Sunday, July 25, 2010

பலதும் பத்தும் II

1.   உடம்பு கொஞ்சம் சோர்ந்து போகின்ற போதே , வாழ்க்கையின் சாரங்கள், விரக்திகள் எல்லாம் வருகின்றது. புத்தருக்கு ஞானம் கிடைத்தது போல. இன்று காலையிலிருந்தே உடம்பு முக்கியமாக கால்கள் இரண்டும் இனம் பிரித்தறிய முடியா வலியால் அவதியுறுகின்றது. வேலைகள் அப்படியே கிடக்க, ஒரு வித மோன நிலையில் கிடக்கின்றேன். வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள பல அசௌகரியங்களில் இதுவும் ஒன்று. உடம்புக்கு முடியவில்லை என்றால், நாம்தான் நம்மை பார்க்க வேண்டும். வேறு யாரும் இல்லை. இவ்வாறான நிலைமைகள்தான் வீட்டினை எமக்கு நிறைய நினைவுபடுத்துவதோடு, இன்னும் பலவற்றினையும் ஞபகப்படுத்தும்.

2.    உலகில் மனிதர்களினை விட சிறந்த புத்தகங்கள் எதுவுமில்லை” என எங்கோ படித்த ஞாபகம். அது உண்மைதான். சில நாட்களுக்கு முன்பு இரவுச் சாப்பாட்டுக்காக, ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். அங்கு இரு ஊழியர்களுக்கிடையில் தர்க்கம். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. சண்டையினை விலக்க எல்லோரும் முயற்சித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் இருவரினையும் பிரித்துக்கொண்டிருக்க,ஒரு வயதான பெரியவர் மட்டும், சண்டை இட்ட இருவரினதும் வாய்களினை மாறி மாறி மூட முயற்சித்துக் கொண்டிருந்தார். எனக்கு இது வித்தியாசமாகப்பட்டது. எல்லாம் முடிந்தும் அவரது செய்கை எனக்கு பிடிபடவே இல்லை. அவரிடமே கேட்டுவிட்டேன். சிரித்தவாறே அவர் சொன்னார். “ மகனே! கையால் அடிப்பது உடல் வலியோடு போய்விடும். அதன் பின் அவர்கள் நண்பர்கள் ஆகலாம், வாய் வார்த்தைகள் வாழ்க்கை முழுவதும் சுட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் அவர்கள் வாயினை மூட முயற்சித்தேன்.” என்றார். மனிதர்கள் புத்தகங்கள்தான். நாம்தான் கண்டு கொள்வதில்லை.

3.   சிலர் பற்றி நாம் வைத்துள்ள பிம்பங்கள், அவர்களினை நேரில் காணும் போது சடாரென உடைந்து நொறுங்கி விடும் இல்லையா? அப்படித்தான் எனக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது. அது-சின்மயி. சங்கீத மகா யுத்தம் என்று ஒரு நிகழ்ச்சி சன் டீவி யில் ஒளிபரப்பாகின்றது அதில் சின்மயிதான் நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் அணிந்துவரும் ஆடைகளினை நோக்கும் போது., அப்பா.......!! அது பார்வையாளர்களின் மீதான வன்முறை என்றே நான் சொல்லுவேன். ஆடை என்பது தமக்காக மட்டும் அணிவதில்லை பிறரும் அதை ஏற்கவேண்டும். இது என்ன கோலம். நீண்ட ஹீல்ஸ் உம் இறுக்கிய ஜீன்ஸும்.. அது அணிந்தால் பரவாயில்லை. ஆனால், எனது உட வாகுக்கு என்ன அணிந்தால் நன்றாக இருக்கும் என்கிற அறிவு கூடவா இல்லை. அதோடு மேடையின் நடுவில் அம்மணி நிற்கும் முறை அதற்கும் மேல்.. எங்க ஊரில சொல்லுவாங்க.. நாறின சோற்றுக்கு வெண்டிக்காய் கறி போல.......

4.   “களவாணி” திரைப்படம் அண்மையில் நான் பார்த்த திரைப்படங்களில் என்னைக்கவர்ந்த திரைப்படம். “பசங்க” பார்த்ததன் பின் இரண்டு முறை பார்த்த படம். கஞ்சாகருப்பு வின் காமடி சூப்பர். மனிதர், அவ்விளைஞர்களிடம் சிக்கி படுகின்ற பாடு, வயிறு வலிக்க வைக்கின்றது. குடும்பத்துடன் பார்க்கலாம். அந்த கதாநாயகியும் எங்கோ பார்த்த முகம் மாதிரி இருக்கின்றது.

5.   அலுவலகத்தில் இருக்கும்போது சற்று ஓய்வு கிடைத்தால் எதையாவது எழுத ஆரம்பித்துவிடுவேன்.. இதோ இப்படி. அங்கள் அலுவலகத்தில் ஒர் பிலிப்பினி இருக்கிறாள். இப்படி நான் எதையாவது கிறுக்குவதைக் கண்டால், எனது பெண் நண்பிக்கு காதல் கடிதம் எழுதுவதாக கூறிக் கேலி பண்ணுவாள். நானும் கண்டு கொள்வதில்லை. பிலிப்பினிகளின் வாழ்க்கை முறை ஒரு வகையான கொண்டாட்ட நிலையுடன் கூடியது என்பது எனது எண்ணம். இங்கு உழைக்கும் அனைத்தினையும் இங்கேயே அழித்து முடித்துவிடுவது. அதிலும் பெண்கள்.. அப்பா.. சொல்லவே வேண்டாம்.


1 comment:

Jana said...

பலதும் பத்தும் அருமை. தங்களின் ஒவ்வொரு ஆக்கத்திலும் ஏதாவது ஒரு "ரச்சிங்" இருந்துகொண்டே உள்ளது.