Wednesday, May 26, 2010

மரணம் : வலியுடன் தனிமையையும் தரும் சாத்தான்


ழப்பென்பது எவ்வளவு கொடுமையானது. அதுவும் கண்முன்னே நடமாடித்திரிந்த , கதைபேசித்திரிந்த ஒரு ஜீவன் திடீரென காற்றில் கலந்து போவது எவ்வளவு அதிர்ச்சி தரும் விடயம். இலங்கை மக்களுக்கு இது பழக்கப்பட்ட ஒன்றென்றாலும், எனக்கு நிகழ்ந்த இது – அங்கல்ல. அதனால் அதன் பாதிப்பு நிறைய இருக்கும். உறவுகளினை விட்டு தன்மையில் இருக்கும் பொழுதுகளில் நட்பு தவிர வேறு துணை இல்லை. அதில் ஏற்படும் இழப்புகள் மிக மிக வலிமிக்கவை.

எனது முன்னறையில் அவர் இருந்தார். ஒரு மலையாளி; உயரமான தடிமனான அவரினை காணும் போது முதலில் புன்னகை பின்னர் சிறு குசல விசாரிப்புக்கள். பின் அதுவே ஒரு மெல்லிய நட்பினை படரச்செய்தது. எமக்கே உரிய “மச்சான்” ஐ உச்சரிப்பதில் அவருக்கு ஒரு அலாதி இன்பம். சத்தமாக, மச்சான் என அழைத்துக்கொண்டே சிரித்தவாறே தன் பிரசன்னத்தை பிரகடனப்படுத்துவார். வேறு பெரிதாக பேச மொழி தடையாக இருந்தாலும் மலையாளத்தில் உள்ள தமிழ் வார்த்தைகள், கொஞ்சம் உதவியது. இது ஒரு ஐந்து மாதங்களாக நடைபெறுகின்ற நாளாந்த நிகழ்வு. அனேகமாக இது எங்கள் சமையலறைக்குள் நடைபெறும். நேற்றிரவு கூட அவரை சமையல் அறையில் கண்டேன்.

இன்று அதிகாலை, எங்களது அறை அல்லோலகல்லோலப்பட்டது. ஒன்றுமில்லை, அதிகாலை, குளியலறையில் கரப்பானுக்கு குறிவைத்து , நண்பன் நீர்க்குழாயினை ஒடித்துவிட்டான். எல்லோரும் அதை அடைக்க அரை மணித்தியாலத்தினையும் கொஞ்சம் அதிகாலை தூக்கத்தினையும் செலவு செய்ய வேண்டியதாயிற்று.

கண்கள் எரிய, தூங்காத அலுப்புடன் பகலுணவுக்கு , அறைக்கு வரும்போது , என் முன்னைறையிலிருந்த அம்மனிதரின் நண்பர் – 
“ அஜித் மரிச்சுப்போயி..” என்றார். சொல்லும் போது அவரின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. அழுகையினை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தார் என்பது தெளிவாக தெரிந்தது. 
எனக்கு அதிர்ச்சி. உண்மையில் அவ்வதிர்ச்சிக்கு காரணம் – நான் நினைத்த அஜித் – நடிகர் அஜித் குமார். ஆனாலும் , சிறு குழப்பம் , பின் இவர் ஏன் கலக்கமாக் இருக்கின்றார்?

“யார்?” எனக்கேட்டேன்.

திடீரென அறைக்குள் நுழைந்தவர், ஒரு போட்டோவுடன் வந்தார். அதைப்பார்த்த கணத்தில் எனது இயக்கம் ஸ்தம்பிதமானது. அது- அவரேதான். மனைவி குழந்தையுடன் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் அவ்விடத்தில் சகிக்க முடியாத மௌனம் நிலவியது. என்னுடன் வந்த எனது அறைத்தோழர் முகத்தை பார்த்தேன். அதில் அதிர்ச்சியா , மிரட்சியா என பிரித்தறிய முடியா உணர்வொன்றினை அனுமானிக்க முடிந்தது. அவரின் பெயரினைக்கூட அறிந்து வைத்திராத எனது முட்டாள்தனத்தினை அப்போது கடிந்து கொண்டேன்.

பாதையினை கடக்க முயற்சிக்கையில் , வேகமாக வந்த கார் ஒன்று மோதியதால் ….  விபத்தினால் ஏற்படுகின்ற இழப்பு அதிர்ச்சியின் உச்சம். ஒரு சிறு பிசகு – வாழ்வினை மாற்றிப்போடுவது இதில் மட்டும்தான். பாதைய்னை கடக்க முயற்சிக்கும் இறுதிக்கணம் வரை அவர் எதையும் எதிர்பார்த்திருக்கமாட்டார். ஆனால் இப்போது….

அறையினுள் இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தோம். அது உண்மை. ஆனால் அதை ஏற்க முடியவில்லை. இரவு, கதைத்துக்கொண்டு நின்ற ஒருவர் காலையில் இறந்துவிட்டார் என்பதை எண்ணவே முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. தனிமை எங்களது அறையினை முழுதாக நிறைத்துக்கொண்டது.

இன்றும் அது தொடர்கின்றது.

செயற்கையாக சிரிப்புக்களை சிருஸ்டித்துக்கொண்டு உலவ முடிகின்றது. முன்னறையில் திடீரென புகுந்த அமைதி எங்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

இன்னும் , நாங்கள் – அவரிற்கு கிடைத்த பதவியுயர்வு பற்றி, அவரது குடும்பம் பற்றி , விபத்தான நேரத்தில் வரப்பிந்திய ஆம்புலன்ஸ் பற்றி எல்லாம் விதியின் பேரில் பேசிக்கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும் , அவரின் மரணம் தந்த தனிமையும் வலியும் விலக இன்னும் நாளாகலாம்.

2 comments:

movithan said...

மரணம் = > விடை காணமுடியாத வினா
உணர்ச்சி மிக்க ஆக்கம் .

Admin said...

நன்றிகள் நண்பரே, தொடர்ந்து இணைந்திருங்கள்