Saturday, December 24, 2011

அமீரக பிரம்மச்சாரியின் புலம்பல்கள்..


வேலை வேலை என அப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகில், தனிக்கட்டைகளுக்கான ( அதாங்க பிரம்ம்ச்சாரி) மரியாதை கொஞ்ச குறைவுதான்..

அதிலும் அமீரகத்தில்.. வெவ்வேறு வகையான பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்தே ஆகவேண்டும். அதில் பிரதானம் – வீடு/அறை. தங்குவதற்கான அறைகள் தேடுவதில் உள்ள சிரமங்களை இங்குள்ள நண்பர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்லுவார்கள். அந்தளவிற்கு கடினமான காரியம் அது. அதிலும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டு அனுசரிப்புக்கள் இருக்கும்.

பழைய அறை,சமைக்க அனுமதி இல்லை. விருந்தினருக்கு தடா, டீவி சத்தம் / பாத் ரூம் டைமிங்க், பின்னிரவு வருகை தடா………. என பல பல.. பட்டியலிட்டால் அது டெலிபோன் டிரக்ரி போல போய்விடும்.அதனால் இத்தோடு விட்டுவிடலாம்.

அதிலும் தற்போது, அமீரகத்தில் பிரம்மச்சாரிகளின் குடியிருப்புக்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தின் வெம்பார்வையும் விழுந்துள்ளது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி.. நிறைய நிறைய கட்டுப்பாடுகள் அந்நாட்டு மாநகர சபைகளினால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கொஞ்சமாவது பொருளாதார ரீதியில் தம்மை முன்னிறுத்த முனையும் எம்மை போன்ற ஆசியர்கள் சிக்கனம் என்பதை எப்போதும் முன்னிலைப்படுத்தியே வாழ்வதற்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன்படி, போக்குவரத்து செலவு, ரூம் வாடகை என்பவற்றினை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்கு குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவு, ஒரே அறையினை பலர் சேர்ந்து பயன்படுத்துதல். இதனால் கொடுக்கின்ற வாடகை தனிநபர் செலவில் குறைய வரும். ஆனால் தற்போது, அதில் அரசு கை வைத்துள்ளது. ஒரு அறையில் நான்கிற்கு மேற்பட்டோர் தங்க முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமும் நம்மவர்களே,
1.   சுத்தம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் பாகிஸ்தானிகள் / பங்காளிகள்
2.   ஒரே அறையில் 10 பேருக்கு மேற்கூட தங்கும் மலையாளிகள்.
பலவிதமான காரணங்களினால், தீ விபத்துக்கள், மற்றும் இட நெருக்கடி மூலம் ஏற்படும் இன்னொரன்ன அசௌகரியங்களினால் அரசு இந்த முடிவினை எடுத்திருக்கின்றது.

ஆனால், இதன் பிரதான காரணமாக இருப்பதென்னவோ, செயற்கைத்தனமாக அதிகரிக்கப்பட்டுள்ள வாடகைதான் என சொல்லலாம். குளியலறையுடன் கூடிய ஒரு அறை 3,500.00 திர்ஹம்களில் இருந்து 5,000.00 திர்ஹம்கள் வரை நான் வசிக்கும் அபுதாபி நகரில் வடகைக்கு விடப்படுகின்றது. இவ்வறைகள் அனேகமாக ப்ளாட்களின் பகுதிகளாகத்தான் இருக்கும். நான்கு பேருக்கு மேல் தங்க அனுமதி இல்லை. அதாவது வாடகையின் பகிரும் விகிதம் ¼ ஆக மட்டுறுத்தப்பட்டுள்ளது. இது ஓரளவு நல்ல நிலையில் உள்ள ப்ளாட்டுக்கள்.

ஆனால் இந்தளவு வாடகை கொடுத்து இருக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? இதே விலையில் கிடைக்கும் வசதி குறைச்சலான இடங்களில் குடியேறுகின்றனர் – ஆறுக்கு மேற்பட்டவர்களாக. இதன் போதுதான் மேற்சொன்ன விடயங்கள் நடந்தேறுகின்றன.

இருப்பிடம் என்பதன் அத்தியவசிய தேவையினை கருத்திற்கொண்டு செயற்கைத் தனமாக விலை ஏற்றப்படுவதை கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் எதனையும் இன்னும் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக பிழைக்க வந்த சாதாரணர்களின் மீதே மேலும் பிடிகள் இறுக்கப்படுகின்றன.
இதனால், பல பிரம்மச்சாரிகளின் இயல்பு வாழ்க்கை இப்போது அமீரகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக இட நெருக்கடி, சீரின்மை மற்றும், ஒரு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட 4 பேரினை விட அதிகமான குடியிருப்பாளர்கள் என இனங்காணப்பட்டால், அந்த கட்டிட உரிமையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது. அது புறக்கணிக்கப்படுகின்ற போது, மாநகர சபை அக்குடியிருப்புக்கான மின், நீர் வசதி என்பவற்றை முன்னறிவிப்பு எதுவும் இன்றி நிறுத்தி விடுகின்றது.

இனி என்ன?? வெளியேற வேண்டியதுதான்.. மீண்டும் ஓட்டம். உடைமைகளை அள்ளிக் கொண்டு மீண்டும் தேடல் படலம். நல்ல ஒரு இடம் குறைந்த விலையில் கிடைக்காதா என்ற அவாவுடன் தேடித் திரிய வேண்டியதுதான்.

வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றது. )) 

( படங்கள் : Gulfnews மற்றும் Google.. )








5 comments:

ப.கந்தசாமி said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. நாங்கள் நினைத்துக் கொண்டிருப்பது வேறு. வெளி நாடென்றால் அங்கு செல்பவர்கள் சுக வாழ்வில் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். நிஜம் வளறு விதமாக இருக்கிறது.

வருந்துகிறோம். அனுதாபங்கள்.

Yaathoramani.blogspot.com said...

வெளி நாட்டில் பணிபுரிவோர் படும் துயரங்களை
அவர்களது உறவினர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்
இது போன்ற பதிவுகளைப் படித்தாவது புரிந்து கொண்டு
அவர்களது பணத்தில் சுக வாழ்க்கை வாழ் நினைப்பதை
அடியோடு மறக்கவேண்டும்
மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம 1

ஹுஸைனம்மா said...

பேச்சிலர்கள் நிலைமை, வாசிப்பவர்களை பேச்சு-இலர்கள் ஆக்கிவிடுகிறது.

இரண்டு நாள் முன்புகூட, தண்ணீரும், மின்சாரமும் இல்லாத (நிறுத்தப்பட்டிருந்த) கட்டிடத்தில் குடியிருந்த பேச்சிலர்களில், மெழுகுவர்த்தியால் தீப்பிடித்ததில் இருவர் இறந்துவிட்டிருக்கிறார்கள்.

ஆனால், எத்தனை பேர் இருந்தாலும், கொஞ்சமாவது சுத்தம் என்பதைப் பேணி நடந்தால், பிரம்மச்சாரிகளை யாரும் வெறுக்கவோ விலக்கவோ போவதில்லை. ஆனால், சுத்தம் என்றால் எந்த கிரகத்தில் இருக்கும் பொருள் அது என்றுதான் நாடு, வயது என்ற விதிவிலக்கிலாமல் எல்லா பேச்சிலர்களும் கேட்கிறார்கள். :-(((((

குறையொன்றுமில்லை. said...

ஆமா நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான். எனக்கு ஒருஃப்ரெண்ட் வெளி நாட்லதான் இருக்காரு அடிக்கடி மெயில் பண்ணுவாரு நான் ஆன்லைனில் இருந்தா தவராம சாட்டிங்கும் பண்ணுவாரு இப்ப ஒரு4-மாசமா மெயிலும் இல்லே ஆன் லைனிலயும் வருவதில்லே கேட்டா ரூம்ல கூட இருக்கரவரு நெட் கனெக்‌ஷன் எடுக்க கையெழுத்து போடமாட்ராருன்னு சொல்ரார். அவர் பேருலதான் ரூம் எடுத்திருக்கோம் என்கிரார்

Mohamed Faaique said...

அபூதாபில இருக்கிற மச்சான் ரூமுக்கு அடிக்கடி வரும் வழக்கம் உண்டு. இப்பொழுது முன்பை விட வாடகையை குறைத்திருக்கிறார்களே!! இது அரசாங்க ஆணை... குறைவு என்பதற்காக ரொம்பவே அல்ல.. கொஞ்சம்..முன்பு 12 பேர் இருந்த ரூமில், இப்பொழுது 10 பேர் இருக்கலாம்..