Thursday, January 27, 2011

அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….



நீ எதிர்பார்த்த
நான் எதிர்பார்க்கா,
அது நிகழ்ந்தே போனது….

நீ சென்றே விட்டாய்…
என்னையும் உன் நினைவுகளினையும் விட்டு..
நீ சென்றே விட்டாய்…
இனியும் நீ என்னருகில் இல்லை..

என்றாவது
ஓர் மழைக்காலத்தில்
நீ உன் கணவனையும், நான் என் மனைவியையும்-
அறிமுகப்படுத்தும் துர்ப்பாக்கியம்
“ இவர் என் கிளாஸ்மேட்” எனும் விழுங்கலுடன்-
ஆரம்பிக்கலாம்.

பிரார்த்தித்துக்கொள் பெண்ணே
அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….
__________________

Tuesday, January 18, 2011

பைசாவுக்காக சட்டை துறந்த இந்திய கிரிக்கட் வீரர்கள்

வருகின்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பிரதான அனுசரனையாளர்களில் ஒன்றான பெப்சி விளம்பரத்திற்காக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மற்றும் சில வீரர்கள் வெற்றுடம்போடு தோன்றியுள்ளனர்.

ம்ம்…… பைசா படுத்தும் பாடு……………..

பசங்க மேல கண்ணு வச்சிடாதீங்க... குடும்பக்காரப் பய புள்ளைங்க!!!!!!!!!












Sunday, January 16, 2011

இம்புட்டு வெகுளியாவா இருந்திருக்கோம்!!!!!!!!!!!

காலம் என்பது எபோதும் எதையாவது கற்றுத்தந்து கொண்டே இருக்கின்றது இல்லையா?  அதுவும் கடந்து போன வாழ்க்கையினை திரும்பிபார்க்கின்ற போது, மேலே உள்ள டயலாக் பாதிக்கு மேல் நம்மக்களுக்கு வந்திருக்கும். ஒத்துக்கிறீங்களா? “அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு மாதிரி” என்னு யாரோ ஒரு பெரிசு சொன்னது எத்தின உண்மை.

மனிசனோட மனிசனா பழக - எத்தின முகமூடி தேவை அதுவும் எந்த இடத்துக்கு எந்த முகமூடி, முன்ன உள்ளவன் என்ன முகமூடியோட இருக்கான். அவனோட எண்ணம் என்ன ஏன் அவன் அதைப்பற்றி சொல்றான். அவன் கதைப்பது நெசமா…………………….ஐயோ!! ஐயோ!!!! முடியலடா சாமி.. இதுக்குள்ள இம்புட்டு மேட்டர் இருக்கா என்னு நெனச்சா மலைப்பா இருக்கு. ஆனா அந்த கெரகமும் இப்பதான் நம்ம மண்டைக்கு ஒறைக்குது.

இம்புட்டு நாளா, நாம நெனைக்கிற மாதிரித்தான் நம்ம கூட இருப்பவங்களும் நெனைப்பாங்க.. நாம எத நெனைச்சு சொல்றோமோ அத அவங்களும் புரிஞ்ச்சிப்பாங்க… எல்லாரும் நல்லவய்ங்கதான் என்னுதான் காலம் தள்ளியிருக்கம்.. என்னா ஒரு வெகுளித்தனம்………யப்பா!!!!!!! அப்ப, நமக்கு எது நடந்தாலும், அது என்னவோ போகட்டும்னு லூஸ்ல வீட்டுர்ரது. இது ஏன் நடக்குது? காரணம் என்னா என்னு ஆராய்ற அளவுக்கு புத்தி பத்தல. ஏன்னு புரியல, திடீரென இப்ப கண்ண முழிச்சா, ஒரே களவாணிப்பய சவகாசமால்ல இருக்கு.

பொறவு, எல்லாத்தையும் ரீவைன்டு போட்டா, மேட்டர் வேற! அட! ஆமாங்க, நாமதான் லேட்டு. எதுக்கு களவாணி ஆவுறதுல. அம்புட்டு பய புள்ளைகளும் பீ ஹெச் டி லெவல்ல இருக்கானுவோ.. ஆத்தாடி.. இருங்கடா இதோ எழும்பிட்டன் வர்ரன்!!!!!!!!!!!!!!

( டிஸ்கி : இதற்கும் பதிவுலகுக்கும் எந்த லிங்கும் இல்ல மக்கா....இது கதையல்ல நெசம் ஆனா இங்க இல்ல)


Thursday, January 13, 2011

கடிதங்களினையும் காக்கைகளினையும் தின்ற தொலைபேசிகள்


96, 97 களில் கூட தகவல் தொழில் நுட்பம் மனிதர்களை ஆளத் தொடங்கவில்லை. ஒரு வீட்டில் தொலை பேசி இருக்கின்றது என்பதே – ஒரு வகையான பணக்காரத்தனத்தின் குறியீடு போலத்தான் பார்க்கப்பட்டது. தொலைபேசிக்கான தேவைகள் அப்போது அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை. அவசரம் என்றால், தந்தி. அல்லது கடிதம். இதையும் தாண்டினால்த்தான் தொலைபேசி. 

தொலைபேசினால் அது பற்றிய கதையாடல்கள் குடும்பம் பூராகவும் ஓரிரண்டு வாரங்களுக்கு உலா வரும். அதோடு அது ஒரு ஆடம்பரம் எனும் தோற்றப்பாடும், பெருமையாகவும் வர்ணிக்கப்படுவதுண்டு.

தொலைதூர உறவுகளுக்கிடையிலான பாலமாக- கடிதங்களே பயணப்பட்டன. அவற்றை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள் ஒரு வித பரபரப்புடன் கழியும். உறவுகளின் கடிதம் தவிர வேறு எந்த ஒரு தொடர்புகளும் இல்லை. அவர்களின் கடிதம் மட்டுமே, அவர் அங்கு இன்னும் இருக்கின்றார் என்பதற்கான ஒரே சாட்சி என்பதை இப்போது எண்ணிப்பாருங்கள்- அதில் ஒரு அசாத்தியம் அல்லது அசாதரணம் தொக்குகின்றதல்லவா?? ஆனால், இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றோம். அக்காலங்களில் தூர உறவுகளின் அருமை, உறவின் வலிமை என்பன மிக்க உறுதியாக இருந்திருக்கின்றது. இன்று அது கொஞ்சம் குறைவு போல எனக்குத் தோன்றுகின்றது.

கணவனின் கடிதம் காண, காகத்திடம் விவரம் கேட்கும் மனைவி. தபால்காரனை எங்கு கண்டாலும் மகனின் கடிதம் கேட்கும் தந்தை என அனைத்தும் வலிதான உறவொன்றினையே வேண்டி நின்றன.

இன்று நிலமை மாறிவிட்டது. வீட்டிற்குள் அலைபேசிகள், இணையம் என உலகம் சுருங்கிப்போய்விட்டது. முகம் பார்த்து கதக்கின்றனர். நினைத்த மாத்திரத்தில் தொடர்பினை ஏற்படுத்த முடிகின்றது. தொலைதூரம் என்பது இப்போது போலியாகிவிட்டது. நவீன தகவல் தொழில்நுட்பம் அனைத்தையும் சுருக்கிவிட்டது. அதனால் இப்போது கடிதங்களுக்கோ, காகங்களுக்கோ வேலை இன்றிப்போய்விட்டது.

இதை ஒரு வகையில் நன்மை என நோக்கினாலும், கடிதம் எதிர்பார்த்து, எழுத்தில் உறவுகளின் முகம் பார்த்து, நினைவுகள் தோன்றும் போது மீண்டும் மீண்டும் … என .. இப்படியான சுவாரசியங்கள் இன்றைய நவீனத்தில் இல்லாமல் போய் விட்டது. ஒலியினை விட வார்த்தைகளுக்குள்ள வீரியத்தினை இன்றைய நவீனம் கபளீகரம் செய்து விட்டது.




Wednesday, January 12, 2011

மிதக்கும் கிழக்கிலங்கை...

மழை என்றால்... வானம் பொத்துவிட்டதோ என எண்ணும் அளவிற்குள்ளதாம்... இன்னும் ஊற்றிக்கொண்டே இருக்கின்றது. சாட்சிக்காக சில படங்கள்..



திடீர் நதி...



இங்க வடிகான் இருந்திச்சே எங்க போச்சு!!!!!!!!!!!!!!!!



எங்க ஊரும் இப்ப வெனிஸ்தான்..... ஆனா நாங்க படகெல்லாம் விடமாட்டோம் ...



எல்லாத்தையும் இப்பவே கழுவிக்கங்கப்பா, மழை காசு ஒன்னும் கேக்காது...




அழையா விருந்தாளி.. கதவை அடைச்சாலும், ச்சும்மா பூந்து புறப்படுவோமில்ல!!!!


அப்பா!!!!!!!! படகு வாங்கியாச்சு... விடு ஜூட்........


ஹய்யா ஸ்கூல் லீவு... ஆனா எங்கும் போக முடியா...


மழைய நிறுத்தச் சொல்லி சாமிய வேண்டப் போனா...!!!!!!!!!!!



இயற்கையும் துரத்துகின்றதே.. 


நண்பர்களே! இது உங்கள் பார்வைக்காக, இயலுமானவர்கள், முடிந்தவகையில் தங்களது பங்களிப்பினை வழங்கலாம்.


இலங்கைப் பதிவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொள்ளும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் கரங்களை பலப்படுத்துவோம், ஆகக்குறைந்தது பிரார்த்தனைகளிலாவது.