Thursday, May 21, 2009


என் மறதிகள் வளரும் காலங்களில்
என் மறதிகள் வளரும் காலங்களில்
எப்போதும் போல்
உன்னிடமிருந்து
ஓர் அழைப்பு வரும்
ஓர் கத்தி போல
என் மறதிகளை அறுவடை செய்ய.

நீ சென்றுவிட்டாய்.
கருமைகள் வழியும்
ஓர் இரவில் என் கனவுகள் அரங்கேறின..
நீ சென்றுவிட்டாய்.
உண்மையில் நீ சென்றுவிட்டாய்..
தனிமையில் கூவும் குயில் கூட,
என் தனிமையினை பறைசாற்றுகின்றது.
நீ சென்றுவிட்டாய்..
அடிமனசினை இறுக கவ்வும்
மாலைப்பொழுதொன்றில்
நீ பிரிந்து சென்றாய்.
அதன் பின்னான பொழுதுகளில்..
மாலைப்பொழுதுகளிற்கு அஞ்சுகின்றேன் பெண்ணே..
அவை உன் ஞாபகங்களினை கொணர்வதால்.
உன் பாடல்கள் கூட என்னிடம் உள்ளன.
ஓர் அனாதைக் குழந்தை போல..
நீ சென்றுவிட்டாய்.
இன்னும் என் இரவுகள் முடியவில்லை..
ஒளியினை கொண்டு சென்ற-
நீ தூங்கு..
நான் எப்போதும் போல்
உன் பாடல்களுடன் காலம் தள்ளுகின்றேன்

யாருக்காக யார் சண்டையிடுவது?
அழகான சண்டைகள்
உனக்காகவே படைக்கப்பட்டன.

காரணங்கள் கூற முடியா,
ஆனாலும் சண்டை இடுவாய்.
செல்லமாக முறைத்து..,
அரை நொடி பேசாமலிருந்து..,
யாரும் காணா தருணங்களில் மெல்ல தட்டி..,
எந்நேரமும் சண்டையிடுவாய்.

அழகான மாலைப்பொழுதுகளில்,
உன் கேசம் அலையாக மாறும் அத்தருணங்களில்
நீ இட்ட சண்டைகள்-
என் சவக்குழியிலும் ஜீவித்திருக்கும்.
காலங்கள் மாற, காட்சிகள் மாற

நீ அன்று
அடுத்தவளிடம் கதைத்ததற்காக இட்ட
அச்சண்டைகளினை இன்று நினைக்கின்றேன்.

ஆனாலும்,

இன்று நிஜம் என்னைப் பார்த்து சிரிக்க,
யாருக்காக யார் சண்டையிடுவது?
அடிக்கடி ஒடி வந்து ஒட்டிக்கொள்கிறது
இக்கேள்வி மட்டும்..
உனக்கும் அப்படித்தானா?
__________________

ஒரு அண்ணனும் நானும்


அன்று மிக அவசரம் வேலையினை முடிக்க வேண்டும். கம்பியூட்டரில் மூழ்கிக்கொண்டிருந்தேன்.“அண்ணே…..” குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஹோட்டலில் துப்பரவுப்பணியில் ஈடுபடும் ஒருவர், வயசு 35 க்கு மேல் இருக்கும். முகத்தில் சோக ரேகை முழுதாக மூடியிருந்தது.என்ன? என்பது போல என்ற பார்வைக்கு, “உங்க ஆபிஷ கிளீன் பண்ண சொல்லி சூப்பர்வைசர் அனுப்பிச்சார்………….” என்றவாறு இழுத்தார். அவரின் பேச்சும் நடைத்தையும் என்னை அசௌகரியப்படுத்தின. வரிக்கு வரி எனக்கு அவர் மரியாதை செய்வது எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

“இந்தியாவா??”“ஆமா சார்..”“பெய்ரென்னங்க?”“கண்ணன் சார்”“ஐயோ அண்ணே….. நான் உங்க தம்பி மாதிரி என்ன சார் போட்டு இனி கூப்பிடாதீங்க”என்ற என்னை ஆச்சரியமாக ஏறிட்டார். அதன் பின்தான் அவரிடமிருந்து சினேகமான புன்னகை ஒன்று வந்தது. வந்த வேலையினை ஆரம்பித்துவிட்டார்.எனக்கு ஏனோ தெரியவில்லை அவரிடம் பேச வேண்டும் போல் ஒரு உந்தல்.“இந்தியாவில எங்கண்ணே?”“தஞ்சாவூர் பக்கம் மன்னார் குடி சா………….” என்றவர், “தம்பி” என்று மெதுவாக முடித்தார்.“துபாய் வந்து கன நாளா?”“இல்ல இப்பதான் ஒரு மாதமாகுதுங்க..”இவரை சகஜமாக்குவது ரொம்ப கஷ்டம் என்று எண்ணிக்கொண்டேன்.

அதன் பின் என் வேலைகள் எனது அட்மினிஷ்ரேற்றரின் முகத்துடன் ஞாபகம் வர, என் வேலைகளில் மூழ்கிப்போனேன். பகலுணவு இடைவேளை, துப்புரவு தொழிலாளர்களின் ஓய்வறையினை கடந்துதான் என் அறைக்கு செல்லவேண்டும். அவரின் நினைவு வர திரும்பிப்பார்த்தேன். ஓரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் இவரை விட இளையவர்கள் என்பதால், இவர் தனித்திருக்கின்றார் என்பது புரிந்தது. மாலை பணி முடிந்து வெளியேறும் போது, நின்று கொண்டிருந்தார். “என்னண்ணே வேல முடிஞ்சதா?”“ஆமாங்க.. கம்பனி வண்டிக்கு காத்திருக்கங்க”“ஐயோ அண்ணே.. சும்மா கதைங்க.. நான் ஒண்ணும் பெரிய ஆளில்ல, சும்மா கதையுங்கோ..” என்ற என்னைப்பார்த்து சிறிய புன்னகை“வண்டி வந்திடிச்சு. வர்ரேன் தம்பி” என்று அழுத்திச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அன்றிரவு ஏனோ தெரியவில்லை. அவரின் முகமே வந்து நின்றது. என்னென்னவோ சிந்தனைகள்..10, 11 வயதில் அம்மாவிடம் கேட்கும் ஒரு வினா இன்று மறுபடி வந்தது.“எனக்கு ஏன் ஒரு அண்ணன் இல்ல?” இது நான்.“நீதான் மூத்த பிள்ள. அதான் உனக்கில்ல, உன் தங்கச்சி மாருக்கு நீ அண்ணன்.” என்று ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டு அம்மா நகர்ந்துவிடுவார். அம்மாவின் பதிலில் எனக்கு திருப்தி இல்லை. காலம் மாறி எனது வாழ்க்கையில் சுமைகள் கூடிய பொழுதுகளில், “ சே……..! நான் மட்டுமே எல்லாவற்றையும் சுமக்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு தோள் கொடுக்க ஒரு அண்ணன் இல்லாமல் போனானே….” என்ற எண்ணம் சுய பச்சாதாபமாக வெளிவரும்.

இன்று என்ன நடந்தது எனக்கு? என்று என் மேல் எனக்கே ஆச்சரியமாகிப்போனது.வழமையான காலை..“தம்பி..” என்ற சினேகபூர்வமான ஓலி ஒருவித எதிர்பார்ப்புடன் என்னை திரும்பவைத்தது. அவர்தான்.நேற்றுப்பார்த்த சங்கோஜம் இன்று அவரிடம் குறைந்திருந்தது. சிறிய புன்னகையினை உதிர்த்துவிட்டு, தளபாடங்களை சுத்தப்படுத்த ஆரம்பித்தார்.“நாஷ்டா முடிஞ்சுதா அண்ணே”“ஆமா தம்பி ஆச்சுது”“பிறகு சொலுங்கண்ணே துபாய் எப்படி இருக்கு? வேல பிடிச்சிருக்கா” என்ற என் கேள்விக்கு ஒரு நீண்ட மௌனத்தின் பின்பே அவரிடமிருந்து பதில் வந்தது.“ எங்க தம்பி… 1ரூபா செலவழிச்சு இங்க வந்திருக்கு. மாச சம்பளம் 850 திர்ஹமு. சாப்பாட்டுக்கு போக மிஞ்சிறது 650 திர்ஹமு. இத வச்சி என்ன செய்றது? புள்ள குட்டிகள எங்க காப்பாத்துறது?” என்ற அவரது வார்த்தைகளில் தேங்கி நின்ற கவலை என்னையும் சூழ்ந்து கொண்டது“எத்தன பிள்ளைங்க?”“மூன்று பிள்ளைங்க தம்பி..” என்று ஒரு ஆயாசத்துடன் சொன்னார்.

அதன் பின் அவருக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டுப்போனது. எனது அலுவலக அறையினை அவரது கண்ணுக்குள் வைத்துப்பார்த்துக்கொண்டார். எப்போதும் , இறைந்து கிடக்கும் என் அறை இப்போது கிளீனாக காட்சி அளித்தது. ஏதாவது வேலை என்றால் எனது அறையினை கடந்து செல்லமாட்டார். உள்ளே வந்து, “வணக்கம் தம்பி” என்று சொல்லி ஏதாவது கதைத்துவிட்டுத்தான் செல்வார்.

ஒருநாள் மதிய வேளையில், அவரை கண்டேன்.“என்னண்ணே சாப்பிடல்லயா?” “சாப்பிடத்தான் தம்பி” என்றவாறு, “உங்க சாப்பாடு எப்படி சொந்த சமையலா?” என்றவரிடம், “அதுக்கு எங்கண்ணே நேரம், பாகிஸ்தானி ஒருவர் இருக்கார் அவர் சமைப்பார். இப்பல்லாம், ருசிக்கு ஒன்னும் கிடைக்கிற இல்ல. பசிக்குத்தான் சாப்பிடுற, வீட்ட எண்டா, அம்மா வக்கிர கருவாட்டுக்கொழம்பு மணத்திலயே சாபிடலாம். இஞ்ச அதெல்லாம் முடியுமா?” என்ற என்னை நோக்கி,“கருவாட்டுக்கறி எண்டா தம்பிக்கு நல்லா பிடிக்குமோ?” என்றவரிடம்,“பின்னே! அதுக்கு ஈடு இருக்கா அம்மா கையால சம்ச்சா அதவிட வேற என்ன வேணும்?”இதைக்கேட்டதும் சத்தமாக சிரித்தார். “அம்மா பிள்ளை..” என்றார்.

அது ஒரு வியாழக்கிழமை காலை,“தம்பி இன்னைக்கு உங்களுக்கும் சேர்த்து கறி கொணாந்திருக்கன். தப்பா எடுத்திக்கலேன்னா……..” என்று இழுத்தவரிடம்.“ஐயோ.. அண்ணே என்ன இது? எடுத்துவாங்க. அத சாப்பிடாம வேற என்ன வேல?”ஒரு குழந்தையை போல துள்ளியவாறு அக்கறி டப்பாவுடன் என் முன் நின்றார். “இன்னைக்கு மத்தியானம் ஒரு புடி புடிக்கன் பாருங்க” என்றவாறே அதை என் மேசையில் வைத்துவிட்டு அவரை நோக்கினேன். முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.எனது துரதிஷ்டம் அன்று பார்த்து மனேஜ்மென்ற் மீட்டிங்க் வடிவில் வந்து என் பகல் உணவை தின்று கொண்டிருந்தது. மாலை, 5 மணி, மேசையில் அவர் தந்த கறி. எடுத்துக்கொண்டே, அறையினை நோக்கி நடக்கலானேன். அப்பாடா! இன்றைக்கு பாகிஸ்தானியின், உருழைக்கிழங்கிலிருந்து விடுதலை. என்றவாறு இரவு உணவுக்கு அவரின் கறியினை திறந்தேன். கருவாட்டுக்கறி.. வாசனை மூக்கினை துளைத்தது. நல்ல ருசி.. ஆறேழு மாதங்களின் பின் நல்ல திருப்தியான சாப்பாடு. அவரின் அன்பினை எண்ணி நெகிழ்ந்து கொண்டேன்.அவரினை சந்திக்க வேண்டும் என்ற என் ஆதங்கம் பெரிதானது.

வெள்ளி விடுமுறை நத்தை போல நகர்ந்து ஒருவழியாக சனி வந்தது.காலை அவரைக்காண அலுவலகம் நோக்கி ஓடினேன். எப்போதும் நான் வருவதற்கு முன் அலுவலகத்தினை திறந்து துப்புரவு செய்யும் அவரை காணவில்லை. அறை பூட்டிருந்தது.அலுவலக உதவியாளனிடம் கேட்டேன்.“கண்ணன் எங்கே?”“தெரியாது.” என அசிரத்தையாக பதில் சொன்னான்.அவனை சபித்தவாறே, அவரது, சக தொழிலாளி ஒருவரைடம் வினவினேன்.“ஆ……….! கண்ணனா சார், அவர கன்ஸ்ரக்ஸன் சைட் ஒன்றுக்கு மாத்திட்டாங்க.

”ஏதோ ஒன்று என்னை விட்டு போனது போல உணர்வு.சூன்யமாக எல்லாம் தெரிந்தது..“வட் ஹெப்பன்ற் சேர் எனிதிங்க் ரோங்க்” என்ற பிலிப்பினிக்கும் ஒன்றும் சொல்லாமல் மேசையில் தலையினை கவிழ்த்துக்கொண்டேன். எந்த ஒரு உறவும் இல்லா உணர்வு இப்போது மேலும் சுடத்தொடங்கியது..

ஆனாலும், அவரின் கறி மணம் இன்னும் என் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.
யூனிவர்சிட்டி போன முதல் நாள்
போறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு..... அப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம்.

பாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான். பாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான்? இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்? என்ற என் ஈனக்குரலுக்கு,
திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.ஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....பல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள் வருமுன் அனுப்பமாட்டானா என நேர ஆரம்பிக்கும் போது எல்லாம் முடிந்து விட்டது. கிட்ட வந்துட்டானுகள்.

இனி ஒண்டும் நடக்காது. சலாம் வரிசைதான் என எண்ணி திரும்பினால்.................அட! நம்ம ஜாதி...... சே! அப்பாடா!...ம்...போடாங்.... மனசுக்குள் ஆயிரம் பீலிங்க்ஸ் ஓடி மறைந்தது..

நீங்களும் பெஸ்ட் இயரா? நாங்களும்தான்.. உள்ள தனிய போக பயமா இருக்கு அதான் உங்கள கூப்பிட வந்தம்.. என்றான் வந்தவர்களில் ஒருவன் ( அவன்தான் சம்மாந்துறை சறூக்- பிற்காலங்களில் எனது வலது கை இடது கை. எல்லாம். பிற்காலங்களில் கென்ரீனில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் அவனை கொறிப்போம்)

அஸ்கரினை பார்த்தேன்.... தற்காலிக நிம்மதி .........பக்கத்தில் இருந்த ஆட்டோவினை வாடகைக்கு அமர்த்தி உள்ளே போனோம்.

என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"


என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"
வெறும் கோப்பையாக
விடிகின்றன
என் காலைகள்

ஓர்
மெல்லிய பறவையின்,
சிறகசைப்பின் சுகம் போல,
எல்லாக் காலைகளையும்
உணர்கின்றேன்.
காலைகளின் காலம்
இறந்து போக......

வெறும் கோப்பை கூட என்னவாயிற்று?
மனசு வழிய குப்பைகள்,
உணர்வுகளின் அழுக்குகள்,
ஓர் விரக்தி,
பல கவலைகள்,
இன்னும் சில ஞாபகங்கள்.
என எதுவெல்லாமோ......

இரவுகள்...
மனசின் மீது
அவஸ்தைகளை அடுக்கிப் போக...
திணறுகின்ற மனசு..
பாவம்!

ஏதும் புரிவதில்லை.
வெறுமையாகிப்போன வானமொன்றில்
ஒற்றையாய் கூவிச்செல்லும்.....
பறவை ஒன்றின் உணர்வு.
இன்னும் நெளிகின்றேன்.
எதுவென்று புரியாமல்.
ஆனாலும்

அடுத்த காலையின்
பிரசவிப்புக்காய்
என்
இரவுகள் ஒவ்வொன்றும்,
"என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"
என்ற பிரார்த்தனையுடனே
முடிகின்றது.




என்றும் போல்,
இன்றும் எனது காலைகள் ஜீவிதமற்று விடிந்தது.
இன்னும் நான் வாழ்கின்றேன்-
உனக்காகவும், உனது வாழ்க்கைக்காகவும்.....

எப்போது என்னில் ஒட்டிக்கொண்டாய்?
காலம் பொய்த்த என் வெளிகளில்,
இன்றோடு நீயும் இணைந்து ஓர் யுகம் முடிந்தது.
எதைப்பெற்றாய் என்னிலிருந்து?
கொஞ்சம் மகிழ்வினையும்
நிறைய கண்ணீரினையும் தவிர.......

எனக்காக நீ கூறலாம்..
என் உலகம் நீதான் என.
ஆனாலும்,
நான் நம்புவதற்கில்லை பெண்ணே..
நீ உன் உலகினை ஒளித்து வைத்துள்ளாய்..
என் நிழலில் குடியிருக்கெவென.
கொண்டாடப்படும் மரணங்கள்
இன்று உலகெங்கும் இலங்கையின் போர் பற்றியும் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்கள் தொடர்பான முரண்பட்ட கருத்துக்கள் அதிலும் பிர்பாகரன் தொடர்பான கருத்துக்கள் அவரின் மரணம், அது நோக்கப்படுகின்ற முறைகள் தொடர்பாக ஏதாவது சொல்லவேண்டும் போல் தோன்றியதால் இதனைப்பதிக்கின்றேன்.

இன்று இலங்கையில் அரசு தேசிய விடுமுறை அறிவித்துள்ளது. காரணம் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அதனை கொண்டாட மக்களிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது போலவே என் பார்வையில் இது படுகின்றது. உண்மையில் ப்புலிகள் மீதுள்ள பிழைகள் களங்கங்கள் அனைத்தினையும் ஒதுக்கி விட்டு சாதாரண மனித நேயமுள்ள ஒரு மனிதன் என்ற வகையில் இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் நான் குழம்பியே நிற்கின்றேன்.


அங்கீகரிக்கக்கூடிய காரணங்களின் நிமித்தம் தனது சமூகத்தின் விடுதலை தொடர்பில் அக்கறை கொண்ட ஒரு விடுதலைக்குழுவின் அழிவு இன்னொரு பக்கத்திற்கு கொண்டாட்டமாக மாறுகின்றது என்கிற போது, எங்கே இருந்து இம்மனநிலை உண்டாகின்றது? அவ்வியக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினாலா? அல்லது அச்சமூகத்தினை வெற்றி கொண்டு விட்டோம் என்கின்ற மனநிலையா? புலிகள் என்ர தனிப்பட்ட இயக்கம் கொண்டிருந்த உரிமைப்போராட்டம் தொடர்பில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் அது காலத்தின் கட்டாயமாகவே இருந்துள்ளது. ஆனாலும் அதற்கான அவர்களின் வழிமுறைகளில் இருந்த சில அசௌகரியங்கள் புலிகள் தொடர்பானதும் அவர்கள் இலக்கு தொடர்பானதுமான திசைதிருப்பல்களினை இலகுப்டுத்திச்சென்றுள்ளன என்பது எனது தனிப்பட்ட க்ருத்து. அந்த வகையில் நோக்க்குகின்ற போது, இக்கொண்டாட்டங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளிற்கான பதில் என்றே கொள்ளலாம்.

இருந்தும் பெரும்பான்மை இனத்தவர்களின் மனநிலை இதனோடு நின்றதாக தெரியவில்லை. அவர்கள் தமிழ் சமூகத்தினை வெற்றி கொண்டதாகவே கருதுகின்றனர் என்பதும் தற்போது கொழும்பு போன்ற நகர்களில் தமிழர்கள் மீது சிறிது சிறிதாக நடைபெறும் அத்துமீறல்களும் சான்று பகர்கின்ரன. இது மலினப்பட்டுப்போன ஒரு அரசியலின் மாற்று வடிவம் என்றே கருத இடமுள்ளது.