Monday, July 05, 2010

விடுதலையின் பெயரால் நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்

இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு பதிவல்ல. ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல் அல்லது வாக்குமூலம். இதில் உள்ள நியாங்களினை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்பது எனது திண்ணம்.
(சில விடயங்கள் மன்னிக்கப்படலாம் ஆனால் மறக்கடிக்கப்படமுடியாது)

தமிழ் விடுதலை, தமிழர் உரிமைகள் என அது தொடர்பில் பல விடயங்கள் எங்கும் எதிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இலங்கையில், இன அடக்கு முறைக்கு எதிராக, ஆயுதங்களினை கையில் ஏந்திய விடுதலை இயக்கங்களில், விடுதலைப்புலிகளின் அஸ்திவாரம் மிக உறுதியானது. இன்று தமிழர் விடுதலை என்றால் , புலிகளினை தவிர்த்து நோக்க முடியாமல் இருக்கின்றது.

எந்த ஒரு அடக்குமுறைக்கு எதிராக இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்ட்த்தில் குதித்தார்களோ, அதே அடக்குமுறையினை இன்னொரு சமூகத்தின் மீது அவர்களின் கை ஓங்கி இருந்த காலத்தில் திணித்தார்கள் என்பது பற்றி அறிவீர்களா நண்பர்களே? அவர்கள் முஸ்லீம்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்லிம்கள்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சுமூக உறவு, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பங்களில் ஆரோக்கியமாக இருந்தது. பல முஸ்லிம் இளைஞர்கள் தாமாகவே தம்மை விடுதலை இயக்கங்களில் இணைத்துக்கொண்டனர். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில பல கசப்பான அனுபவங்கள், பழிவாங்கல்கள் போன்றவற்றால் இறந்து போனது. அடித்தட்டு மக்களிடம் , இன்னும் அவை சில சந்தர்ப்பவாதிகளாலும் இன்னும் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றது. அது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் நன்மைக்கும் அமைவாக அமைந்தாலும், சில உண்மைகளினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் நான் பல தமிழக நண்பர்களினை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரதும் ஆதங்கம், ஈழத்தமிழ் உறவுகள் பற்றியதாக இருக்கும். அங்கு தமிழர்கள் படும் அவலங்கள், அழிவுகல் பற்றி எல்லாம் மிக மிக கவலையுடன் பகிர்ந்து கொள்வதைப்பார்க்கும் போது, எனக்குள் எழும் மற்றொரு கேள்வி- இதே இனப்பிரச்சினையால்,வேறொரு வகையில் பாதிக்கப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை? அவர்களின் அவலங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் இருட்டடிக்கப்படுகின்றனவா? என்பது போன்ற வினாக்கள் என்னை அரித்துக்கொண்டிருக்கின்றன.

உடுத்த ஆடைகளுடன் மட்டும் நிர்க்கதியானவர்களாக யாழினை விட்டு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர்கள் அகதிகளாக புத்தளம் எனும் ஊரில் வாழ்கின்றனர். யாழின் பொருளாதாரத்தில் அன்று முக்கிய பங்காளிகளாக இருந்த மக்கள் இன்று அகதிகள். இந்நிலைக்கு காரணம் யார்? அடக்கு முறைக்கு எதிரான விடுதலைப்போராட்டம் என்பது, இன்னொரு இனம் மீதான திணிப்பா? யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

அதே போல், கிழக்கில் எத்தனை முஸ்லிம் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன? எதற்காக இறக்கின்றோம் என்பதனை அறியாமல் இறந்த உயிர்கள் எத்தனை? பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது கொலைவெறியாட்டம் நடத்தப்பட்டது. ஏறாவூரில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். சிறு குழந்தைகள் பெண்கள் கோரமாக கொல்லப்பட்டனர். கர்ப்பிணிகள் வயிற்றினை கிழித்துக்கொல்லப்பட்டனர். கிறவல் குழி எனும் இடத்தில், விவசாயிகள் கைகள் கண்கள் கட்டப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர். இன்னும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயமும் விடுதலையின் பெயரால் கபளீகரிக்கப்பட்டிருக்கின்றன. பல நூற்றுக்கணக்கான வயல் காணிகள் “ மேய்ச்சல் நிலங்கள் “ என பிரகடனப்படுத்தப்பட்ட அடாவடித்தனங்களும் விடுதலை எனும் பெயரால் நிகழ்த்தப்பட்டன.
ஏறாவூர் மற்றும் காத்தான்குடி படுகொலைகள் பற்றி இன்று பேச யார் உள்ளார்கள். விடுதலை எனும் பேரில் அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட சில அக்கிரமங்களின் பதிவுகள் இவை.




இவைகளின் நினைவுகள் ஒவ்வொரு முஸ்லிம்களின் மனங்களிலும் இன்னும் உள்ளன. தமிழர்களுக்கு எப்படி, முள்ளிவாய்க்கல் மற்றும் இன்னும் பலவோ அப்படி முஸ்லிம்களுக்கும் ஏறாவூர் ,காத்தான் குடி, , கிறவல் குழி என பலவும் உண்டு என்பதையும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் என்பது தமிழர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பது புரியப்பட வேண்டும். அப்புரிதல் அரசியல் தவிர்ந்து மன ரீதியாக நிகழ்ந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

அனைவரும் அவரவர் உரிமைகளுடன் மகிழ்சியாக வாழ வேண்டும் என்பதே எல்லோரது பிரார்த்தனையும், விட்ட தவறுகள் மேலும் எழாமல் பார்த்துக்கொள்வதும் எமக்கான கடமைகள் 

9 comments:

குழலி / Kuzhali said...

//உடுத்த ஆடைகளுடன் மட்டும் நிர்க்கதியானவர்களாக யாழினை விட்டு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்னும் அவர்கள் அகதிகளாக புத்தளம் எனும் ஊரில் வாழ்கின்றனர். யாழின் பொருளாதாரத்தில் அன்று முக்கிய பங்காளிகளாக இருந்த மக்கள் இன்று அகதிகள். இந்நிலைக்கு காரணம் யார்?
//
அடிக்கடி சிலர் இதைப்பற்றி சொல்வார்கள் ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் உறுத்திக்கொண்டே உள்ளது, அதற்க்கு சரியானவிடையை இந்த குற்றச்சாட்டை சொல்பவர்கள் சொல்வதில்லை, கேள்வி இது தான் புலிகளின் கையிலிருந்து, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து யாழ்பாணம் கை நழுவி 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதே, ஏன் இந்த 12 ஆண்டுகளிம் இஸ்லாமிய சகோதரர்கள் யாழ் திரும்பவில்லை? அப்படி திரும்புவதை தடுத்தது புலிகளா? சிங்கள அரசா? புலிகள் தடுத்த்தார்கள் எனென்றால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அரச படைகள் கட்டுப்பாட்டில் இருந்தது பொய்யா?

Admin said...

12 வருடங்களின் முன் யாழ் புலிகளின் கைகளில் இருந்து நழுவியது உண்மைதான். முஸ்லிம்கள் அதன் பின் அங்கு மீள்ச்செல்லாமைக்கு காரணம் – அரசு. அது பாதுகாப்பு மற்றும் இன்ன பிற காரணங்களினை கூறிக்கொண்டிருக்கின்றது. ஆனாலும், இதன் தொடக்கப்புள்ளி , புலிகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது, அரசாங்கம் அல்ல என்பதை புரிந்து கொள்ள் வேண்டும். பேரினவாத அரசின் நோக்கம், சமூகங்களிடையில் எப்போதும் ஒற்றுமையினமையே நிலவ வேண்டும். சிறுபான்மையினர் தமக்குள் ஒற்றுமை இன்றி இருக்கும் போதே அரசின் எண்ணம் நிறைவேறும். அதன்படி, அரசின் வேலையினை சுலபமாக்க பிள்ளையார் சுழி இட்டது – விடுதலைப் புலிகள்தான்.

Riyas said...

ம்ம்ம்ம்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் குழலி,
சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கின்ற நீங்கள் இன்னொரு சிறுபான்மை சமூகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீது தமிழ் பேரினவாத குழுவான விடுதலைப் புலிகள் நிகழ்த்திய குரூரங்களை சற்றும் கண்டு கொள்ளாமல் யாழ்ப்பாணத்தை மட்டும் முன்னிறுத்தி உரையாடிவிட்டு சென்று விட்டீர்களே? ஒவொருவருக்கும் தமது வழிப்பாட்டுத்தலம் புனிதமானது. முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமான பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த போது ஆயதம் தாங்கிய அயோக்கிய விடுதலைப் புலிகளால் மரணத்தை தழுவிய என்னுடைய சகோதரர்கள் சிந்திய ரத்தத்திற்கு என்ன பதிலை சொல்ல போகின்றீர்? குழந்தைகள் என்றும் பாராமல் கொடூரங்களை நிகழ்த்திய அயோக்கியர்களை எவ்வாறு நீங்கள் விடுதலை போராளிகள் என்று சொல்கின்றீர்கள்?

kamraj said...

Dear Sarhoon,Completely agree with your stand and appreciate your views.
Whoever did this cannot be forgiven!
I can call it as a terrorism thats at par with IM or anything of that sort as it was targeted towards a religious group.
But,can you also suggest solutions for a good relationship between lankan hindu tamils-lankan tamil muslims-sinhala muslims and sinhala buddhists!? because that would be the only way to look forward and to live in harmony!
many thanks.
with love,Kamraj

jasmin said...

யாரும் இதுவரை சொல்லாதவிடயம்களை உலக மக்களுக்கு காட்டும் நோக்கில் உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் facebook வழியாகத்தான் உங்களின் இணயதளம் சென்று பார்க்க முடிந்தது இன்றுமுதல் நானும் உங்களின் ரசிகன்

மா.குருபரன் said...

படுகொலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது தான்... அதே வகையில் சத்துருக்கொண்டான்... மட்டக்களப்பு நகர்பகுதி என முஸ்லிம்களால் செய்யப்பட்ட படுகொலைகளை பற்றியும் பதிவு எழுதலாமே. சத்துருக்கொண்டான் படுகொலை முஸ்லிம்களால் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் காத்தான்குடி படுகொலை நடந்ததாக அறிகிறேன். எல்லாத்தரப்பாலும் செய்யப்ட்ட படுகொலைகளை சொல்வதுதான் நடுநிலமையாக இருக்கும்.

Admin said...

நண்பர் குமரகுருபரன்

சத்துருக்கொண்டான் படுகொலைகள் பற்றிய முழுத்தரவுகளை தங்களால் தர முடியுமா? மட்டக்களப்பில் என்ன சம்பவம் முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டது நண்பரே!

Mohamed Faaique said...

nanri,.... intha pathivai yaar eluthuvaarhal enru paarthukkondirunthean. inruthan vaasikkum waippu kidaithathu....