
வாய் பிளந்து நின்ற லிப்டில் ஏறி, கதவை மூட முயலும் போது, மூச்சிரைக்க இரைக்க ஒரு நடுவயது மதிக்கத்தக்க நபர், கைகளை ஆட்டியவாறு வாயில் பக்கம் இருந்து லிப்டினை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். பார்க்கும் போது, பாவமாக இருந்ததால், லிப்டினை மூடாமல் அதன் விசையினை அவருக்காக அழுத்திக் கொண்டிருந்தேன். அடடா! நமக்கும் ஒரு பொதுச்சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்ற எண்ணம் இன்னும் நெஞ்சை விம்மச் செய்திருந்தது.
அருகில் வந்தவர், கைகளில் வைத்திருந்த பொதி ஒன்றினை அவசரத்தில் தவறவிட்டார். உள்ளிருந்த ஐந்தாறு ஆப்பிள்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதற, அதைப் பொறுக்கி எடுப்பதில் மும்மூரமாக இருந்தார். உண்மையில் அவருக்காக காத்திருந்த அந்த நேரத்தில் நான் எனது அறையை சென்றடைந்திருக்கலாம் ஆனாலும், இன்றைக்கு இந்தப் பொதுச்சேவைக்கான வாய்ப்பை தவறவிடுவதில்லை என்ற பிடிவாதத்தில் இன்னும் அவருக்காக லிப்டினை திறந்தவாறே வைத்திருந்தேன்.
ஒருவழியாக, லிப்டினுள் ," மிக்க நன்றி " என்றவாறு பிரவேசித்தவர் , லிப்டின் 1 ஐ அழுத்திவிட்டு என்னைப் பார்த்து சிரித்தார். நானும், உள்ளே அழுதுகொண்டே லேசாக சிரித்தேன். பக்கத்தில் நின்ற பொதுச்சேவை சத்தமாக நக்கலுடன் எகத்தாளமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு தெளிவாக கேட்டது.
No comments:
Post a Comment