி மாறி வாரி இறைக்கப்படும் அவதூறுகள கேட்பதில் உள்ள ஆர்வமும் வேடிக்கை பார்க்கும் மனநிலையும்தான். இது தவிர்த்து எமக்குள் இன்னும் பரவலான ஒரு அரசியல் பார்வை வந்துவிடவில்லை.

சிலர் ஏற்கனவே முடிவெடுத்து வைத்துவிட்ட வேட்பாளருக்கான வாக்கை இடுகின்றனர். இது அவர்களின் கொள்கைகளுக்கோ கட்சிப்பற்றுதலோ அல்லாமல் அதையும் தாண்டி இன்னபிற தேவைகளாக இருக்கலாம். மேலும் சிலர் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானம் இன்றி இடுகின்றனர்.  எப்படி பார்த்தாலும் இனம், சமூகம் சார் கொள்கைகள் அபிவிருத்தி மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களுக்காக வாக்களிப்பதும் அதை முன்னிறுத்தி வேட்பாளர்கள் வாக்கு கேட்பதும் இப்போது மிக குறைந்தே விட்டது. அதற்கான அரசியல் நாகரீகத்திற்குள் நாம் நுழைய இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம்.

மாற்றுக்கட்ட்சி / கருத்தினரி மதிப்பதோ அவர்களின் விவாதங்களுக்கு குற்றச்சாட்டுகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பதற்கோ எந்த ஒரு தரப்பும் தயாராக இல்லை. அதற்கு பதிலாக அனைவரும் கையில் எடுப்பது வன்முறையும் அவதூறுகளும்தான். இதன் போது தமது கொள்கைகள் மற்றும் தமது அபிவிருத்தி மற்றும் ஏனைய திட்டங்கள் பற்றிய விளக்கங்களை வசதியாக அனைத்து தரப்பு வேட்பாளர்களும் மறந்து விடுகின்றனர். அதனை வாக்காளரகளும் பெரிதாக இப்போது அலட்டிக் கொள்வதில்லை. தேர்தல் என்பது அவர்களை பொறுத்த வரையில் ஒரு திருவிழா போல.. முடிந்ததும் வென்றவர்கள் அவர்களின் பணிகளை பார்க்க போய்விடுவார்கள் நாம் நமது கவலைகளுடன் இருக்க வேண்டியதுதான்.

தேர்தல் கால வாக்குறுதிகள் பற்றிய எமது மதிப்பீடு உலகறிந்த ரகசியம். அதன் ஆயுள் தேர்தல் முடியும் வரை மட்டுமே. ஆனாலும் நாம் அதை அறிவதில் ஆர்வத்துடன்தான் இருக்கின்றோம். ஆனால் இப்போது நடைபெறுகின்ற மாகாண சபைத்தேர்தலில் வாக்குறுதிகள் குறைவாகவே இருக்கின்றது. இருந்தும் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை.

முஸ்லிம்கள் மீதான் நெருக்குவாரங்கள் கூடி உள்ள இத்தருணத்தில் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் உணர்வுரீதியிலான ஒரு உந்தலுக்கு மக்களை தள்ளுவதில் முனைப்பாக இருக்கின்றது. இதில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் சிறப்பாகவே பங்கெடுக்கின்றனர்.! ஈழத்தமிழர் விவகாரம் எப்படி தமிழக அரசியல்வாதிகளுக்கான திருவோடு போல இருக்கின்றதோ, அதிலிருந்து கொஞ்சமும் குறையாத வகையில் பள்ளி ஆக்கிரமிப்பு விவகாரம் மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சிகளால் கையாளப்படுகின்றது.

பள்ளிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் அதை எதிர்ப்பதாகவும் முஸ்லிம்கள் தமது வாக்குகளை தமக்கே இடவேண்டும் என்று பிராச்சாரம் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் - மத்தியில் இன்னும் ஆளும் கட்சியின் கூட்டாளியாகவே இருக்கின்றது, இதோடு நில்லாமல் மாகண்சபை தேர்தலின் பின் அரசுடனே கூட்டு வைக்கப்போவதாகவும் அறிவித்திருக்கின்றது. நடைபெறுகின்ற பள்ளி ஆக்கிரமிப்பிற்கு அரசே காரணம் என குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசுடன் இணைந்தே இருப்போம் அவர்களையே தொடர்ந்து ஆதரிப்போம் என கூறுகின்ற அரசியல் சாணாக்கியம் எந்த வகையில் சாரும் என எனக்கு தோன்றவில்லை.  இது மக்களை உணர்ச்சிவயப்படுத்தி வாக்குகளை பெற மேற்கொள்ளப்படுகின்ற வியாபர யுக்தி போன்றே தெரிகின்றது.

மறுபக்கம் அதே பள்ளிகள் மீதான தாக்குதல்களுக்கும் அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என நிரூபிக்க பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் ஆளும் தரப்பு முஸ்லிம் கட்சிகள். தாக்குதல் நடைபெற்ற காலங்களில் எல்லாம் மௌனியாக இருந்த அமைச்சர் அதா உல்லா தற்போது அது தொடர்பில் வாயினை திறந்துள்ளார். அதுவும் தேர்தலுக்காக. எதிரணியினர் இதை வைத்து நிறைய வாக்குகளை பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும்.

மற்றொரு புறம் இத்தேர்தல் பலருக்கு தமது அரசியல் ஸ்திரத்தினை உறுதிப்படுத்த ஒர் களமாக இருக்கின்றது. கொள்கைகள் சமூக நோக்கு என்பனவற்றை பின்தள்ளி, இன்ரு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முன் நிற்பது இதுதான் என அடித்துக் கூறலாம். அதற்கு வாக்காளர்கள் எனும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சந்தைப்படுத்தல் யுக்திகளும் விளம்பரங்களும் வெவ்வேறு வடிவங்களில் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வளவு களேபரங்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற இம்மாகாண சபைத் தேர்தல் அந்தளவிற்கு முக்கியமானதா என்ற கேள்விக்கு விடை தேடி சென்றால். கிடைப்பெதன்னவோ இல்லை என்றுதான்.

13வது யாப்புச் சீர்திருத்ததின் பிரகாரம் கொணரப்பட்ட இந்த மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே முதலில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பிரச்சினைக்குரிய இரு மாகாணங்களிலும்  இம்முறைமை வெற்றியளிக்கவில்லை. பெரிதாக இப் 13 வது சீர்திருத்தத்தில் பிரஸ்தாபிக்கப்படும் காணி மற்றும் போலிஸ் அதிகாரங்கள் இன்னும் வழங்கப்படாமை பெரியளவில் பேசப்பட்டாலும் மற்றொரு தரப்பில் அவ்வதிகாரங்கள் கூட வெவ்வேறு வழிகளில் ஜனாதிபதியினால் கட்டுப்படுத்தப்படக்குட்டிய சரத்துக்களை கொண்டிருப்பதால், அதை மாகாணசபைகள் பெற்றாலும் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்று விளக்குகின்றனர். அது ஒரு வகையில் உண்மையே!

13வது சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்கள் தொடர்பான சரத்துக்கள் பின்வருமாறு உள்ளன
  1. அரச காணிகள் – இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான காணிகள் எவ்வித மட்டுப்பாடுமின்றி தேசிய அரசாங்கம் பயன்படுத்தும்.
  2. மாகாண சபை காணிகள் – மாகாண சபைகளின் நோக்கங்களுக்காக தேவைப்படும் காணிகளை பெறுவது தொடர்பாக இது விளக்குகின்றது. அதாவது, மாகாண சபைகளின் தேவைக்காக பயன்படும் காணிகளின் பயன்பாட்டுத் திட்டம் தேசிய கொள்கைக்கு இணங்க உருவாக்கப்பட வேண்டியது மாகாண சபைகளின் முதன்மைப் பணியாகும். இவ்வாறான திட்டங்களில் காணியை பயன்படுத்துவதற்கான மதியுரையினை ஜனாதிபதியே வழங்குவார்
  3. அரச காணிகளின் பயன்பாடு தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதற்கான அதிகாரம் கொண்டுள்ள, ஒரு தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்படல் வேண்டும்
  4. மாகாணங்களுக்கிடையிலான நீர்ப்பாசன, காணி அபிவிருத்தித் திட்டங்கள் – இதன் கீழ் முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய அரசாங்கத்தாலே நிறைவேற்றப்படும். உதாரணமாக, மகாவலி அபிவிருத்தித் திட்டம் அரசாங்கத்தின் தேசிய திட்டமாகவே இருக்கும். இத்திட்டத்தின் மூலம் காணியையும், காணிகளைப் பெறவிருப்போரையும் தெரிவு செய்வதற்கான தத்துவங்களை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ளும். இவற்றை நடைமுறைப்படுத்தும் பங்கினை மாகாண சபைகள் மேற்கொள்ளும். குறிப்பாக, காணி தேவையானோரை இனங்கண்டு தெரிவுசெய்யும் பணி மாத்திரம் மாகாண சபைக்கு வழங்கப்படுள்ளது
இச்சரத்துக்கள் எழுத்தில் இருந்தாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. வந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை என்பதும் இச்சரத்துக்கள் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே மாகாணசபை என்பது அதிகாரங்களற்ற ஒரு அமைப்பு பெயரளவிலான இந்த சபைக்கான தேர்தல் அதன் உரிய நோக்கத்தினை புறக்கணித்து இன்ன பிற தேவைகளுக்காகவும் , பலரின் மறைமுக நிகழ்ச்சி நிரலுக்காகவும் பெரிய ஒரு விடயமாகவும், சிறுபான்மை மக்களின் இருத்தல் மற்றும் உரிமைகளுக்கான ஒரு வாய்ப்பாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது. ஆனால் இது ஒன்றும் நடைபெற போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும் அதற்கு கலைந்த கிழக்கு மாகாண சபையே சாட்சி.

ஆனாலும் நாம் சண்டை இட்டுக் கொண்டிருக்கின்றோம் ஆளில்லா கடையில் டீ ஆத்த!