Saturday, May 15, 2010

கதைசொல்லும் பாடல்கள்

கதைசொல்லும் பாடல்கள்
எப்போதாவது சில விடயங்கள் திடீரென உதிக்கும். உண்மையில் நாம் அது பற்றி சிந்தித்துக்கூட இருக்கமாட்டோம். ஆனாலும் அது நிகழ்ந்துவிடும். இன்று காலை எனக்கு அது நிகழ்ந்தது. ஒரு பாடல்.. திடீரென எங்கிருந்தோ பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.
சில பாடல்கள் தனிப்பட்ட வாழ்வில் மிக அதிக கனதி கொண்டிருப்பது உணர்வுபூர்வமான ஒன்று அல்லவா? சில வேளைகளில் சில பாடல்கள், எம்மை எமது சிறு பருவத்திற்கு அழைத்துப்போகும், சில வேறு சம்பவங்களை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளினை சுமந்து திரியும். எனக்கு இன்று நிகழ்ந்ததும் அதுதான்.
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
……
காலை வேக வேகமாக அலுவலகம் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது அது நிகழ்ந்தது. நினைவுகள் கோர்வையாகி பல்கலைக்கழக நோக்கி விரட்டியது. ஆமாம் இப்பாடல் எப்போதும் எனக்கு சிறிது அசௌகரியத்தினையும் வலியினையும் கொண்டு சேர்க்கும். அதனால் இதனை தவிர்ப்பதில் என்னாலான எல்ல முயற்சிகளினையும் எடுத்துக்கொள்வேன். இருந்தும் சில வேளைகளில் என்னையும் மீறி அது நிகழ்ந்து விடுகின்றது. இன்றும் அப்படித்தான், சே! என்ன ஆனது?
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
……
மீண்டும் ரீங்காரமிடத்தொடங்கி விட்டது. இம்முறை இன்னும் ஆழமாக அது உள்ளிறங்குவது போல ஒரு பிரம்மை.
“ஏ! பாடலே! இன்று நான் உன் கைதி, நீ உன் இஷ்டம் போல என்னை வதைக்கலாம்” என எனக்குள் சொல்லிக்கொண்டேன். சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை.
பல்கலைக்கழக வாழ்வில் மெல்லிதாய் அரும்பிய உறவொன்று.. நட்புக்கும் காதலுக்குமிடையில் நின்று திணறிக்கொண்டிருந்தது. எனக்கு குடும்ப தளைகள் தாண்டி அக்கோட்டினை தாண்ட திராணியில்லை. ஆனாலும் அவள் தாண்ட தயாராய் இருந்தாள். காலங்கள் இப்படியே என்களை ஒத்திச்சென்ற போது, அது காதலாகிப்போய்விட்டது. இன்னும் குழப்பத்துடன் நான் இருந்தாலும் அது காதல்தான்..
எனக்காக வாழ / மாற தொடங்கிவிட்டாள். அவ்வேகம் பிரமிப்பாக மாறியது எனக்கு. பின்னர் அதுவே பயமாக மாறலானது. உண்மை! ஏனெனில் அதீதமான அவள் காதல் என சுதந்திரத்தினை கேள்விக்குறியாக்கலானது. வேறு நண்பிகளுடன் கதைப்பது, நேரம் பிந்துவது என ஒவ்வொன்றிற்கும் அவளிடமிருக்குமொரே பதில்: “உனக்கு என்னில் காதலில்லை” அவளின் முரட்டுத்தனமான அன்பிற்கு முன்னால் ஒப்பிடும்போது அது உண்மையோ எனத்தோன்றும். ஆனால் நான் அவளை காதலித்தேன். அத்தருணங்களில் இப்பாடல் வரிகளே எனக்கு கை கொடுக்கும். மெல்லிய முறுவலோடும் கண்களில் காதலோடும் குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற்றுக்கொள்வாள்.
எத்தனை முறை இவ்வரிகள் எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரு சமாதான தூதுவனாக இருந்திருக்கும்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…… நினைவுகளுக்கு கடிவாளமில்லை. அது சென்று கொண்டே இருக்கும். இன்னும் அதற்கு மேலாக ஊக்கிகள் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா? தனிமையில் இதை எழுதும் போது, அவளின் காதலின் தீவிரத்தினை இன்று உணர்கின்றேன். ஆனாலும் காலம் பிந்திய ஞானங்கள் எதற்கும் உதவாது அல்லவா? அது முடிந்து போய்விட்டது.
அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?

No comments: