Thursday, July 14, 2011

எனக்கும் மும்பை குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு? முஸ்லிம் என்பதா?


இன்றைய அலுவலக காலை என்னை பொறுத்தவரையில் விடியவில்லை. அலுவலகத்தினுள் வியாழன் என்ற உற்சாகத்துடன் நுழைந்தால், அனைவரும் காலை டீயும் கொறிப்பதற்கு வாயில் மும்பை குண்டு வெடிப்புச் செய்தியுமாக பேசிக்கொண்டிருந்தனர்.

எங்கள் வேலை எப்போதும் டென்சன் தவிர வேறில்லை என்பதால், நான் வேலை தொடர்பான சிந்தனைகளுடன் அனைவரையும் கடந்து எனது அறைக்குள் சென்று விட்டேன். வேலையில் மூழ்கி அரைமணி கடந்து ஏதோ ஒரு கோப்பினை எடுக்கும் நோக்கில், கோப்பு அறைக்குள் போகலாம் என வெளியில் வந்தால் அரட்டை இன்னும் முடிவதாய் இல்லை. அதே குண்டு வெடிப்பு!! சிரித்துக்கொண்டே ஐந்து நிமிடம் கூட நின்றுவிட்டு, கோப்பினை தேடிக்கொண்டிருந்த போது,

“ இங்கே நீ என்ன செய்கின்றாய்? இதற்குள் ஏதாவது குண்டு வைக்கப் போகின்றாயா?” 

என சிரித்தபடி என் முன் நின்றார் எங்கள் வியாபார முகாமையாளர். தீவிர கிறிஸ்தவர், மும்பைகாரர்.

அவர் அதை கேலி போல் என்னிடம் கேட்டாலும், அந்த வார்த்தையில் தொனித்த வெறுப்பு, கேலி, வக்கிரம் என அனைத்தையும் உணர முடிந்தது. ஏனெனில் நான் ஒரு முஸ்லிம். பலர் ஒன்றாக முன்னே நிற்க வைத்து பீரங்கியினால் சுட்டது போன்ற உண்ரவு. சிரித்துவிட்டு வந்துவிட்டேன். 

ஒரு கரி நாளின் ஆரம்பம் போலத்தான் அது இருந்தது.

ஏன் இப்படிஒரு மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகளா? நல்லவர்கள் இல்லையா? அதே போல மற்றவர்களில் தீவிர போக்குடைய மக்கள் இல்லையா? எதற்காக இப்படி ஒரு வக்கிரம். அதுவும் எங்கோ எவனோ செய்த முட்டாள்தனத்திற்கு, இன்னொருவனை, அதுவும் இந்த விடயங்களில் அக்கறையோ, அரசியல் பற்றிய புரிதலோ இல்லாமல், தான் உண்டு தன் பணி உண்டு என இருக்கும் ஒருவனிடம் காட்டுகின்ற முட்டாள்தனம்.. எப்படி முடிகின்றது இவர்களால்?

அதைச் செய்தது ஒரு முஸ்லிம் என்றால், அதற்கு நானும் பொறுப்புக்கூற வேண்டியவனா? இல்லையே! எந்த உரிமையில் இதை மற்றவர்கள் மேல் திணிக்கின்றனர். முட்டாள்தனமாக இல்லை! எனக்கும் அதைசெய்தவனுக்கும் என்ன சம்பந்தம் அவன் முஸ்லிமாகத்தான் இருப்பான் என்ற அனுமானத்தினை தவிர..அவன் செய்தது தீவிரவாதம் என்றால். மொத்த முஸ்லிம் சமூகத்தினையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முனையும் இவரைப் போன்ற அனைவரும் தீவிரவாதிகள்தானே?.

மனசு முழுக்க வலிக்கின்ற ஒரு விடயத்தினை எந்த ஒரு அசூசையும் இன்றி போகிற போக்கில் தனது வக்கிரத்தை கொட்டிவிட்டு சென்றுவிட்டார். இதை எனக்கு அவர் தர வேண்டியதன் காரணம் என்ன. எதற்காக அந்த வலியினை எனக்கு தர அவர் தீர்மானித்தார். விடை வெளிப்படையானது. நான் முஸ்லிம்! 

ஆனாலும் அதில் உள்ள அநியாயத்தை அவர் அறிந்திருந்தும், அதை உதாசீனப்படுத்தித்தான் இதை செய்திருப்பார் என்பது எனக்கும் தெரியும்.

“ உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம்” என குர் ஆன் சொல்கின்றது. இது தவிர எனக்கு ஒன்றும் தெரியாது.

எனது பெற்றோரால், எனது சமூகத்தால், எனக்கு தரப்பட்டுள்ள போதனைகள் தர்மங்கள் எல்லாம், நல்லதையே சொல்லித் தந்திருக்கின்றன. யாரையும் துன்புறுத்தவோ, கொலை செய்யவோ நான் பயிற்றப்படவில்லை. என்னைப்போல்த்தான் என் சகோதரர்களும்... யாரோ எங்கோ ஒரு முட்டாள் மதத்தின் பெயரினை சொல்லி வெறி கொண்டாடினால், அதற்கு நான் ஏன் பொறுப்பாக வேண்டும். அதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். 

உங்களைப் போலவே சமூக மற்றும் மார்க்க கடமைகளில் ஈடுபட்டு சாதாரண வாழ்க்கை வாழும் அனேக முஸ்லிம்களில் நானும் ஒருவன் அவ்வளவே, 
நீங்கள் எப்படி அந்த நிகழ்வை அணுகுகின்றீர்களோ அப்படியே நானும் நோக்குகின்றேன். அவ்வாறில்லை, நீ ஈவ்வாறுதான் அதை பார்க்க வேண்டும் என மறைமுகமாக நீங்கள் நிர்ப்பந்திப்பது கூட தீவிரவாதம்தானே! 

ஒரு தனி மனிதனாக, மனித நேயம் மிக்க ஒருவனாக, இறந்தவர்களுக்காக கவலைப்படுவதையும், சிறிய பிரார்த்தனையினையும் தவிர என்னால் முடிந்தது ஒன்றும் இல்லை.

எனக்கென்று நிறைய சுமைகள் உள்ளன. வாழ்க்கையின் முழுதுக்கும் அவை எனக்கு போதும். இது போன்று இன்னும் வேண்டாமே!!

( என்னை போன்று இன்னும் சிலர் இக்காலங்களில் காயப்பட்டிருக்கலாம். அவர்களுக்காகவும், எனது ஆறுதலுக்காகவுமே இப்பதிவு. வேறொன்றுமில்லை!)







10 comments:

Angel said...

உங்கள் மன வேதனை புரிகிறது நண்பா .
சில விவஸ்தை கெட்ட ஜென்மங்க இப்படிதான் மத்தவங்க மனசு நோகும் அப்படீல்லாம் யோசிக்க மாட்டங்க .எந்த நேரம் எதை பேசணும்னு ஒரு போது அறிவு வேணும் .இவங்க உண்மையாக அன்பின் பிரமாணம் படி நடந்திருந்தா
மனச நோகடிக்க மாட்டங்க .(கண்ணெதிரே இருக்கும் சகோதரனிடத்தில் அன்பு காட்டாதவங்க காணாத இறைவனை எப்படி நேசிப்பாங்க )

Mohamed Faaique said...

எவன் செஞ்சாலும் பரவாயில்ல. முஸ்லீம்களில் தலையில் போட்டு விட்டுவதுதான் அரசியல் வாதிகள், மீடியாக்களின் பழக்கம்... அதையே பெப்பெரப்பே”னு நம்பி சில விவஸ்தை கெட்ட நாதாரிகள் உத்தமர் வேஷம் போட ஆரம்பிச்சுருவானுங்க...

anuthinan said...

:)

Asir said...

Leave it and Move on Bro... Loosu pasanga....

- யெஸ்.பாலபாரதி said...

:(((

சேக்காளி said...

//மனசு முழுக்க வலிக்கின்ற ஒரு விடயத்தினை எந்த ஒரு அசூசையும் இன்றி போகிற போக்கில் தனது வக்கிரத்தை கொட்டிவிட்டு சென்றுவிட்டார்//
வக்கிரம் என்று தெளிவாக தெரிந்து கொண்டு விட்டீர்கள்.அப்புறம் என்ன பிரச்சினை.தன்னம்பிக்கை இல்லாதவன் அடுத்தவரை குறை சொல்லிக் கொண்டு தான் அலைவான். வார்த்தைகளால் திருப்பி அடியுங்கள்.அப்புறம் இது போன்று நேரில் பேச தயங்குவார்கள்.

Unknown said...

மாப்ள எந்த மதத்தவனும் யாருக்கும் எதிரானவன் அல்ல...
உங்களுடைய பதிவு சொன்னவனின் குரூர புத்தியே காட்டுகிறது!...இவனுங்கள மாதிரி ஆட்களை நடுச்சந்தில நிக்க வச்சி சுடனும்!

Unknown said...

விடுங்க பாஸ்! நானும் இதுபோல பட்டிருக்கிறேன் தமிழனாய் இருப்பதால்...!

அம்பாளடியாள் said...

மாப்ள எந்த மதத்தவனும் யாருக்கும் எதிரானவன் அல்ல...
உங்களுடைய பதிவு சொன்னவனின் குரூர புத்தியே காட்டுகிறது!...இவனுங்கள மாதிரி ஆட்களை நடுச்சந்தில நிக்க வச்சி சுடனும்!

உண்மைதான் எந்த மதமும் மனிதர்களை வாழ வைக்கப் பிறந்தன
அதில் சில ஜென்மங்கள் புரிந்துகொள்ளாமல் சண்டை இடுவதர்க்குக்கூட
மதத்தின் பெயரை உபயோகித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது .
மன சாந்திகொள்ளுங்கள் சகோ.இன்றுதான் நான் முதன்முறை இங்கு வந்துள்ளேன் .
அதனால் உங்கள் ஆக்கங்கள் சிறப்புற எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு...............

Unknown said...

தம்பீ!
தங்கள் பதிவு கண்டு மனம்
வேதனைப் பட்டேன்
சிந்தனை அற்ற மனிதர்கள்
சிலர் அப்படித்தான் இருப்பார்கள்
நண்பர்கள் அதிகரிக்க நீங்களே
மற்ற வலைப்பதிவர்களை நாடிப்
போவது தவறில்லை
வாருங்களேன் என் வலைப்பக்கம்

புலவர் சா இராமாநுசம்