ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…


ஊருக்கு போயிருந்தேன்… சென்ற முறை போன போது இருந்த டென்சன் , அவசரம், இன்ன பிற வகையறாக்கள் இந்த முறை இல்லாததால், அந்த ஒரு மாத விடுமுறையினை விட இந்த 2 வார விடுமுறை மிக திருப்தியுடனும் மகிழ்ச்சியாகவும் முடிந்தது. நிறைய பொழுதுகளை குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. உம்மாவுடன் நிறைய நேரம் கதைக்க முடிந்தது. இப்படி பல “முடிந்தது”க்கள்.
 

ஊர்க்கதைகள்தான் நிறைய சொல்ல வேண்டி இருக்கின்றது. குளத்து மீன்கள் என்றால் நிறைய ஆசை. சப்புக்கொட்டி சாப்பிடுவேன். இம்முறை ஊரில் இருந்த போது, களப்பிற்கு சென்றிருந்தேன். சந்தையில் வாங்குவதை விட அங்கு உடனே பிடித்த மீன்கள் வாங்கலாம் என்ற காரணத்தையும் தாண்டி கொஞ்சம் லாபமாக வாங்கலாம் என்பதே முன்நின்றது. பெரிய மணலை மீன் ( உங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ தெரியாது ) தொடக்கம், சிறிய சிறிய மன்னா மீன் வரை கிடைத்தது. நான் மீன் வாங்கிய மீன் பிடிகாரர், கட்டாரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கின்றாராம். உழைப்பவர்கள் ஒரு போதும் ஓய்ந்திருக்க மாட்டார்கள் இல்லையா?


ஒன்றாக படித்த நண்பர்கள் – இப்போது வெகு தூரம் போய் விட்டது போல ஒரு பிரமை இன்னும் என்னை பீடித்த படியே இருக்கின்றது. அது உண்மைதான் என மனமும் நம்பத்தொடங்கிவிட்டது போலவே உணர்கின்றேன். ஒன்றாக திரிந்த நண்பர்களிடம், ஐந்தாறு வருடங்களின் பின் நமது நண்பனை காண்கின்றோம் எங்கின்ற ஒரு மலர்ச்சி இல்லை. ஏதோ ஒப்புக்கு ஒரு முகமனுடன், வேறு ஏதோ சிந்தனை ஆட் கொண்டவாறு விலகி விடுகின்றனர். குடும்பஸ்தர்களான அவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம். நாளை நானும் இப்படி மாறிவிடுவேனோ என எணிக்கொண்டேன்.


பெருநாளைக்கு பட்டாசு வெடிப்பது ஒரு அலாதி அனுபவம். சுமார் 4 வருடங்களின் பின் இந்த முறை கிடைத்தது. தம்பிமாருடன் சேர்ந்து வெடி வெடித்தது. எத்தனை மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஜாக்கிரதை குணம் திடீரென ஒட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தேன். முன்பெல்லாம் கையில் ராக்கெட் வாணம் வைத்து அனாயசமாக விட்ட எனக்கு, இப்போது அதை செய்வதற்கான துணிவு கடைசி வரையிலும் வரவே இல்லை. குழாய் தேடி, வீட்டு மொட்டை மாடியில் நின்று வெடித்தோம். வயதானால், முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிடுவோமோ என்னவோ!!!எங்களூரின் பெருநாள் கொண்டாட்டங்கள் முன்பிருந்ததற்கும் இப்போதுள்ளதற்கும் நிறைய வித்தியாசங்கள். தற்போது ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக் கொண்டது போல ஒரு தோற்றம்.
பெருநாள் அன்று இரவு , என் தங்கை பற்பசை ட்யூப்பை வைத்து எதுவோ செய்து கொண்டிருந்தாள்.. என்ன என்றதற்கு, மருதாணி என பதில் வந்தது. பழைய நினைவுகள் என்னுள் பரவத் தொடங்கின.
               முன்பெல்லாம் நாளை பெருநாள் என்றால், ஆளுக்கு ஒரு பொலித்தீன் பையுடன் கிளம்பிவிடுவோம், - மருதாணி மரம் தேடி. அதைப்பறித்து வந்து, அரைத்து வாழை இலையில் குண்டு குண்டாக உருட்டி அம்மாக்கள் தயாராக்கி வைக்க, இரவுச்சாப்பாடு முடித்துவிட்டு தொடங்கினால், அம்மா அழகழாக கைகளில் மருதாணி உருண்டைகளை அழுத்தி இடுவார். காலை வரை அவை உதிராமல் இருக்க, கைகளை பொலுத்தீன் பைகளால் கட்டிக்கொண்டு படுப்போம், பெருநாள் காலையில், மருதாணி உதிர்ந்து கைகள் நிறைய முழுச் செம்மஞ்சள் பொட்டுக்களை காட்டிச் சிரித்து நிற்கும். 
            இதில், யாருடைய கை அதிகம் சிவத்திருக்கின்றது என்ற சண்டைக்கும் பஞ்சம் இருக்காது.பின்னர் கை கழுவி, பெருநாள் பலகாரம் உண்ணும் போது மருதாணி மணம் + பலகார வாசனை கலந்து வரும் ஒரு சுகந்தம்!!! அப்பா!! அதுதான் பெருநாள்..


நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் தம்பி தங்கைகளே!!

இனி என்ன அடுத்த விடுமுறைக்கு செல்லும் வரை இதையே அசை போட்டுக் கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான் ……………………
Comments

angelin said…
ஊர் நினைவலைகள் அருமை .பண்டிகை காலத்தில் நம்மூரில் உறவினரோடு இருப்பது மிக்க சந்தோஷமா இருக்கும்.
Mohamed Faaique said…
yes boss.. neenga solra ellaame naan vacation poana pothum feel pannineeann..
//angelin said...
ஊர் நினைவலைகள் அருமை .பண்டிகை காலத்தில் நம்மூரில் உறவினரோடு இருப்பது மிக்க சந்தோஷமா இருக்கும்//

உண்மைதான் , அது தூர இருந்து உறாவுகளை காணச் செல்வோருக்குத்தான் மிக நன்றாக புரியும்..

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஏஞ்சலின்
//Mohamed Faaique said...
yes boss.. neenga solra ellaame naan vacation poana pothum feel pannineeann.//

அந்த உணர்வு நீண்ட நாளின் பின் சந்திக்கும் அனைவருக்கும் கிட்டும்..

நன்றி Mohamed Faaique )
Jana said…
ஊருக்கு வந்தீர்களா? சொல்லவே இல்லை?
Lakshmi said…
நினைவலைகள் அருமை. அதுவும் பண்டிகைக்காலங்கள் சந்தோஷம் நிறம்பியதுதான். தர்போதெல்லாம் பண்டிகைகளை சேர்ந்து கொண்டாட உறவினரையும் காணோம்,கொண்டாட்டமனோபாவமும் இல்லை அதான் உண்மை.

Popular posts from this blog

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் ( புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு.. )

மலையாளிக் களவானிகள்!

மான் கராத்தே..!