Sunday, April 20, 2014

பிரம்பைக் கொடுத்து...

அலுத்துக் களைத்து அறை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன்.. இருப்பது 6 வது மாடியில் என்பதால், படிக்கட்டுகளைப் பற்றி எப்போதும் எண்ணிப்பார்ப்பதில்லை. (உடம்பு இளைத்தால் என்ன ஆவது!! ) பல நேரங்களில் லிப்டிற்குள் இடம் பிடிப்பதென்பது அக்கரைப்பற்று கல்முனை பஸ்ஸில் சீட் கிடைப்பது போல ரொம்ப அபூர்வம். ஆனால், இன்று ஏனோ யாரும் இல்லை. தனியனாக லிப்டினை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தேன். 

வாய் பிளந்து நின்ற லிப்டில் ஏறி, கதவை மூட முயலும் போது, மூச்சிரைக்க இரைக்க ஒரு நடுவயது மதிக்கத்தக்க நபர், கைகளை ஆட்டியவாறு வாயில் பக்கம் இருந்து லிப்டினை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். பார்க்கும் போது, பாவமாக இருந்ததால், லிப்டினை மூடாமல் அதன் விசையினை அவருக்காக அழுத்திக் கொண்டிருந்தேன். அடடா! நமக்கும் ஒரு பொதுச்சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்ற எண்ணம் இன்னும் நெஞ்சை விம்மச் செய்திருந்தது.

அருகில் வந்தவர், கைகளில் வைத்திருந்த பொதி ஒன்றினை அவசரத்தில் தவறவிட்டார். உள்ளிருந்த ஐந்தாறு ஆப்பிள்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதற, அதைப் பொறுக்கி எடுப்பதில் மும்மூரமாக இருந்தார். உண்மையில் அவருக்காக காத்திருந்த அந்த நேரத்தில் நான் எனது அறையை சென்ற‌டைந்திருக்கலாம் ஆனாலும், இன்றைக்கு இந்தப் பொதுச்சேவைக்கான வாய்ப்பை தவறவிடுவதில்லை என்ற பிடிவாதத்தில் இன்னும் அவருக்காக லிப்டினை திறந்தவாறே வைத்திருந்தேன்.

ஒருவழியாக, லிப்டினுள் ," மிக்க நன்றி " என்றவாறு பிரவேசித்தவர் , லிப்டின் 1 ஐ அழுத்திவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார். நானும், உள்ளே அழுதுகொண்டே லேசாக சிரித்தேன். பக்கத்தில் நின்ற பொதுச்சேவை சத்தமாக நக்கலுடன் எகத்தாளமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு தெளிவாக கேட்டது.

Tuesday, April 08, 2014

மான் கராத்தே..!

மான் கராத்தே என்பது தற்காப்புக் கலையின் கடைசிப்படி. அனைத்து தற்காப்பு முயற்சிகளும் எதிரியிடம் பலிக்காத போது, மான் கராத்தே தான் கை கொடுக்கும். மான் கராத்தே அனைவருக்கும் கைவந்த தற்காப்பு கலைதான். ஏனைய தற்காப்பு கலைகள் போல இதற்கு விஷேட ஆற்றல்கள் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. கொஞ்சம் மெலிந்த , கால்கள் நீண்டவர்களுக்கு இத் தற்காப்பு கலை ஒரு வரப்பிரசாதம். 

அதோடு மற்ற தற்காப்புக் கலைகள் போல இதற்குரிய செய்ன்முறைகளும் கஷ்டமில்லை. எதிரியின் தாக்குதல் சமாளிக்க முடியமால் உக்கிரமாகும் போது, மான் கராத்தே கை கொடுக்கும். அதன் செயன்முறைகள் பின் வருமாறு,

1. நான்கைந்து அடிகள் பின்வாங்குங்கள்
2.செருப்பை கைகளில் எடுக்கமுடியுமானால் சிறப்பு
3.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட வேண்டியதுதான்... 

கை கொடுங்கள்... மான் கராத்தே வில் நீங்கள் கை தேர்ந்துவிட்டீர்கள்

பின் குறிப்பு (1): இதில், 2 செய்ய முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அது, அனுபவத்தில்தான் கைவரப் பெறும். நான்கு ஐந்து முறை மான் கராத்தே வினை பிரயோகிகும் போதுதான் இது உங்களுக்கு கைகூடும். ஆகவே செருப்பை எடுப்பதில் கவனமாக இருந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு மான் கராத்தே கைகூட நாளாகலாம்.


பின் குறிப்பு (2) : நீங்க சிவ கார்த்திகேயனை தேடி வந்திருந்தீங்கன்னா அதுக்கு கம்பனி பொறுப்பேற்காது.. சாரி...