Monday, October 11, 2010

என்ன ஆச்சு எனக்கு? ஏன் அந்த புத்தகங்களை படிக்க முடியல


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் எனக்கு எப்போதிருந்து ஏற்பட்ட்து என்றால், அது சொல்வது மிக்க கடினம். உண்மைதான்.. எனக்கும் வாசிகசாலைக்குமான உறவு மிக அபரிதமானது. அது 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிலைத்து நிற்கின்றது. அப்பா அப்போதெல்லாம் எங்களூர் வாசிகசாலையில் இருந்து கொண்டு வரும் இரவல் நூற்களின் அட்டைப்படங்கள் தொடக்கம் உள்ளடக்கங்கள் வரை இன்றும் நிழலாடும்..

இருந்தும் இப்போது, எனது படுக்கையிலும் மேசையிலும் கிடக்கும் அப்புத்தகங்களை வெறித்துப் பார்க்கின்றேன்.. எனக்கு என்னவாயிற்று?? எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு புத்தகத்தினை வாங்கினால் முடித்துவிட்டு கீழே வைக்கும் எனக்கு என்னவாயிற்று? ஏன் இந்த புத்தகங்களை வாங்கி இரு வாரமாகியும் விரிக்க கூட மனமின்றி இருக்கின்றது.
இப்போதெல்லாம், காலையில் அலுவலகத்திற்கு போகும் போது,
கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அப்புத்தகங்களினை படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானம், அவ்வோய்வு நேரங்களில் உருமாறி அரட்டையாகவோ உறக்கமாகவோ மாறிப்போகும் அவலம்…… ஆனால், அவற்றினை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளே எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கின்றது..

சிறுவயதில், காமிக்ஸ் புத்தகங்களின் மீது ஒரு அபார காதல். அதன் கதை நாயகர்கள் பற்றிய பிரமாண்டமான பிம்பங்கள் இன்னும் உண்டு.. முகமூடி வீர்ர் மாயாவி, கார்த், லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி, ப்ளாஸ்கார்டன், என பலர். அவர்கள் பற்றிய பல பல சேதிகள் எங்கள் காமிக்ஸ் நண்பர்களிடையே எப்போதும் சுவாரசியமாக பகிரப்படும். ஆனால், இது அனைத்தும் மிக ரகசியமாக இருக்கும். வீட்டுக்கு தெரிந்தால், அப்பா புத்தகத்தையும் என்னையும் சேர்த்து கிழித்துவிடுவார். அவ்வாறு கிழிக்கப்பட்ட தடவைகளும் ஏராளம் உண்டுதான். ஆனாலும் அவற்றினை படிப்பதை விடவில்லை. அது ஒருவகையான போதை போல ஆகிவிட்டது.

வயது கொஞ்சம் ஏற, அப்பாவால் வாசிகசாலைக்கு செல்லும் பழக்கம் வந்துவிட்டது. அது அம்புலிமாமா, காமிக்ஸ் இலிருந்து, இன்னொரு புத்தக உலகினை திறந்துவிட்டது. சாண்டில்யன், கல்கி , புதுமைப்பித்தன், சுஜாதா என பலர் அறிமுகமானார்கள். சாண்டில்யனின் கடல்புறா, மூங்கில் கோட்டை நூற்களோடே வாழ்ந்த காலங்கள் இன்னும் பசுமையாக என்னுள் உண்டு. சுஜாதாவின் கணேஸ், வசந்த் பற்றிய பிரஸ்தாபங்கள்.கணேஸாக என்னை உருவகித்துக்கொண்டு வசந்தாக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை எல்லாம் செய்த நேரங்களும் உண்டு..

இப்பிடி எல்லாம் இருந்த எனக்கு ஏன் இந்த புத்தகங்களை மட்டும் படிக்க முடியவில்லை. ஒரு வகையான அசூசை படர அந்நூற்களில் ஒன்றினை புரட்டலாம் என்ற எண்ணம் அலுப்போடு விட்டுவிட்டு வர, இன்று படித்தே விடுவது என்ற தீர்மானத்தோடு, மேசை மீது இருந்த அந்நூற்களில் ஒன்றினை எடுத்து தலைப்பினை நோக்குகின்றேன்.

“Management Accounting MBA 1st year” என்றிருந்தது.




No comments: