Wednesday, November 02, 2011

எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது.


நூலகங்கள் உலகினை திறந்துவிடும் சாளரங்கள்.

இப்போ அடிக்கடி நூலகம் பற்றி கதைக்கப்படுவதாலோ என்னவோ, எனக்கு எனது பழைய கால நினைவுகள் வந்துவிட்டன.

எங்களூர் நூலகம்,

கல்கியில் இருந்து சாண்டில்யன் வரை தெனாலி தொடங்கி அப்புசாமி கிழவர் வரை எனக்கு அறிமுகம் செய்தது. எங்களூர் நூலகம்தான். தந்தையின் கை பிடித்து நூலகம் சென்ற போது 10 வயதுதான். அன்றிலிருந்து இன்று வரை எங்களூர் நூலகத்தின் மீது ஒரு தீராக்காதல். 

இப்போதும் விடுமுறைக்கு ஊர் செல்லுகின்ற ஒவ்வொரு தடவையும் அங்கு சென்றுதான் வருவேன்.

அன்று மூன்று அறைகளை கொண்ட ஒரு வீட்டில்தான் எங்களூர் நூலகம் இருந்தது. முன் மண்டபம் பத்திரிகைகள். ஒரு அறை இரவல் புத்தக அறை. மற்றையது உசாத்துணைப் பகுதி. எப்போதும் நிறைந்து வழியும் பத்திரிகைப்பகுதியினைத் தாண்டித்தான், மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். 

அப்போதிருந்த நூலகர் ஒரு புத்தக பிரியர். நினைவு தெரிந்த நாட்களில் எப்போதும் அவரது கையில், கல்கியின் பொன்னியின் செல்வனோ, வியாச பாரதமோ இருக்கும். அவரது சிறிய கண்ணாடி அறைக்குள் எப்போதும் அதனோடே இருப்பது போல எனக்கு ஒரு பிரமை,

ஒவ்வொரு கால கட்டத்திலும் எங்களூர் நூலகம் எனக்கு வெவ்வேறு வர்சன்களாக பயன்பட்டன. ஆரம்பத்தில் சிறுவர் நூற்கள், வாண்டுமாமா நூற்களில் தொடங்கி ராணி காமிக்ஸ் வரை கிடையாய் கிடப்பேன். வருட இறுதிகளில் பழைய இதழ்களை விற்பனைக்கு வைப்பார்கள், கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது கோகுலம், அம்புலிமாமா என வாங்கிவிடுவேன். அந்த உலகின் ரம்யங்கள் ரொம்ப அழகானவை.

அதைத்தாண்டி வந்த போது, பட்டப்படிப்பு பாடசாலைத் தேவைகள் அந்தந்த நூலகங்களில் நிறைவேறினாலும், மாலை நேரப் பொழுதை இனிமையாக்க எங்களூர் நூலகம்தான் எனக்கு துணை. குளம் சார்ந்த ஒரு பகுதியில் அமைவிடம் என்பதால் எப்போதும் ஒரு வித அமைதி சூழ்ந்திருக்கும். பழகிய முகங்கள். தொடர்ந்து வரும் நண்பர்கள் என வாசிகசாலையுடன் தொடர்புடையதாகவே சில நட்புக்களும் அமைந்துவிடும். 

தினசரி பத்திரிகைகளுக்கான கைப்பற்றல்களுக்கு நிறைய போட்டி நடக்கும். அன்றைய பத்திரிகை வந்தவுடன் முதன்முதலாக பிரிப்பதில் உள்ள ஒரு மகிழ்ச்சி… அது அனுபவித்தால்த்தான் தெரியும்.!

நூலகங்களின் நடைமுறைகள் அப்போதெல்லாம் மிக இறுக்கமாக எங்களூர் வாசிகசாலையில் பின்பற்றப்பட்டன. அமைதி!! என்பது எப்போதும் குடி கொண்ட ஒன்றாக இருக்கும். கதிரைகளைக் கூட இழுக்கத் தயங்கும் நண்பர்கள் கூட இருந்தனர். அதோடு , படித்த நூலகர், ஊழியர்கள் புத்தகங்களின் அருமை பற்றி அறிந்திருந்தனர்.

ஆனால், சென்ற முறை ஊரிற்கு சென்ற போது தவறாமல் செல்லும் எங்களூர் வாசிகசாலைக்கு சென்றேன். இப்போது இடம்மாறி மாநகராட்சி கட்டடத்தின் ஒரு மூலையில் தற்காலிகமாக இயங்கிக்கொண்டிருந்தது. மிக மெலிந்து போய்விட்டது. பழைய பார்த்து பழகிய முகங்கள் ஒன்றுமில்லை. ஒரு மீன் சந்தை போல எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்தனர். நூலகனும் ( ர் போட மனதில்லை..) யாரோ ஒருவருடன் கதையளந்து கொண்டிருந்தான். 

புதிய ஊழியர்கள். எங்களூர் அரசியல் வாதியின் சிபாரிசில் நியமனம் பெற்றவர்களாம். அனைவரும் அவருக்காக அடிதடி அரசியல் செய்ததற்கு அவர் கொடுத்த பரிசு – நூலக உத்தியோகத்தர் பதவி! எவ்வளவு பாரிய முரண். நிச்சயமாக அனைவருக்கும், நூலகமும் நூற்களும் இங்குதான் அவர்களுக்கு அறிமுகமாயிருக்கும் என்பது எனக்கு உறுதி.

நிறைய நேரம் நிற்க முடியவில்லை. திரும்பிவிட்டேன்.

எங்களூர் நூலகத்தை இழந்துவிட்டது...



2 comments:

Unknown said...

நானும் சிறுவயதில் பெரும்பகுதியை நூலகத்திலேயே செலவிட்டவன்..உங்கள் உணர்வுகள் புரிகிறது!
பெரும்பாலான நூலகங்களில் அங்கு பணிபுரிபவர்கள் அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள்தான்...பலமுறை எனக்கும் இவ்விஷயம் உறுத்தியிருக்கு!

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்